அவர் என்ன குஜராத்தின் ஹிட்லரா? - ஹர்திக் படேலை தாக்கிய நபர் விளக்கம் | Man attacked Hardik Patel on congress rally

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (19/04/2019)

கடைசி தொடர்பு:18:00 (19/04/2019)

அவர் என்ன குஜராத்தின் ஹிட்லரா? - ஹர்திக் படேலை தாக்கிய நபர் விளக்கம்

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, குஜராத் மாநிலம் சுரேந்திர நகர் பகுதியில், காங்கிரஸைச் சேர்ந்த தலைவரும், குஜராத் படேல் சமூகத்தைச் சேர்ந்த தலைவருமான ஹர்திக் படேல், காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரசாரம்செய்துகொண்டிருந்தார்.

அவர் மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போது, எதிர்பாராதவிதமாக மேடையேறிய ஒருவர், ஹர்திக்கின் கன்னத்தில் பலமாக அறைந்தார். அதன் பின்னர், அங்கிருந்த காங்கிரஸாருக்கும் அறைந்தவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. ஹர்திக்கைத் தாக்கிய தருண் கஜ்ஜார் என்பவரை காங்கிரஸார் சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்துதான் ஏன் ஹர்திக் படேலை தாக்கினேன் என தருண் விளக்கமளித்துள்ளார். அதில், ‘ கடந்த 2015-ம் ஆண்டு நடந்த படேல் சமூகப் போராட்டத்தின்போது, கர்ப்பிணியாக இருந்த என் மனைவியை நான் மருத்துவமனையில் அனுமதித்திருந்தேன். இவரின் போராட்டத்தால், அகமதாபாத்தில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. அதனால், என் குழந்தைக்கு மருந்துகூட வாங்கமுடியாத நிலையில் நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம். அன்றே, ஹர்திக் கன்னத்தில்  ஓர் அறை விட்டு, அவருக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என முடிவுசெய்தேன்.

இவரால்தான் அன்று அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. வாகனங்கள் இயங்கவில்லை. இவர் நினைத்தால், குஜராத்தின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் அடைத்துவிடுகிறார். யார் இவர், குஜராத்தின் ஹிட்லரா?’ எனக் கடுமையாகச் சாடினார்.

கடந்த 2015-ம் ஆண்டு, படேல் சமூகத்தை இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுடன் சேர்க்க வேண்டும் என்றும், அவர்களுக்கு கல்வியில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் குஜராத்தின் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றன.  அகமதாபாத்தில், ஒரே நாளில் சுமார் 10 லட்சம் படேல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றுதிரண்டு போராட்டம் நடத்தியபோது, இது அதிக கவனம் பெற்றது. இதில், பலர் உயிரிழந்தனர். போராட்டத்தை நடத்திய ஹர்திக் படேல் கைதுசெய்யப்பட்டார். படேலின் போராட்டம், குஜராத் வரலாற்றில் அழிக்க முடியாத ஒரு நிகழ்வு என்றே கூற வேண்டும். படேல் சமூகத்தின் தலைவர் ஹர்திக் படேல், சமீபத்தில் முறைப்படி காங்கிரஸில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.