`சபரிமலை தீர்ப்பால்தான் இது விசாரிக்கப்படுகிறது!’ - மசூதியில் பெண்களை அனுமதிக்கக்கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் | Supreme Court To Hear Plea On Women In Mosques

வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (16/04/2019)

கடைசி தொடர்பு:14:50 (16/04/2019)

`சபரிமலை தீர்ப்பால்தான் இது விசாரிக்கப்படுகிறது!’ - மசூதியில் பெண்களை அனுமதிக்கக்கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம்

கேரளாவில் உள்ள சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என கடந்த வருடம் செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்புக்கு பலத்த எதிர்ப்பு இருந்தாலும் அதை மீறி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பெண்கள் பாதுகாப்பாக கோயிலுக்குச் செல்ல ஏற்பாடுகள் செய்திருந்தார். இதையடுத்து பிந்து, கனக துர்கா என்ற இரண்டு பெண்கள்  கோயிலுக்குள் சென்றனர். 

 

சபரிமலை

சபரிமலை தீர்ப்பை உதாரணமாக வைத்து மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த யாஷ்மீஜ் (Yasmeej ) மற்றும் ஜபூர் அஹமது பீர்ஷேட் (Zuber Ahmed Peerzade) என்ற தம்பதி, `இஸ்லாமிய பெண்களை மசூதிக்குள் அனுமதிக்க வேண்டும்' என உச்சநீதிமன்றத்தில் நேற்று மனுத் தாக்கல் செய்தனர். பெண்கள் மசூதிக்குச் செல்வதை தடுப்பதன் மூலம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்  14, 15, 21, 25 மற்றும் 29-ன் விதிமுறைகளை மீறுவதாகும் என்றும் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் வேறுபாடு இல்லை. எனவே, பெண்கள் மசூதிக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என தங்களின் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்ற நீதிபதி அப்துல் நஸீர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள் வழக்கு தொடர்ந்த தம்பதியிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர். அவர்களின் பதிகளில் திருப்தி அடையாத நீதிபதிகள், ``மசூதி, கோயில், தேவாலயம் போன்றவை பொதுவானவை. அங்கே நிச்சயம் சமத்துவம் கடைப்பிடிக்கப்படும். சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் காரணத்தினால் மட்டுமே தற்போது இந்த வழக்கும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது’ எனக் கூறி இது தொடர்பாக மத்திய அரசு, மத்திய வக்பு கவுன்சில் மற்றும் அனைத்து இந்திய முஸ்லிம் வாரியம் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.