`ஒரே நாளில் 41,000 மின்னல்கள்... 3,000 மரணங்கள்' - காரணம் காலநிலை மாற்றமா!? | 41,000 lightining strikes in India... Climate changes poses severe threat

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (19/04/2019)

கடைசி தொடர்பு:21:46 (19/04/2019)

`ஒரே நாளில் 41,000 மின்னல்கள்... 3,000 மரணங்கள்' - காரணம் காலநிலை மாற்றமா!?

கடந்த ஏப்ரல் 16-ம் தேதி, ஒரே நாளில் 41,000 மின்னல்கள் இந்திய நிலப்பரப்பிற்குள் வெட்டியுள்ளதாக பூனேவில் அமைந்திருக்கும் இந்திய வானவியல் நிறுவனத்தின் ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

அதிகமான இடி மற்றும் புயல்களால், இந்த மின்னல் வெட்டுகள் ஏற்பட்டிருப்பதாகக் கூறுகின்றனர், வானவியல் ஆராய்ச்சியாளர்கள். ஏப்ரல் 15-ம் தேதியிலிருந்து நாட்டின் வடமேற்குப் பகுதிகளில் தொடங்கிய மேற்கத்திய தட்பவெப்பநிலை மற்றும் வானவியல் இடையூறுகளே (Intense Western Disturbance,WD) இந்த நிலை உருவாகக் காரணமென்றும் கணித்துள்ளனர். WD உருவாக்கிய குளிர்க்காற்று வறண்ட சூடான கோடைக்காற்றை இடைமறித்ததால், இந்த மோசமான சூழ்நிலை தோன்றியுள்ளது. 

மின்னல்கள்

இதுகுறித்துப் பேசிய நிலவியல் அமைச்சகத்தின் செயலாளர் ராஜீவன், "இது, நாட்டின் பெரிய நிலப்பரப்பைப் பாதிக்கிறது. கடந்த ஜனவரி மாதத்திலிருந்து பதிவாகியுள்ளனவற்றில், இதுவே மிகத் தீவிரமானது" என்று கூறியுள்ளார்.

இந்தத் தீவிரமான வானவியல் மாற்றம், ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்து பதினொரு மாநிலங்களில் சுமார் 89 மக்களின் மரணத்திற்குக் காரணமாகியுள்ளது. இந்த மரணங்களுக்கு மிக முக்கியக் காரணமாக, மின்னல் வெட்டுகளே கூறப்படுகின்றன. ஏப்ரல் 16-ம் தேதி, ஒருநாளில் மட்டுமே, இதனால் ராஜஸ்தானில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். 15 மற்றும் 16-ம் தேதிகளில், மத்தியப் பிரதேசத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சமீப காலங்களில் வெள்ளம், அனல்காற்று, போன்றவற்றைப் போலவே அதிகப் பேரின் மரணங்களுக்கு மின்னல்களும் காரணமாகிவருகின்றன.

காலநிலை மாற்றம்

2018-ம் ஆண்டில் மட்டும் 3000 மக்கள் மின்னல் வெட்டுகளுக்குப் பலியாகியுள்ளனர். கடந்த மூன்றாண்டுகளில், இந்தக் காரணத்தால் பலியாவோரின் எண்ணிக்கையில் ஆயிரம் மரணங்கள் அதிகமாகியுள்ளன. காலநிலை மாற்றத்தால் புயல், சூறாவளி போன்றவை அதிகமானதே இந்தப் பிரச்னைகள் தோன்றுவதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.

கடந்த ஆண்டு மே மாதத்தில், ஆந்திரப்பிரதேசத்தில் இதேபோல ஒரே நாளில் 41,000 மின்னல் வெட்டுகள் ஏற்பட்டதாகப் பதிவுகள் கூறுகின்றன.