`தவறாக பா.ஜ.க-வுக்கு வாக்களித்துவிட்டேன்!’ - தனக்குத் தானே தண்டனை அளித்துக்கொண்ட இளைஞர் | man chops off his finger after he votes for BJP instead of BSP

வெளியிடப்பட்ட நேரம்: 11:35 (19/04/2019)

கடைசி தொடர்பு:11:35 (19/04/2019)

`தவறாக பா.ஜ.க-வுக்கு வாக்களித்துவிட்டேன்!’ - தனக்குத் தானே தண்டனை அளித்துக்கொண்ட இளைஞர்

உத்தரப்பிரதேசத்தில் தான் வாக்களிக்க நினைத்த கட்சி இல்லாமல் வேறு கட்சிக்குத் தவறுதலாக வாக்களித்ததால் இளைஞர் ஒருவர் தன் விரலைத் துண்டித்துக்கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

வாக்குப் பதிவு

இந்தியாவில் 17-வது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதையொட்டி தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், அஸ்ஸாம், பீகார், ஒடிசா, சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஜம்மு - காஷ்மீர், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் இரண்டாம் கட்டமாக நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது. 

இளைஞர் பவன் குமார்

உத்தரப்பிரதேசத்தில் 8 மக்களவைத் தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 62.06 சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது. இந்த நிலையில், அதே மாநிலம் சிக்கர்பூர் தொகுதி, அப்துல்லாபூர் ஹுலாசன் கிராமத்தைச் சேர்ந்த பவன் குமார் என்ற 25 வயது இளைஞர், தான் நினைத்த கட்சி இல்லாமல் தவறுதலாக வேறு கட்சிக்கு மாற்றி வாக்களித்துள்ளார். அதற்குத் தண்டனை அளிக்கும் விதமாக அரிவாளால் தன் விரலைத் தானே துண்டித்துள்ளார். இதன் பின்னர் தவறாக வாக்களித்ததற்கு வருத்தம் தெரிவித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ உ.பி மக்கள் மத்தியில் அதிக வைரல் ஆகியுள்ளது.

பா.ஜ.க

சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் கூட்டணி வேட்பாளரான யோகேஷ் குமாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணத்துடனே வாக்குச் சாவடிக்கு சென்றுள்ளார் பவன் குமார். ஆனால், வாக்களிக்கும் நேரத்தில் தவறுதலாக பா.ஜ.க வேட்பாளரும் அந்தத் தொகுதியின் தற்போதைய எம்.பியுமான போலா சிங்குக்கு வாக்களித்துவிட்டார். இதில் விரக்தியடைந்த அவர் தன் விரலைத் துண்டித்துக்கொண்டுள்ளார்.