`உண்மையாகவே அவள் இளவரசிதான்' - தந்தையின் உயிரைக் காப்பாற்றிய இளம்பெண்ணின் துணிச்சல்! | 19 year old girl donate liver to her father at kolkata

வெளியிடப்பட்ட நேரம்: 17:29 (18/04/2019)

கடைசி தொடர்பு:17:29 (18/04/2019)

`உண்மையாகவே அவள் இளவரசிதான்' - தந்தையின் உயிரைக் காப்பாற்றிய இளம்பெண்ணின் துணிச்சல்!

தன் தந்தையின் உயிரைக் காப்பாற்ற 19 வயது இளம்பெண் செய்த செயல் நெகிழவைத்துள்ளது.

இளம்பெண் ராகி தத்தா

தந்தை மறுவாழ்வு பெற வேண்டும் என்றால், அறுவைசிகிச்சை செய்ய வேண்டும். ஒருவருடத்துக்குள் அறுவைசிகிச்சை செய்யவில்லை என்றால், உயிர் பிழைப்பது கடினம் என்ற சூழ்நிலையில், 19 வயது இளம் பெண் தைரியமான முடிவு எடுத்து, தன் தந்தையைக் காப்பாற்றுகிறாள். அவரின் தைரியம், பாசம்தான் இணைய உலகின் இன்றைய வைரல். அவர், கொல்கத்தாவைச் சேர்ந்த ராகி தத்தா. ராகியின் தந்தைக்கு, கடந்த சில நாள்களாகவே உடல்நலம் சரியில்லை. இதனால், தனது சகோதரியுடன் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் தந்தையை அனுமதிக்கிறார். அங்கு அவருக்கு கல்லீரல் அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் எனக் கூறினர். ஆனால் அதேநேரம், கொல்கத்தாவில் அதற்கான வசதிகள் இல்லை எனக் கைவிரித்துவிட்டனர்.

ராகி தத்தா 

இருப்பினும் ராகி சோர்ந்துவிடவில்லை. தனது தந்தையை அழைத்துக்கொண்டு ஹைதராபாத் மருத்துவமனைக்குப் புறப்பட்டனர். அங்கு அட்மிட் செய்யப்பட்டவருக்கு சிகிச்சைக்கான ஏற்பாடுகள் தொடங்கியது. ஆனால் கல்லீரல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நேரத்தில், அந்த தைரியமான முடிவை எடுத்தார் ராகி. தந்தைக்காகத் தனது 60 சதவிகித கல்லீரலைத் தானம் கொடுக்க முன்வந்தார். வெற்றிகரமாக சிகிச்சை முடிந்தது. தற்போது அவர் தந்தையும், ராகியும் நன்றாக இருக்கிறார்கள். `` தந்தைக்காக நான் கல்லீரல் கொடுக்கிறேன் என்று ராகி சொன்னதும் எங்களால் பேச முடியவில்லை. அவளிடம் எந்தப் பயமும் இல்லை. தந்தையைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளை மட்டுமே கொண்டு முடிவாக இருந்தாள்.

தந்தையுடன் ராகி தத்தா

வலி இருக்கும், 19 வயது தான் ஆகிறது என எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. இப்படி ஒரு பெண்ணை நாங்கள் இதுவரை கண்டதில்லை. நிச்சயம், அவள் ஒரு பயமறியா பெண்தான். பயம், முடியாது என்பது எல்லாம் அவளது அகராதியிலேயே இல்லை. அவள் தந்தை கூறியது போல, `தந்தையின் இளவரசி' என்பது மறுப்பதற்கில்லை" என ராகிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் புகழ்கிறார்கள். வலைதளங்களில் ராகி மற்றும் அவரது தந்தையின் புகைப்படம்தான் தற்போது வைரலாகிவருகிறது. ராகியைப் பலரும் `சூப்பர் ஹீரோ, ரியல் ஹீரோ, தந்தையின் இளவரசி' எனப் புகழ்ந்துவருகின்றனர். ஆனால், இந்தப் புகழ்ச்சியைத் தலையில் ஏற்றிக்கொள்ளாமல், ``வாழ்த்திய அனைவருக்கும் எனது நன்றிகள். என் குடும்பம்தான் இந்த வாழ்க்கையைக் கொடுத்தது. அவர்களை நேசிக்கிறேன்" என ஒரு பதிவை மட்டும் வலைதளத்தில் இட்டுள்ளார்.

ராகி தத்தா

பெண் குழந்தைகள் பெற்றுக்கொள்வது பயனற்றது எனப் பெற்றோர்களுக்கு, தனது பாசத்தால் ராகி பதிலடி கொடுத்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க