`சாபமிட்டேன்; ஆனால் இப்போது திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்' - சாத்வி பிரக்யா | IPS Association condemns Sadhvi Pragya specch about Hemant Karkare

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (19/04/2019)

கடைசி தொடர்பு:23:13 (19/04/2019)

`சாபமிட்டேன்; ஆனால் இப்போது திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்' - சாத்வி பிரக்யா

ஐபிஎஸ் மரணத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து மாலேகான் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பெண் சாமியார் சாத்வி பிரக்யா பேசியுள்ளார்.

சாத்வி பிரக்யா

மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையிலிருந்து சுமார் 270 கி.மீட்டர் தொலைவில் உள்ளது மாலேகான். இங்குக் கடந்த 2008- ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28- ம் தேதி ரம்ஜான் தொழுகை முடித்துவிட்டு வெளியே வந்தவர்கள் மீது இரட்டை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 6 பேர் கொல்லப்பட்டதுடன் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு இந்து மதவாத அமைப்புதான் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது. கூடவே பெண் சாமியார் சாத்வி பிரக்யா உள்ளிட்டோர் அந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர். அவரைக் காவல்துறை கைது செய்தது.

சாத்வி பிரக்யா

அதேநேரம் இந்த வழக்கை விசாரித்த தேசியப் புலனாய்வு நிறுவனம் சாத்விக்கும் இந்தத் தாக்குதலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அறிக்கை தாக்கல் செய்தது. ஆனாலும் அவரை வழக்கிலிருந்து விடுவிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. கடந்த 2017ம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றம் சாத்வி பிரக்யா சிங் தாகூருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அவர் மீதான கிரிமினல் குற்றச்சாட்டு திரும்பப் பெறப்பட்டாலும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து வருகிறது. பிரக்யா கைதில் முக்கியப் பங்காற்றியவர் அப்போது இருந்த ஐபிஎஸ் அதிகாரி ஹேமந்த் கர்காரே. இவர் பின்னாளில் மும்பைத் தாக்குதலில் தீவிரவாதிகளை எதிர்த்துச் சண்டையிட்ட போது வீர மரணமடைந்தார்.

ஹேமந்த் கர்காரே

நாட்டுக்காக உயிரைவிட அவரின் தியாகம் மக்கள் மத்தியில் இன்றளவும் போற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஹேமந்த் கர்காரே மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார் பெண் சாமியார் பிரக்யா. ``இந்த கர்காரேதான் மாலேகான் வழக்கில் என்னைக் குற்றவாளியாகக் கையாண்டார். நான் செய்யாத தவற்றுக்காக என்னைக் கொடுமைப்படுத்தினார். அப்போதே அவரைப் பார்த்து, ``நீங்கள் ஒருநாள் அழிந்து போவீர்கள். உங்கள் பரம்பரையே அழிக்கப்படும்" என்று சாபமிட்டேன். அதுதான் மும்பை தாக்குதலில் அவரது உயிரிழப்பிற்குக் காரணமாக அமைந்தது. என்னுடைய சாபத்தால்தான் அவர் உயிரிழந்தார்" எனக் கூறினார். இவரின் இந்தப் பேச்சுக்கு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஹேமந்த் கர்காரே

ஜாமீனில் வெளியில் இருக்கும் சாத்வி பிரக்யா அண்மையில் பா.ஜ.கவில் இணைந்தார். கட்சியில் இணைந்த உடனே அவரை போபால் மக்களவை தொகுதி வேட்பாளராக பா.ஜ.க அறிவித்தது. காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங்குக்கு எதிராக பிரக்யா போட்டியிடுகிறார். ``முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆதரவு இருப்பதால் நான் கண்டிப்பாக வெற்றிபெறுவேன்" எனச் சபதம் விடாத குறையாக பிரக்யா பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தான் சொன்ன கருத்தை திரும்ப பெறுவதாக சாத்வி பிரக்யா தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க