`மோடியை இன்ஸ்பிரேஷனாகக் கொண்டவர் ட்ரம்ப்' - யோகி தகவல் ஆனால் உண்மை ? | US President Donald Trump said he wants to work like PM Modi, claims Yogi Adityanath

வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (20/04/2019)

கடைசி தொடர்பு:11:19 (22/04/2019)

`மோடியை இன்ஸ்பிரேஷனாகக் கொண்டவர் ட்ரம்ப்' - யோகி தகவல் ஆனால் உண்மை ?

இது தேர்தல் காலம். உலகின் அனைத்து புனைவு இலக்கியங்களும் தோற்றுவிடும் அளவுக்கு பொய்களும், புரட்டுகளும், போலி வாக்குறுதிகளும் குவியும் நேரம் இது. நம் மாநிலத்தில் மாம்பழத்துக்குப் பதிலாக ஆப்பிளுக்கு வாக்குக் கேட்ட கதையெல்லாம் அரங்கேறியது, உத்திரப் பிரதேசத்திலோ, ட்ரம்புக்கே ரோல் மாடல் மோடிதான் எனச் சூளுரைத்து இருக்கிறார் யோகி . 

யோகி ஆதித்யநாத்

``உலகில் எங்கு தேர்தல் நடந்தாலும், இந்தியாவையும் மோடியையும் சுற்றித்தான் நடக்கிறது. டொனால்டு ட்ரம்ப் ஒருவேளை அமெரிக்காவின் அதிபரானால், அவர் மோடியைப் போல் வேலை செய்வேன் என உறுதிமொழி எடுத்தார் " என யோகி ஆதித்யநாத் கிளப்பிவிட, `நூறு கோடிப்பே, நீ பார்த்த' என சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்துவருகிறார்கள். 

மோடி

 

கேம் ஆஃப் த்ரோன்ஸ் மாதிரியான தொலைக்காட்சித் தொடர்களையே தொடர்ந்து தன் விளம்பரங்களுக்கு அதிகாரபூர்வமாக பயன்படுத்துபவர் ட்ரம்ப். அந்தத் தொலைக்காட்சி நிறுவனம் பலமுறை இதற்கு மறுத்தும், அடப்போங்க பாஸ் என ஜாலியாக அதை வைத்து மீம் செய்து வருகிறார் மனிதர். ஒருவேளை அமெரிக்காவில் இருக்கும் இந்திய வாக்காளர்களைக் கவர இப்படி ஏதாவது ட்ரம்ப் சொல்லி இருப்பாரா, எனத் தேடினால், அட யோகி என கொட்டு வைக்கிறது இணையம். 

மோடி

அமெரிக்கத் தேர்தலில் அங்கு இருக்கும் இந்து வாக்காளர்களைக் கவர, மோடியின் ஸ்லோகனையே உல்டா செய்திருக்கிறார். அங்கிருக்கும் தொலைக்காட்சிகளுக்கு, ` ஆப் கி பார் ட்ரம்ப் சர்கார் ' என விளம்பரம் வைத்திருக்கிறார் டொனால்டு ட்ரம்ப். அதேபோல், வேறொரு சமயத்தில் "I look forward to work with Indian Prime Minister Modi" என தீவிரவாதத்தை ஒழிக்கும் பொருட்டு பேசி இருக்கிறார் ட்ரம்ப். பொருளாதாரத்தை ``மேம்படுத்த மிகவும் முனைப்பாக இருக்கிறார் மோடி. பிரதமர் மோடியும் இணைந்து வேலை செய்ய நான் தயாராக இருக்கிறேன் " என அமெரிக்க இந்திய வாக்குகளைக் கவர பேசினார் ட்ரம்ப். இதிலிருந்துதான் work, modi போன்ற வார்த்தைகளை எல்லாம் வைத்து யோகி ஆதித்யநாத் புதியதோர் கண்டுபிடிப்பாக ``ஒருவேளை அமெரிக்காவின் அதிபரானால், அவர் மோடியைப் போல் வேலை செய்வேன் என உறுதிமொழி எடுத்தார்" என நிறுவியிருப்பார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதைத்தான் கவுண்டமணி அன்றே ' பொய் சொல்லலாம் தம்பி தப்பில்ல, ஆனா இப்படி ஏக்கர் கணக்குல எல்லாம் சொல்லக்கூடாது" என்றார் . தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் நமக்கு நிறைய கதைகள் காத்துக்கொண்டு இருக்கின்றன என்பது மட்டும் நிச்சயம்.