`நடத்தை விதிக்கெல்லாம் கட்டுப்பட முடியாது!' - தேர்தல் ஆணையத்துக்கு சிவசேனா பகிரங்க சவால் | To hell with model code of conduct, says Shiv Sena's Sanjay Raut

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (16/04/2019)

கடைசி தொடர்பு:18:00 (16/04/2019)

`நடத்தை விதிக்கெல்லாம் கட்டுப்பட முடியாது!' - தேர்தல் ஆணையத்துக்கு சிவசேனா பகிரங்க சவால்

"தேர்தல் நடத்தை விதிக்கெல்லாம் கட்டுப்பட முடியாது. எங்கள் மனத்தில் என்ன தோன்றுகிறதோ அதைப் பேசுவோம்" எனத் தேர்தல் ஆணையத்துக்கு பா.ஜ.க கூட்டணிக் கட்சியான சிவசேனா பகிரங்கமாக சவால் விடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

சஞ்சய் ராவத்

அதிரடியான மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடுவதில் பெயர் பெற்றவர், சஞ்சய் ராவத். சிவசேனா மாநிலங்களவை எம்.பி-யான இவர், அவரது கட்சிப் பத்திரிகையான 'சாம்னா'வின் நிர்வாக ஆசிரியராகவும் இருக்கிறார். 

இந்த நிலையில்,  நாடாளுமன்றத் தேர்தலில்,  பீகார் மாநிலத்தின் பெகுசராய் தொகுதியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க முன்னாள் தலைவர் கன்னையாகுமாரைத் தோற்கடிக்க வேண்டும் என வலியுறுத்தி,  'சாம்னா' பத்திரிகையில் சமீபத்தில் தலையங்கம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், " கன்னையா குமார் ஒரு விஷம். அவரைக் கட்டாயமாக நாடாளுமன்றத்துக்குள் விடக் கூடாது. எனவே, பா.ஜ.க வாக்குப்பதிவு எந்திரத்தில் குளறுபடி செய்தாவது அவரைத் தோற்கடிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார். 

இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து,  தேர்தல் நடத்தை விதி மீறப்பட்டு உள்ளதாகக் கூறி, சஞ்சய் ராவத்துக்கு தேர்தல் ஆணையம்  நோட்டீஸ் அனுப்பியது. அதில், சஞ்சய் ராவத்தின் கருத்து, வாக்குப்பதிவு எந்திரங்கள் மீதான நம்பிக்கையைக் குறைக்கும் விதமாகவும், தேர்தல் நடைமுறையை நாசமாக்குவதுபோலும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சஞ்சய் மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார். மும்பையில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய அவர், " தேர்தல் நடத்தை விதிமுறைகளெல்லாம் எங்களைக் கட்டுப்படுத்தாது. எங்கள் மனத்தில் என்ன தோன்றுகிறதோ, அதை நாங்கள் பேசுவோம். 

தேர்தல் ஆணையம்

எப்போதும் சட்டம் ஒழுங்கு பிரச்னை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் நடத்தை விதிகளையே எப்போதும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். எங்களைப் பொறுத்தவரை, நாங்கள் சட்டத்துக்கு கட்டுப்பட மாட்டோம். நாங்கள் என்ன நினைக்கிறோமோ அதைத்தான் செய்வோம். தேர்தல் நடத்தை விதி முறையை வைத்துக்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதும் எங்களுக்குத் தெரியும். எங்கள் மனத்திலும் இதயத்திலும் இருப்பதை எங்களால் வெளியில் சொல்ல முடியாமல் போனால், எங்களுக்கு மூச்சு முட்டிவிடும். 

தேர்தல் நடத்தை விதி முறைகளையும், சட்ட விதிகளையும்  காட்டி எங்களை யாராவது தொடர்ந்து அச்சுறுத்த முயன்றால், எங்கள் ரத்தம் கொதிக்கும். நாங்கள் இப்படித்தான் இருப்போம். எங்களால் எதுவும் செய்ய முடியாது. சட்ட விதிகளையெல்லாம் நாங்கள் அவ்வளவாகக் கண்டுகொள்ள மாட்டோம். தேர்தல் நடத்தை விதி முறைகளுக்குக் கட்டுப்பட வேண்டும் எனத் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தால், அப்பொழுதுதான் நாங்கள் இன்னும் அதிகமான தவறுகளைச் செய்வோம்" என்று கூறினார். 

மகாராஷ்டிராவில் பி.ஜே.பி - சிவசேனா இடையே நீண்டகால கூட்டணி இருந்துவருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், அவ்வப்போது மோடியையும் பா.ஜ.க-வையும் சிவசேனா விமர்சித்து வந்தபோதிலும், தேர்தல் என்று வந்தால் இரு கட்சிகளும் விமர்சனங்களை மறந்து கூட்டணி வைத்துக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.   

நீங்க எப்படி பீல் பண்றீங்க