`போலீஸாரின் உணவுக்கு மட்டும் 3.18 கோடி ரூபாய்' - சபரிமலை பாதுகாப்புக்காக கேரள அரசு செலவிட்ட தொகை! | kerala government spent 16 crore rupees for sabarimala protection

வெளியிடப்பட்ட நேரம்: 18:46 (16/04/2019)

கடைசி தொடர்பு:19:28 (16/04/2019)

`போலீஸாரின் உணவுக்கு மட்டும் 3.18 கோடி ரூபாய்' - சபரிமலை பாதுகாப்புக்காக கேரள அரசு செலவிட்ட தொகை!

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ல் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க மற்றும் சங்க் பரிவார் அமைப்புகள் உள்ளிட்டவை கேரளா முழுவதும் போராட்டம் நடத்தின. பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு சபரிமலையில் பெண்கள் செல்ல வழிவகை செய்தது. அதேபோல், சபரிமலையில் வழிபட முயன்ற பெண்களுக்கு எதிராக சரணகோஷ போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டங்களின்போது நடைபெற்ற வன்முறைகள் தொடர்பாகப் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கூடவே கலவரம் வெடிக்காமல் இருக்க அதிக அளவு போலீஸார் குவிக்கப்பட்டனர். 

சபரிமலை

இதற்கிடையே, இந்த பிரச்னை ஏற்பட்டபோது சபரிமலையில் நிறுத்தப்பட்ட போலீஸின் எண்ணிக்கை எத்தனை, அவர்களுக்குச் செலவிடப்பட்ட தொகை எத்தனை என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளன. கோழிக்கோட்டைச் சேர்ந்த அகிலபாபு என்பவர் ஆர்.டி.ஐ மூலம் தகவல் கோரியிருந்த நிலையில் அதற்குக் கேரள அரசு தற்போது பதிலளித்துள்ளது.

அதன்படி, மண்டல பூஜையின்போது நான்கு டீம்களாக சுமார் 12,000 காவலர்கள் பாதுகாப்புக்காக சபரிமலையில் நிறுத்தப்பட்டனர். இவர்களில் 10 பேர் டி.ஐ.ஜி ரேங்கில் உள்ளவர்கள், 42 பேர் எஸ்.பி, 300-க்கும் அதிகமானோர் சி.ஏ போலீஸ் அதிகாரிகள், 700-க்கும் மேற்பட்ட பெண் காவலர்கள். மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜையின்போது மட்டும் போலீஸாருக்கென மொத்தம் 16 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதில் உயரதிகாரிகளை நிர்ணயம் செய்து அதற்காகச் செலவிடப்பட்டது மட்டும் தனியாக ரூ.6 கோடி. இதுபோக உணவுக்கென ரூ.3.18 கோடிக்கும் அதிகமாகச் செலவிடப்பட்டுள்ளது. உணவுக்கென ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் ரூ.3.18 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.

சபரிமலை

இதுபோக சபரிமலை அருகே உள்ள கிராமங்களில் போடப்பட்ட பாதுகாப்பு என மொத்தம் 16 கோடி ரூபாய் செலவாகியுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சபரிமலை விவகாரத்தை முன்னிறுத்தியே இந்த முறை கேரள தேர்தல் களம் அமைந்துள்ளது. சபரிமலையில் பெண்களை அனுமதித்ததை முன்னிறுத்தி ஆளும் இடதுசாரிகளும், இதையே எதிராகத் திரித்து வலதுசாரி இயக்கங்களும் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன. இது மக்கள் மத்தியில் எப்படி எடுபடப்போகிறது, தேர்தல் முடிவுகள் எப்படி வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பில் கேரள அரசியல் கட்சிகள் உள்ளன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க