விவசாயம் முதல் காஷ்மீர் வரை.. என்ன சொல்கின்றன பி.ஜே.பி, காங்கிரஸ் தேர்தல் அறிக்கைகள்? #VikatanInfographics | The comparision of BJP and Congress manifestos

வெளியிடப்பட்ட நேரம்: 11:31 (16/04/2019)

கடைசி தொடர்பு:11:31 (16/04/2019)

விவசாயம் முதல் காஷ்மீர் வரை.. என்ன சொல்கின்றன பி.ஜே.பி, காங்கிரஸ் தேர்தல் அறிக்கைகள்? #VikatanInfographics

தற்போதைய நாடாளுமன்றத் தேர்தலுக்காக, இரண்டு கட்சிகளும் தங்கள் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளன. காங்கிரஸ் முதலில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. ஒரு வாரத்திற்குப் பிறகு, பி.ஜே.பி தேர்தல் அறிக்கையை முதல் கட்டத் தேர்தலுக்கு இரண்டு நாள்களுக்கு முன் வெளியிட்டது.

விவசாயம் முதல் காஷ்மீர் வரை.. என்ன சொல்கின்றன பி.ஜே.பி, காங்கிரஸ் தேர்தல் அறிக்கைகள்? #VikatanInfographics

ந்து ஆண்டுகளுக்குப் பிறகு, நாடாளுமன்றத்திலிருந்து இறங்கி வந்து, வாக்காளர்களின் வீட்டுக் கதவுகளைத் தட்டிக்கொண்டிருக்கிறார்கள், அரசியல்வாதிகள். தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாள்களே எஞ்சியுள்ளன. இறுதிக்கட்டத் தேர்தல் பிரசாரப் பணிகளில் அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன. இந்தியாவின் வரலாறு, கடந்த 20 ஆண்டுகளாக, காங்கிரஸ் கட்சிக்கும், பி.ஜே.பி-க்கும் இடையிலான போட்டியாகவே இருந்து வந்திருக்கிறது.

தற்போதைய நாடாளுமன்றத் தேர்தலுக்காக, இரண்டு கட்சிகளும் தங்கள் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளன. காங்கிரஸ் முதலில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. ஒருவாரத்துக்குப் பிறகு, பி.ஜே.பி தேர்தல் அறிக்கையை முதல்கட்டத் தேர்தலுக்கு இரண்டு நாள்களுக்கு முன் வெளியிட்டது. 

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் அட்டைப்படத்தில், இந்திய மக்கள் பின்னணியில், `காங்கிரஸ் நிச்சயமாக வழங்கும்' (Congress will deliver) எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. பி.ஜே.பி தேர்தல் அறிக்கையில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் மட்டும் அட்டைப்படமாக வெளியிடப்பட்டிருந்தது. பி.ஜே.பி-யின் அறிக்கை, `சங்கல்ப் பத்ரா' என்று பெயரிடப்பட்டுள்ளது. `சங்கல்ப் பத்ரா' என்பதற்கு, `தீர்மானப் பத்திரம்' என்று பொருள்.

பி.ஜே.பி காங்கிரஸ் அறிக்கை

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ராகுல் காந்தியின் முன்னுரையோடு தொடங்க, பி.ஜே.பி அறிக்கையில் பிரதமர் மோடி, பி.ஜே.பி. தேசியத் தலைவர் அமித் ஷா, தேர்தல் அறிக்கையைத் தயார் செய்யும் குழுவின் தலைவராக இருந்த ராஜ்நாத் சிங் ஆகியோரின் கருத்துரைகள் இடம்பெற்றுள்ளன. இரண்டு கட்சிகளும் விவசாயம், வேலைவாய்ப்பு, தேசியப் பாதுகாப்பு ஆகிய துறைகளுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளன.

கடந்த ஐந்து ஆண்டுகளில், பி.ஜே.பி ஆட்சியில் பொருளாதாரம் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகக் கூறும் காங்கிரஸ், தன் அறிக்கையில் பொருளாதாரச் சீர்திருத்தத்தை அதிகளவில் முன்வைத்துள்ளது. `புதிய இந்தியா படைப்போம்' என்ற முழக்கத்துடன், பி.ஜே.பி இந்திய தேசியப் பாதுகாப்பைப் பிரதானமாக முன்வைத்துள்ளது.

விவசாயம், வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், சமூக நலன், பெண்கள் நலன், காஷ்மீர் பிரச்னை முதலானவற்றில் இரண்டு கட்சிகளும் தங்கள் நிலைப்பாடுகளையும், முன்னேற்றத்துக்காக முன்வைக்கும் யோசனைகளையும் வாக்குறுதிகளில் கூறியுள்ளன. 

தேர்தல் அறிக்கை

பல ஆண்டுகளாக `மந்திர் வஹீ பனேங்கே' என்று ராமர் கோயில் கட்டுவதாக வாக்குறுதி அளித்து வரும் பி.ஜே.பி., தற்போதைய தேர்தல் அறிக்கையிலும், `சட்ட வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு, அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும்' எனக் கூறியுள்ளது. மேலும், சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக, `மக்களின் நம்பிக்கையும், பண்பாடும் காக்கப்படும்' எனக் கூறியுள்ளது. 2014-ம் ஆண்டின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்று, நிறைவேற்றப்படாமல் போன `பொது சிவில் சட்டம்', இந்த முறை நிறைவேற்றப்படும் எனக் கூறியுள்ளது பி.ஜே.பி.

எனினும், 2014-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் இடம்பெற்று, நிறைவேற்றப்படாத பல வாக்குறுதிகள் தற்போதைய வாக்குறுதியில் இடம்பெறவில்லை. '2019-க்குள் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 6 சதவிகித பட்ஜெட், கல்விக்காக ஒதுக்கப்படும்' எனக் கூறியது பி.ஜே.பி-யின் 2014 தேர்தல் அறிக்கை. தற்போது இந்த வாக்குறுதியை, காங்கிரஸ் '2023-க்குள் நிறைவேற்றப்படும்' என அறிவித்துள்ளது.

2014 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில், பி.ஜே.பி இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் பெண்களுக்குத் தனி தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனங்கள் அமைக்கப்படும் எனக் கூறியது. அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றபோதும், தற்போதைய அறிக்கையில் இடம்பெறவில்லை. 

பிஜேபி அறிக்கை

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை, ரபேல் விவகாரத்தை விசாரணை செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளது. இந்தியாவின் மக்கள்தொகையில், வறுமையில் வாடும் 20 சதவிகித ஏழை மக்களுக்கு ஆண்டுதோறும் 72,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்ற வாக்குறுதி, காங்கிரஸ் அறிக்கையில் வாக்குகளைக் கவரும் மிகப்பெரிய திட்டமாகப் பார்க்கப்படுகிறது.

உள்நாட்டுப் பிரச்னைகளில் இரு கட்சிகளுக்கும் எவ்வளவு சண்டையிருந்தாலும், வேறுபாடுகள் இருந்தாலும், வெளிநாட்டு முதலாளிகளை ஈர்க்க இரு கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டில் தெளிவாக நிற்கின்றன. அது, `வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் நடத்துவது எளிமையாக்கப்படும். கார்ப்பரேட் நிறுவனங்கள் எளிதாகத் தொழில் நடத்தச் சட்டங்கள் உருவாக்கப்படும்' என்பதே! 

பி.ஜே.பி, காங்கிரஸ் தேர்தல் அறிக்கைகளை ஒப்பிடுகையில், காங்கிரஸ் அறிக்கை பெண்கள், பட்டியல் சாதியினர், பழங்குடியினர், மதச் சிறுபான்மையினர், மொழிச் சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள், பால்புதுமையினர் ஆகிய அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டியது.

காங்கிரஸ் அறிக்கை

தேர்தல் வாக்குறுதிகள், கடந்த காலங்களில், எப்போதும் முழுமையாக நிறைவேற்றப்பட்டதில்லை. தேர்தல்கள் முடிந்தவுடன் காலாவதியாகும் அறிக்கைகளாகவே வாக்குறுதிகள், சுதந்திர இந்தியாவின் வரலாறு முழுவதும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த முறை, வெற்றி பெறுவது எந்தக் கட்சியாக இருந்தாலும், அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய நாட்டின் முன்னேற்றத்துக்கு வழி செய்யட்டும். தேர்தல் வாக்குறுதிகள் மீதும், தேர்தல் கட்சிகள் மீதும், இன்னும் இந்தியத் தேர்தல்கள் மீதும் சாமான்ய மக்களின் நம்பிக்கை நீங்காமல் இருக்க அது மட்டுமே உதவும்.


டிரெண்டிங் @ விகடன்