சமாஜ்வாதிக் கட்சியில் இணைந்த சத்ருகன் சின்ஹாவின் மனைவி! - ராஜ்நாத் சிங்கை எதிர்த்துப் போட்டி? | shatrughan sinha's wife poonam joins samajwati party

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (16/04/2019)

கடைசி தொடர்பு:18:40 (16/04/2019)

சமாஜ்வாதிக் கட்சியில் இணைந்த சத்ருகன் சின்ஹாவின் மனைவி! - ராஜ்நாத் சிங்கை எதிர்த்துப் போட்டி?

நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மனைவி பூணம் சின்ஹா, இன்று, சமாஜ்வாதிக் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவின் முன்னிலையில் இன்று கட்சியில் இணைந்தார். இதுகுறித்த செய்திக்குறிப்பு, சமாஜ்வாதிக் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவர் உத்தரப்பிரதேசத்தில் லக்னோ தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை எதிர்த்து போட்டியிடுவார் எனத் தெரிகிறது. வரும் ஏப்ரல் 18ல் வேட்புமனுத்தாக்கல் செய்யவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 

பூணம் யாதவ்

சத்ருகன் சின்ஹா, இம்மாதம் ஆறாம் தேதியன்று பா.ஜ.கவிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். அடுத்த பத்தாவது நாளில் அவரது மனைவி பூணம் சின்ஹா சமாஜ்வாதிக் கட்சியில் இணைந்துள்ளார். சத்ருகன் சின்ஹா ஏற்கனவே இருமுறை மத்திய அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர். ஆனால் பூணம் சின்ஹா தற்போது தான் அரசியலில் அடியெடுத்து வைக்கிறார். முதன்முறையே பா.ஜ.கவின் முக்கிய அமைச்சரை எதிர்த்து போட்டியிடப்போவதால் இவரது அரசியல் பிரவேசம் பரபரப்பாகப் பார்க்கப்படுகிறது. 

சத்ருகன் சின்ஹா

முன்னதாக, காங்கிரஸில் இணைந்த சத்ருகன் சின்ஹா, பீகார் மாநிலம் பாட்னாவில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை எதிர்த்துக் களமிறக்கப்பட்டுள்ளார். சினிமா பிரபலங்களான கணவன், மனைவி இருவருமே அடுத்தடுத்து இருவேறு கட்சிகளில் தங்களை இணைத்துக்கொண்டு, இரண்டு மத்திய அமைச்சர்களை எதிர்த்து போட்டியிடுவதற்கான வாய்ப்பையும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.