`75 லட்சம் கொடுங்க அல்லது என் கிட்னியை விற்பேன்!’ - தேர்தல் கமிஷனுக்கு ஷாக் கொடுத்த வேட்பாளர் | Give me Rs 75 lakh or permit me to sell kidney, says candidate

வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (16/04/2019)

கடைசி தொடர்பு:15:15 (16/04/2019)

`75 லட்சம் கொடுங்க அல்லது என் கிட்னியை விற்பேன்!’ - தேர்தல் கமிஷனுக்கு ஷாக் கொடுத்த வேட்பாளர்

``என்னோட தேர்தல் செலவுக்கு 75 லட்சம் கொடுங்க, இல்லைன்னா என்னோட சிறுநீரகத்தை விற்பதற்கு அனுமதி கொடுங்க!" என தேர்தல் கமிஷனை அதிர வைத்திருக்கிறார் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு சுயேச்சை வேட்பாளர்.

 

கிஷோர் சம்ரித்

கிஷோர் சம்ரித் என்பவர், மத்தியப் பிரதேச மாநிலம், பாலகாட் பாராளுமன்றத் தொகுதியில் சுயேச்சையாகக் களமிறங்கியுள்ளார். இதற்கு முன்னர் சமாஜ்வாடி கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிட்டுள்ளபோது இவருக்கான தேர்தல் செலவுகளை கட்சியே பார்த்துக்கொண்டது. தற்போது இவருக்கான தேர்தல் செலவுகளை இவரே பார்த்துக்கொள்ள வேண்டியுள்ளது.

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவுக்கு அதிகபட்ச வரம்பாக 75 லட்சம் ரூபாயை தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது. சுயேச்சை வேட்பாளரான இவரால் அவ்வளவு தொகை செலவழிக்க முடியாததால் இதுகுறித்து தேர்தல் கமிஷனுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ``நீங்கள் நிர்ணயித்துள்ள அதிகபட்ச தேர்தல் செலவு வரம்பான 75 லட்சம் வரை செலவழிப்பதற்கு பண வசதி இல்லை. ஆனால், எனக்கு எதிராகப் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் லஞ்சத்தின்மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்து செலவழிக்கிறார்கள். எனவே, எனது தேர்தல் செலவுக்கு நீங்கள் 75 லட்சம் ரூபாயை அளிக்க வேண்டும். அல்லது எனது சிறுநீரகத்தை விற்று பணம் திரட்டுவதற்கு அனுமதிக்க வேண்டும்." என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கிஷோர் சம்ரித்

இவர் ஏற்கெனவே ராகுல் காந்தி மீது வீண் பழி சுமத்தி வழக்கு தொடுத்ததால் உச்ச நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

loading...