`பால்கோட் தாக்குதல் தற்காப்புக்கே; பாகிஸ்தான் ராணுவத்தினர் யாரும் கொல்லப்படவில்லை!' - சுஷ்மா ஸ்வராஜ் | Sushma swaraj on Balakot attack

வெளியிடப்பட்ட நேரம்: 21:11 (18/04/2019)

கடைசி தொடர்பு:21:17 (18/04/2019)

`பால்கோட் தாக்குதல் தற்காப்புக்கே; பாகிஸ்தான் ராணுவத்தினர் யாரும் கொல்லப்படவில்லை!' - சுஷ்மா ஸ்வராஜ்

'இந்திய விமானப்படை பால்கோட் பகுதியில் நடத்திய தாக்குதலில், பாகிஸ்தானியர்களோ அல்லது அந்நாட்டு ராணுவ வீரர்களோ, எவரும் கொல்லப்படவில்லை' என வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.

சுஷ்மா சுவராஜ்

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடிகொடுக்கும் விதமாக, பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ் - இ - முகமது தீவிரவாதத் தளத்தின்மீது இந்திய விமானப்படை விமானங்கள் தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதலில், தீவிரவாதத் தளம் அழிக்கப்பட்டதாக இந்தியா தெரிவித்தது. ஆனால், இந்திய விமானப்படைகள் நடத்திய தாக்குதலில் எந்தச் சேதாரமும் ஏற்படவில்லை என பாகிஸ்தான் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுவந்தது. 

சர்வதேச எல்லைக்கு அருகில் உள்ள இந்திய நிலைகளின்மீது பாகிஸ்தான் விமானப் படைகள், கடந்த பிப்ரவரி 27ல் தாக்குதல் நடத்த முயன்றன. பாகிஸ்தான் விமானப்படையின் முயற்சியை இந்திய விமானப்படை தடுத்து, பதில் தாக்குதல் நடத்தியது. இதில், பாகிஸ்தான் விமானப் படையின் எஃப் 16 ரக விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதேபோல, மிக் 21 பைசான் ரக விமானம் ஒன்றை இந்திய விமானப்படை இழந்தது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தரையிறங்கிய இந்திய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் சிறைபிடித்தது. பின்னர், கடந்த 1-ம் தேதி, அவரை வாகா எல்லையில் இந்தியாவிடம் பாகிஸ்தான் அதிகாரிகள் ஒப்படைத்தனர். பால்கோட் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கைகுறித்து பா.ஜ.க தலைவர்கள் பலரும் கருத்துத் தெரிவித்துவந்தனர். 

சுஷ்மா சுவராஜ்

இந்த நிலையில், பால்கோட் தாக்குதல் முழுக்க முழுக்க தற்காப்புக்காக நடத்தப்பட்டது. அந்தத் தாக்குதலில், பாகிஸ்தானியரோ அல்லது அந்நாட்டு ராணுவ வீரர்களோ யாரும் கொல்லப்படவில்லை என வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா தெரிவித்திருக்கிறார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பா.ஜ.க பெண் தொண்டர்கள் மத்தியில் பேசிய சுஷ்மா, `கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலைப் போலவே இந்தத் தேர்தலிலும் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியமைக்கும்.

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடிகொடுக்கும் விதமாக, பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் செயல்பட்டுவந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதத் தளம் மீது தாக்குதல் நடத்தினோம். புல்வாமா தாக்குதலுக்குக் காரணமான ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதத் தளத்தை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்துமாறு ராணுவத்திடம் கூறியிருந்தோம். அதேபோல, இந்தத் தாக்குதல் தற்காப்புக்காக நடத்தப்படுவது மட்டுமே. இதில், பாகிஸ்தானியர்களோ அல்லது அந்நாட்டு ராணுவ வீரர்களோ குறிவைக்கப்பட மாட்டார்கள் என்று சர்வதேச சமூகத்திடம் நாம் தெரிவித்திருந்தோம். அதேபோலவே, அவர்கள் யாருக்கும் காயம் ஏற்படாமல் இந்தத் தாக்குதலை நமது ராணுவம் நடத்திமுடித்தது'' என்றார்.