பிரதமர் வந்த ஹெலிகாப்டரில் சோதனை!- ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் கொடுத்த அதிர்ச்சித் தண்டனை | Officer Suspended By Election Commission for Checks PM Modi's Chopper

வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (18/04/2019)

கடைசி தொடர்பு:12:20 (18/04/2019)

பிரதமர் வந்த ஹெலிகாப்டரில் சோதனை!- ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் கொடுத்த அதிர்ச்சித் தண்டனை

ஒடிசாவில் பிரசாரம் செய்யச் சென்ற பிரதமரின் ஹெலிகாப்டரை சோதனை செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரி தேர்தல் ஆணையத்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

பிரதமர் மோடி

நாடு முழுவதும் 17-வது நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. இன்று இரண்டாவது கட்டமாக தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், அஸ்ஸாம், பீகார், ஒடிசா, சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஜம்மு - காஷ்மீர், மணிப்பூர் ஆகிய பல மாநிலங்களில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. 

தேர்தல் நடைபெறாத பிற மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி போன்ற பல தேசியத் தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். இதற்கிடையில், கடந்த செவ்வாய்க் கிழமை அன்று ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் பிரசாரம் மேற்கொள்ளச் சென்றிருந்தார். அப்போது அங்கு தேர்தல் பணிகளைச் செய்துவந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி முகமது மொஹ்சின், பிரதமர் மோடி வந்த ஹெலிகாப்டரை சோதனை செய்தார்.  

இதையடுத்து, தற்போது பிரதமரின் வாகனத்தைச் சோதனை செய்த கர்நாடகாவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி முகமது மொஹ்சின் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், `சம்பல்பூரில் பிரதமர் வந்த ஹெலிகாப்டரை சோதனை செய்தது தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டது இல்லை. அதை மீறிச் சிறப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திடீர் சோதனையால் தான் செல்லவேண்டிய இடத்துக்கு 15 நிமிடங்கள் தாமதமாக பிரதமர் சென்றுள்ளார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தேசிய அளவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

முன்னதாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சென்ற ஹெலிகாப்டர் போன்றவையும் சிறப்பு அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்டது. அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்காத தேர்தல் ஆணையம், தற்போது பிரதமரின் ஹெலிகாப்டரை சோதனை செய்து தன் கடமையை நிறைவேற்றிய அதிகாரிக்கு பணி இடை நீக்கம் என்ற சிறந்த பரிசை வழங்கியுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.