நீயா நானா போட்டியில்லை... கே.சி.ஆர். கோட்டை தெலங்கானா! | Telangana finished its polls, what is going to happen this time?

வெளியிடப்பட்ட நேரம்: 15:24 (16/04/2019)

கடைசி தொடர்பு:15:24 (16/04/2019)

நீயா நானா போட்டியில்லை... கே.சி.ஆர். கோட்டை தெலங்கானா!

வாரிசு அரசியல், கோடிகள் செலவழித்து நடத்தப்படும் யாகங்கள், ஜோதிடத்தின் மீது அதீத நம்பிக்கை என ஏகப்பட்ட பின்னடைவுகள் இருந்தாலும், இருக்கும் இருபத்தியொரு மாவட்டங்களிலும் சுனாமியாகச் சுழற்றியடிக்கிறது ’கே.சி.ஆர். அலை’. 

நீயா நானா போட்டியில்லை... கே.சி.ஆர். கோட்டை தெலங்கானா!

ந்தேகமே இல்லாமல், தெலங்கானா மாநிலம் சந்திரசேகர் ராவின் அசைக்க முடியாத கோட்டை. இன்னும் இருபது வருடங்களுக்கு, அவரைச் சரிக்க ஆட்கள் இல்லை எனும் அளவுக்கு வலுவாக இருக்கிறார். வாரிசு அரசியல், கோடிகள் செலவழித்து நடத்தப்படும் யாகங்கள், ஜோதிடத்தின் மீது அதீத நம்பிக்கை என ஏகப்பட்ட பின்னடைவுகள் இருந்தாலும், இருக்கும் இருபத்தியொரு மாவட்டங்களிலும் சுனாமியாகச் சுழற்றியடிக்கிறது `கே.சி.ஆர். அலை’. 

ஆந்திரம் மற்றும் தெலங்கானாவில் இப்போது கோலோச்சிவரும் முக்கிய அரசியல்வாதிகளில் பலர், காங்கிரஸிலிருந்து அரசியல் பயணத்தைத் தொடங்கியவர்கள். கலுவுகுண்டலா சந்திரசேகர் ராவ் என்கிற கே.சி.ஆரும் ஆரம்பகாலங்களில் காங்கிரஸ்காரர்தான். ஆனால், தனி தெலங்கானா கனவு அவரைத் தனிக்கட்சி காணவைத்தது. 2001-ம் ஆண்டு தனி தெலங்கானா என்பதை மட்டுமே ஒற்றை இலக்காக அறிவித்து தெலங்கானா ராஷ்டிரிய சமிதியை உருவாக்கினார். அடுத்த சில ஆண்டுகளுக்குள், தெலங்கானா பற்றுக்கொண்ட காங்கிரஸ் மற்றும் தெலுங்குதேசம் தலைவர்கள் பலரை, டி.ஆர்.எஸ் கட்சியில் இணைத்தார். 

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்

அடுத்தடுத்த ஆண்டுகளில், சின்னச் சின்ன அரசியல் வெற்றிகள்மூலம் தெலங்கானாவில் தன்னிகரில்லாத் தலைவராக உருவானார் ராவ். 1970-களில் பற்றியெரிந்து 1990-களில் நீர்த்துப்போன தனி தெலங்கானா கோரிக்கையை, மீண்டும் அரசியலரங்குக்கு இழுத்து வந்த பெருமை ராவையே பெருமளவு சேரும். இறப்பின் விளிம்புக்கே இழுத்துச்சென்ற நீண்ட உண்ணாவிரதத்தின் மூலம், தனி தெலங்கானாவை அடைந்துவிட்டுத்தான் அடங்கினார், அவர். ``ராவின் உடல்நிலை மோசமானதே நாங்கள் தனி தெலங்கானா அமைக்கக் காரணம்” என்று அப்போது அறிவித்தார், முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ். அந்த உலகப்புகழ் உண்ணாவிரதமே, கே.சி.ஆரைக் காக்கும் கேடயமாக இப்போதுவரை நீடிக்கிறது. தனி தெலங்கானா சாத்தியமானதில் காங்கிரஸுக்குக் கணிசமான பங்குண்டு என்றாலும், அதைவைத்து காங்கிரஸ் எந்தப் பலனும் அடைந்துவிட முடியாதபடி அரசியல் செய்வதில் வல்லவர் ராவ். அவ்வளவு பெரிய கோரிக்கையை நிறைவேற்றியும், தெலங்கானாவில் உதிரி வெற்றிகளை மட்டுமே காங்கிரஸ் பெறுவது ஏன் என்பதை யோசித்தால், ராவின் அரசியல் அறிவை வியக்காமல் இருக்க முடியாது. 

அனைவரும் அறிந்ததே... 2014-ம் ஆண்டு தெலங்கானா மாநிலம் அமைந்தது. அதே ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், 63 இடங்கள் பெற்று ஆட்சியில் அமர்ந்தார் சந்திரசேகர் ராவ். அப்போதைய நாடாளுமன்றத் தேர்தலிலும், ராவுக்கே அதிக தொகுதிகள் கிடைத்தன. மொத்தம் 10 தொகுதிகள். அந்தத் தருணங்களில், சந்திரசேகர் ராவைத் தனிப்பட்ட முறையில் தாக்கி ஆந்திரப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. அதில், அவதூறுகளும் அநேகம். `சந்திரசேகர் ராவ் நல்ல பேச்சாளர் மட்டுமே. ஆட்சி நிர்வாகம் செய்யும் அளவுக்கு அவருக்கு அறிவில்லை’ என்று தாக்கினார்கள். `தெலங்கானா பெருமை பேசும் சந்திரசேகர் தெலங்கானாக்காரரே அல்ல, ஆந்திராவின் விஜயநகரத்தில் பிறந்தவர்’ என்றும் கிளப்பிவிட்டார்கள். 

`ஆந்திரநேயத்தை மனதிலிருந்து தூக்கியெறியுங்கள். தெலங்கானா பெருமையைச் சூடிக்கொள்ளுங்கள்’ என்ற முழக்கத்தின் மூலம் நிலை நின்றவருக்கு, அத்தகைய அவதூறுகள் பெரிய தலைவலியாக அமைந்தன. சட்டமன்றக் கூட்டத்தொடர் ஒன்றில், `கே.சி.ஆர் என்றால் அவ்வளவு கேவலமா உங்களுக்கு’ என்று வெளிப்படையாகவே கொதித்தார். ஆனால், அடுத்த நான்காண்டுகள் நல்லாட்சி தந்ததன் வழியாக, விமர்சனங்களையும் வீண் அவதூறுகளையும் கடந்துவந்து சாதித்தார் சந்திரசேகர் ராவ்.

`நீலு, நிதுலு, நியமிக்கலு (நீர், நிதி, நியமனம்) என்பது, சந்திரசேகர் ராவின் முக்கிய முழக்கங்களில் ஒன்று. ஆட்சியில் அமர்ந்ததும், தெலங்கானாவின் கடைக்கோடி கிராமங்கள் வரைக்கும் தங்குத்தடையில்லாத நீர்ப்பாதையை உருவாக்கிக் காட்டினார் ராவ். கூடவே, மின்சாரப் பற்றாக்குறையையும் சரி செய்தார். இந்தியாவின் இளைய குழந்தையான தெலங்கானா, இப்போது தொழில்வளர்ச்சியில் அசுரப் பாய்ச்சல் காட்டுவதற்கு, ராவின் அணுகுமுறையே காரணம். தொழில் தொடங்க விரும்பும் நிறுவனங்களுக்கு, 15 நாள்களுக்குள் அனுமதி வழங்கும் அளவுக்கு நிர்வாகத்தை நீரோடைபோலச் சீராக்கியிருக்கிறார். 

பெண்களைப் பாதுகாக்க பெண் காவலர்களால் மட்டுமே ஆன `ஷீ டீம் (She - Team) அமைத்தது, முன்னுதாரணத் திட்டங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. கைவசம் ஹைதராபாத்தை வைத்துக்கொண்டு தகவல் தொழில்நுட்பத்தில் சும்மாயிருக்க முடியுமா என்ன? ஐடி சார்ந்த தொழில் முனைவோர்களைப் பெருக்க ராவ் உருவாக்கிய `டி - ஹப்’, அசத்தலான பணிகளைச் செய்துவருகிறது. சந்திரபாபு நாயுடுவைப்போலத் தொழில் வளர்ச்சியை மட்டுமே கட்டிக்கொண்டு அழாமல், விவசாயிகளுக்கு நேரடியாகப் பணப்பயன்கள் சென்று சேர்வதையும் உறுதிப்படுத்தியிருக்கிறார் ராவ். நம்மூர் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்கூட அதை வெகுவாகப் பாராட்டியது நினைவிருக்கலாம். இதனாலேயே, தெலங்கானாவின் தேவுடுவாக உருமாறி நிற்கிறார் ராவ். கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், டி.ஆர்.எஸ் பெற்ற இடங்கள் 100. கிட்டத்தட்ட 90 சதவிகித இடங்கள். 

இதோ, இப்போது வாக்குப்பதிவு (63 சதவிகிதம்) முடிந்திருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும் சந்திரசேகர் ராவுக்குப் பெருவெற்றி காத்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன. போட்டியிட்ட தொகுதிகளில் (17 தொகுதிகள்) பெரும்பாலானவற்றில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி வெற்றிக் கொடி நாட்டும் என்கிறது நிலவரம். அதில், ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித்தலைவர் அசாதுதீன் ஓவைசி போட்டியிடும் ஹைதராபாத்தும் அடக்கம். இதற்கு, தேர்தல் பிரசாரத்தில் பெரிதாக அலட்டிக்கொள்ளவே இல்லை கே.சி.ஆர்.

இன்னொரு பக்கம், `தெலங்கானாவில் 6 தொகுதிகள்வரை வெல்வோம்’ என்று சொல்லி வருகிறார்கள் காங்கிரஸ்காரர்கள். வாக்குப்பதிவுக்கு முன்பு 10 தொகுதிகள் என்று சொன்னார்கள். ஆனால், வாக்குப்பதிவுக்குப் பிறகு அந்த எண்ணிக்கை 6 ஆக குறைந்துவிட்டது. ஏற்றாலும் ஏற்காவிட்டாலும், தெலங்கானாவில் டி.ஆர்.எஸ் கட்சிக்கு அடுத்தபடியாக கொஞ்சமேனும் வாக்குவங்கி வைத்திருக்கும் கட்சி காங்கிரஸ்தான். ஆந்திராவில் வீசும் `எதிர்ப்பு அலை’ என்ற இம்சை, தெலங்கானாவில் அவர்களுக்கு இல்லை. ஆனால், சந்திரசேகர் ராவுக்கு இணையாக முன்னிறுத்த ஒரு தலைவர் இல்லை என்பதால், காங்கிரஸின் அவலநிலை தொடர்கிறது. இந்த முறை, கம்மம், மல்காஜ்கிரி, மஹபூபாபாத், நால்கொண்டா, செவாலா போன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கடினமான போட்டியை அளிக்கும் என்கிறார்கள். இதில், கம்மம் கன்ஃபார்ம். ஏனென்றால், அங்கே, முன்னாள் அமைச்சர் ரேணுகா தேவி போட்டியிடுகிறார். வலுவான வேட்பாளர் அவர். பூத் கமிட்டி அமைப்பதுமுதல் வேட்பாளர் தேர்வுவரை காங்கிரஸ் சொதப்பிய சொதப்புக்கு, ஆறு கிடைத்தாலே அதிகம்தான். அதுவும் கிடைக்கவில்லை என்றால், கம்மத்தை மட்டும்வைத்து ஆறுதல் பட்டுக்கொள்ள வேண்டியதுதான். 

அதிசயிக்கத்தக்க வகையில், தெலங்கானாவில் பி.ஜே.பி. அடித்தளம் கொண்டுவருவதாகத் தகவல்கள் வருகின்றன. இன்னும் சில ஆண்டுகளில் காங்கிரஸ் இப்போது வைத்திருக்கும் வாக்குவங்கியை பி.ஜே.பி. நிகர் செய்தாலும் ஆச்சர்யமில்லை. இந்தத் தேர்தலில், 4 தொகுதிகளுக்கு அடிபோடுகிறார்கள். அதில், இரண்டு நிச்சயம் என்கிறார்கள். செகந்திராபாத், மெஹபூப் நகர் ஆகிய தொகுதிகளே அவை. செகந்திராபாத் ஏற்கெனவே பி.ஜே.பி. ஆழ வேரூன்றியிருக்கும் தொகுதி. அதாவது, தமிழ்நாட்டின் கன்னியாகுமரிபோல. அங்கே அவர்களின் வெற்றி உறுதி என்றே சொல்கிறார்கள். மெஹ்பூப் நகரில், காங்கிரஸிலிருந்து கடைசிநேரத்தில் கட்சி மாறிய டி.கே. அருணாவைக் களமிறக்கியிருக்கிறார்கள். தொகுதியில் நன்கு அறிமுகமான முகம் என்பதால், அருணாவுக்கு வெற்றிபெறுவதில் சிக்கல் எதுவும் இருக்காது என்றே சொல்கிறார்கள். 

அடிப்படையில், ஆந்திரமும் தெலங்கானாவும் புராணங்களைப் போற்றும் பூமி. ஆனாலும், இந்துக்களும் இஸ்லாமியர்களும் சகோதரத்துவத்துடன் வாழும் பூமியும்கூட. ஹைதராபாத்தே அதற்கு உதாரணம். ஆனால், அங்கு புதிதாக, `இந்து - முஸ்லிம்’ வேறுபாட்டை வைத்து அரசியல் செய்ய ஆரம்பித்திருக்கிறது பி.ஜே.பி. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, `நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஹைதராபாத் நகரின் பெயரை பாக்யா நகர் என மாற்றுவோம்’ என்று பேசிச் சென்றார், யோகி ஆதித்யதாநாத். இப்போது, அசாதுதீன் ஓவைசியின் ஆதரவாளர்களை `ரஸாக்கர்ஸ்’ என்று விமர்சித்து, அரசியல் களத்தை தகிக்க வைத்திருக்கிறார், பி.ஜே.பி. தேசியத் தலைவர் அமித் ஷா. ஹைதராபாத் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட நேரத்தில், நிஜாமுக்கு ஆதரவாகக் களமிறங்கிய படைவீரர்களையே `ரஸாக்கர்ஸ்’ என்பார்கள். அப்படிப்பட்டவர்களோடு ஓவைசி ஆதரவாளர்களை ஒப்பட்டுப் பேசி, உ.பி. பாணி அரசியலை தெலங்கானாவுக்கும் இறக்குமதி செய்திருக்கிறார்கள். இது எங்கே கொண்டுபோய்விடுமோ?!

அதுவும், `மோடி பாகிஸ்தானுக்கு பதிலடி தந்தார். அப்படி சந்திரசேகர் ராவ் தருவாரா’ என்று அமித் ஷா பேசியதை, எந்தக் கணக்கில் சேர்ப்பதென்றே தெரியவில்லை. இந்தியாவில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கும் சந்திரசேகர் ராவ், பாகிஸ்தானுக்கு எதற்குப் பதிலடி தரவேண்டுமோ?! ஒருவேளை, சந்திரசேகர் ராவின் பிரதமர் கனவினை அறிந்து அப்படிப் பேசினாரோ என்னவோ? ஆனால், மூன்றாம் அணி முயற்சியை மூன்று மாதங்களுக்கு முன்னாலேயே தூக்கி வீசிவிட்டார் ராவ். அதற்குரிய வகையில் களம் அமையவில்லை என்பதே அதற்குக் காரணம். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சட்டை செய்யாததும், மேற்கு வங்க முதல்வர் மம்தாவும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் மதிக்காததும்கூட இன்னொரு காரணம். 

பெரும்பான்மையை எட்ட முடியாதபட்சத்தில் பி.ஜே.பி. செயல்படுத்தவிருக்கும் `பிளான் பி’ திட்டத்தில், சந்திரசேகர் ராவும் அடங்கியிருக்கிறார் என்று சொல்கிறார்கள். இது, இன்னும் நேரடியாக உறுதியாகவில்லை. ஆனால், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகனுக்கு மறைமுகமாக ராவ் செய்துவரும் உதவிகள், அதை மறைமுகமாக உறுதிப்படுத்துகின்றன. ஏனென்றால், பி.ஜே.பி. ஆதரவு மனநிலையில் இருக்கும் தென்னிந்தியத் தலைவர்களில் முக்கியமானவர் ஜெகன். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிர்நிலை எடுக்கிறேன் பேர்வழி என்று, மோடியை பிரதமராக்கத் துடிக்கும் படைவீரர்களில் ஒருவராக ராவ் மாறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலில் காலம் தள்ளுபவர் என்பதால், அதற்கு வாய்ப்பும் இருக்கிறது. ஓவைசி மட்டும்தான் ஒரே தடைக்கல். அதே சமயம், ஓவைசி சந்திரசேகர் ராவ் சொல்லுக்கு மறுசொல் பேசாதவரும்கூட. 

கே.சி.ஆரின் கேம்பிளான் என்னவாக இருக்கப்போகிறது என்பது, மே 23-க்குப் பிறகு தெரிந்துவிடும்!


டிரெண்டிங் @ விகடன்