சிறுமியின் குரல் கேட்டு ஓடிவந்த ராகுல் - கேரளாவில் நடந்த சுவாரஸ்யம் | small girl gave painting to Rahul gandhi in kerala

வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (18/04/2019)

கடைசி தொடர்பு:15:30 (18/04/2019)

சிறுமியின் குரல் கேட்டு ஓடிவந்த ராகுல் - கேரளாவில் நடந்த சுவாரஸ்யம்

நாட்டின் 17-வது மக்களவைத் தேர்தல் நடைபெற்றுவருகிறது. இதற்காகத் தீவிர வாக்கு சேகரிப்பில் அனைத்து தலைவர்களும் ஈடுபட்டிருந்தனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிடுகிறார்.  கேரளாவில், வரும் 23-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளதால், கடந்த இரண்டு நாள்களாகப் பிரசாரம் செய்தார். திருவனந்தபுரம், பதினம்திட்டா, ஆலப்புழா, கொல்லம், வயநாடு ஆகிய பல இடங்களுக்குச் சென்று வாக்கு சேகரித்தார். 

ராகுல்

இதற்கிடையில், நேற்று வயநாட்டில் காங்கிரஸ் சார்பில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்துகொள்வதற்காக திருவம்பாடி பகுதிக்கு காரில் வந்து இறங்கினார் ராகுல் காந்தி. அங்கிருந்து பிரசார மேடைக்குச் செல்லும்போது, மக்கள் கூட்டத்தில் இருந்து ஒரு பெண் பதாகையை தூக்கிப்பிடித்தபடி மிகவும் வேகமாக ‘ராகுல் ஜி , ராகுல் ஜி’ எனக் கத்தினார். உடனடியாக அந்தப் பெண்ணை கவனித்த ராகுல், கூட்டத்துக்கு அருகில் சென்று அவரை அருகில் வரவழைத்துப் பேசினார். அந்தப் பெண்ணும் தான் வரைந்த ராகுல் காந்தியின் புகைப்படத்தை அவருக்குப் பரிசாக அளித்தார். அதைப் பெற்றுக்கொண்டு, அந்தப் பெண்ணுக்கு வாழ்த்து தெரிவித்துச் சென்றார். 

PC : MediaOne

கொச்சியைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ரின்ஸி தான் அவ்வளவு கூட்டத்திலும் ராகுலின் கவனத்தை ஈர்த்தவர். இது பற்றி  கேரள ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில்,  ‘ ராகுல் காந்தியை எனக்கு நிறையப் பிடிக்கும். அவரை  சந்திப்பதற்காகவே நான் என் குடும்பத்துடன் கொச்சியில் இருந்து திருவம்பாடி வந்தேன். இந்த வருடம், எனக்கு வாக்கு அளிக்கும் உரிமை உள்ளது. என் ஓட்டு அவருக்குத்தான். அவரைச் சந்தித்து, நான் வரைந்த ஓவியத்தைத் தருவதற்காகவே இங்கு வந்தேன். ராகுலிடம் ஓவியத்தை எப்படியேனும் தந்துவிடுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. நான் நினைத்தது போலவே அவரும் நாங்கள் நின்றிருந்த இடத்துக்கு அருகில் வந்தார். 

PC : MediaOne

எனது அப்பா மற்றும் அருகில் இருந்த பலரும் என்னை உற்சாகப்படுத்தி, வேகமாகக் கத்தி ராகுலின் கவனத்தை ஈர்க்கக் கூறினர். நானும் அதேபோல வேகமாகக் கத்தினேன். ராகுல் நல்ல உள்ளம் கொண்டவர் என்பதால், அவருக்கு நான் கத்தியது கேட்கவே, அவர் என்னை அருகில் அழைத்துப் பேசினார். நான் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு தற்போது மருத்துவ படிப்புக்காக தயாராகிக்கொண்டிருக்கிறேன். நான் இரவு முழுவதும் தூங்காமல் அந்த ஓவியத்தை வரைந்தேன். அதை ராகுல் ஜி பெற்றுக்கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது’ என்றார்.

PC : MediaOn  அடுத்துப் பேசிய அந்தப் பெண்ணின் தந்தை, ‘ மேடையில் நேரடியாக ராகுலை சந்தித்து ஓவியத்தை வழங்க வேண்டும் என்பதுதான் முதலில் எங்கள் திட்டமாக இருந்தது. ஆனால் ராகுல் மிகப் பெரும் தலைவர் என்பதால், அவரை மேடையில் சந்திப்பது கடினம் எனத் தோன்றியது. அதனால்தான் இப்படிச் செய்தோம்’ என்றார்.  நேற்று முதல் ரின்ஸியிடம் ராகுல் பேசிய வீடியோ, கேரள சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது.