`அது மட்டும் சஸ்பென்ஸ்’ - பிரியங்கா குறித்த கேள்விக்கு ராகுலின் சுவாரஸ்ய பதில் | will leave you in suspense says Rahul on Priyanka contesting polls

வெளியிடப்பட்ட நேரம்: 14:15 (19/04/2019)

கடைசி தொடர்பு:14:15 (19/04/2019)

`அது மட்டும் சஸ்பென்ஸ்’ - பிரியங்கா குறித்த கேள்விக்கு ராகுலின் சுவாரஸ்ய பதில்

தீவிர அரசியலில் நுழையாமல் ஒதுங்கியிருந்த பிரியங்கா காந்தியை இந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அரசியல் களத்தில் இறக்கியுள்ளது காங்கிரஸ். கடந்த ஜனவரி மாதம் உத்தரபிரதேசம் கிழக்குப் பகுதியின் காங்கிரஸ் பொதுச் செயலாளராகப் பிரியங்கா நியமிக்கப்பட்டதில் தொடங்கியது அவரது அரசியல் பயணம். அது முதல் தற்போது வரை நாடு முழுவதும் பல மாநிலங்களுக்குச் சென்று காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார். 

பிரியங்கா

உத்தரபிரதேசத்தில் தன் சகோதரர் ராகுல் காந்தியையும், தாய் சோனியா காந்தியை ஆதரித்தும் பிரசாரம் செய்து வருகிறார் பிரியங்கா. அவரின் பிரசாரத்துக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பிரியங்காவை அரசியலில் இறக்கியதோடு மட்டும் நிற்காமல் அவருக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் எனத் தலைமையிடம் காங்கிரஸார் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பிரசாரம்

இதற்கிடையில் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரின் பெயரை இன்னும் அறிவிக்காமல் உள்ளது காங்கிரஸ். அதனால் அந்த இடத்தில் பிரியங்கா போட்டியிடுவார் என்ற செய்தி கடந்த சில நாள்களாக ஊடகங்களில் உலா வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா, `மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட பிரியங்கா தகுதியானவர். அப்படி பிரியங்கா போட்டியிட்டால் அது மோடிக்கு மிகப் பெரும் சவாலாக இருக்கும்’ எனக் கூறியிருந்தார். அதேபோல், `தான் தேர்தலில் போட்டியிட வேண்டும் எனக் கட்சி தலைமை நினைத்தால் அதற்கு நான் தயார்’ என பிரியங்காவும் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இவை அனைத்தும் பிரியங்கா தேர்தலில் போட்டியிடுவர் என்பதை ஓரளவுக்கு உறுதி செய்திருந்தாலும் எந்தத் தொகுதி என்பதில் இன்னும் தெளிவான முடிவு தெரியவில்லை.

ராகுல் காந்தி

சமீபத்தில் தி இந்து ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம், பிரியங்கா வாரணாசியில் போட்டியிடுவாரா எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு `அது மட்டும் உங்களுக்கு சஸ்பென்ஸாகவே இருக்கட்டும். சஸ்பென்ஸ் எப்போதும் தவறானது இல்லை’ எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து உங்கள் பதிலிலிருந்து பிரியங்கா போட்டியிடுகிறார் என எடுத்துக்கொள்ளலாமா எனக் கேட்கப்பட்டது. அதற்கு, `நான் எதையும் உறுதியாகவும் சொல்லவில்லை, நிராகரிக்கவும் இல்லை’ எனப் பதிலளித்துள்ளார்.