கேரள பழங்குடியினரின் முதல் ஐஏஎஸ் ஸ்ரீதன்யாவுக்கு இன்ப அதிர்ச்சிகொடுத்த ராகுல் காந்தி! | Rahul gandhi meet sreedhanya, first person from tribe to clear ias

வெளியிடப்பட்ட நேரம்: 18:18 (17/04/2019)

கடைசி தொடர்பு:18:33 (17/04/2019)

கேரள பழங்குடியினரின் முதல் ஐஏஎஸ் ஸ்ரீதன்யாவுக்கு இன்ப அதிர்ச்சிகொடுத்த ராகுல் காந்தி!

இந்தியாவின் 17-வது நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். இதற்காக, நேற்றும் இன்றும் கேரளாவில் பல இடங்களுக்குச் சென்று, தனக்கும் தன் கட்சியைச் சேர்ந்த பிற வேட்பாளர்களுக்கும் ஆதரவாகப் பிரசாரம் செய்துவருகிறார். 

ராகுல் காந்தி

கேரளாவின் திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கொல்லம் ஆகிய இடங்களில் நேற்று  நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். இதற்கிடையே, ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சிபெற்ற கேரள பழங்குடி இனப் பெண் ஸ்ரீதன்யாவின் குடும்பத்தை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, ஸ்ரீதன்யா தேர்வில் தேர்ச்சிபெற்றதும், வருங்காலத்தில் அவரின் பணிகுறித்தும் கேட்டுத் தெரிந்துகொண்டார். 

ஶ்ரீதன்யா பெற்றோருடன் ராகுல் காந்தி

கடந்த ஆண்டு நடந்த ஐஏஎஸ் தேர்வில், கேரள மாநிலம் வயநாடு பகுதியைச் சேர்ந்த குரிசியா பழங்குடி இனப் பெண்ணான ஸ்ரீதன்யா தேர்ச்சிபெற்றார். தன் குடும்ப வறுமை மற்றும் பல இக்கட்டான சூழ்நிலைகளைக் கடந்து, கேரள பழங்குடி இனத்தின் முதல் ஐஏஎஸ் என்ற பெருமையைப் பெற்றார் தன்யா. முன்னதாக, இவர் தேர்ச்சிபெற்றபோது தன்யாவைப் பாராட்டி ராகுல் காந்தி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில், ‘ ஸ்ரீதன்யாவின் கடினமாக உழைப்பும், அர்ப்பணிப்புமே அவரை வெற்றியடையச் செய்துள்ளது’ எனக் குறிப்பிட்டிருந்தார்.  

ஶ்ரீதன்யா குடும்பத்தினருடன் ராகுல் காந்தி

 தற்போது, தன்யாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி. இவர்கள் சந்தித்த புகைப்படம் கேரள சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது.