`பொய் வழக்கு; சிறை; அச்சுறுத்தல்' - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் பின்னணி | chief justice of india sexually harassed me says former sc staffer

வெளியிடப்பட்ட நேரம்: 13:01 (20/04/2019)

கடைசி தொடர்பு:13:11 (20/04/2019)

`பொய் வழக்கு; சிறை; அச்சுறுத்தல்' - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் பின்னணி

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். 

ரஞ்சன் கோகாய்

 உச்ச நீதிமன்றத்தின் இளநிலை உதவியாளராக இருந்த 35 வயதான பெண் ஒருவர் நேற்று உச்ச நீதிமன்ற 22 நீதிபதிகளுக்கு வாக்கு மூலம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயால் தான் பாலியல் சீண்டல்களுக்கு ஆளானதாகத் தெரிவித்துள்ளார். 

பெண் அளித்த வாக்குமூலம்:

நான் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நீதிபதி வீட்டில் உள்ள அலுவலகத்தில் வேலை செய்த போது அவர் என்னிடம் தவறாக நடந்துகொண்டார். அதன் பின்னர் டிசம்பர் மாதம் நான் பணிநீக்கம் செய்யப்பட்டேன்.  ‘ அனுமதியில்லாமல் ஒரு நாள் விடுப்பு எடுத்ததால் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டதாகக் காரணம் கூறினர். நான் பணி நீக்கம் செய்யப்பட்ட பின்பும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்ந்தன. என் கணவர் மற்றும் மைத்துனர் ஆகிய இருவரும் டெல்லி காவல்துறையில் தலைமைக் காவலர்களாகப் பணி புரிந்து வருகின்றனர். என்னைப் பணி நீக்கம் செய்த அதே டிசம்பர் மாதம் 28-ம் தேதி அவர்களும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். 2012-ம் ஆண்டு ஒரு காலணியில் நடந்த சர்ச்சைத் தொடர்பான வழக்கில் அவர்கள் இருவரும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டதாகத்  தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த வருடம் மார்ச் மாதம் என் மீது பொய்யான வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டேன்.  ஜாமினில் வெளியில் வந்த நிலையில்தான் தற்போது இந்த வாக்கு மூலத்தை அளிக்கிறேன்’ என அதில் குறிப்பிட்டுள்ளார். 

இது பற்றி மனித உரிமைகள் ஆணையத்தின் வழக்கறிஞர் வ்ரிண்டா க்ரோவர் (VrindaGrover ) குயின்ட் ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில், “ அந்த பெண்ணும் அவரது குடும்பமும் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது பொய்யான வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைப் பற்றி வெளியில் பேசினால் தன் குடும்பத்தினருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தில் அவர் இதுநாள் வரை அமைதிக் காத்துள்ளார். தற்போது அந்த பெண்ணின் வேலை பறிபோய் விட்டது. அவரது குடும்பத்தில் உள்ள அனைவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இனியும் அந்த பெண் அமைதியாக இருந்தால் அவர் மீது பல புகார்கள் தெரிவிப்பார்கள். காரணமே இல்லாமல் அவரும் அவரது குடும்பத்தினரும் முழுவதுமாக அழிக்கப்பட்டுவிட்டனர்.  எனவே இதை மக்களின் முன் எடுத்துச் செல்ல முடிவு செய்து நடந்தவற்றை வாக்குமூலமாக 22 நீதிபதிகளும் அனுப்பியுள்ளார்’ எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால் தலைமை நீதிபதி மீது சுமத்தப்பட்டுள்ள புகாருக்கு உச்சநீதிமன்றத்தின் செயலர் மறுப்பு தெரிவித்துள்ளார்.  இது பற்றி scroll.in ஊடகத்திடம் பேசியுள்ள அவர், “ உச்சநீதிமன்றத்துக்கும், தலைமை நீதிபதிக்கும் களங்கம் விளைவிக்கும் நோக்கிலேயே இது செய்யப்பட்டுள்ளது. அந்த பெண்ணை பின்னால் இருந்து யாரோ இயக்குகிறார்கள். உச்சநீதிமன்ற விதிகளின் படி இளநிலை கிளர்க் பணியில் உள்ள பலர் நீதிபதியின் வீட்டில் உள்ள அலுவலகத்தில் சுழற்சி முறையில் வேலை செய்து வருகின்றனர். அங்கு எந்த நேரமும் சில பணியாளர்கள் இருந்துக்கொண்டே இருப்பர். இந்த பெண் புகார் அளித்துள்ள அதே நாளிலும் பல பணியாளர்கள் அவருடன் இருந்திருப்பர். அவர்களிடம் விசாரணை நடத்தினால் உண்மை தெரியவரும்.

மேலும் புகார் அளித்த அந்த பெண், தலைமை நீதிபதியின் அலுவலகத்தில் சில மாதங்கள் மட்டுமே இளநிலை பணியாளராக வேலை செய்துள்ளார். அங்கு உள்ளவர்களுக்கு அலுவலகத்தில் மட்டுமே வேலை இருக்கும் மற்றபடி அவர்கள் தலைமை நீதிபதியை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கூட கிடைக்காது. முறையான நடைமுறைகளின் படியே அந்த பெண் பணி நீக்கம் செய்யப்பட்டார். அந்த பெண்ணின் மைத்துனர் தற்காலிகமாகவே காவல்துறை பணியிலிருந்தார். அந்த காலத்தில் அவரின் வேலை சரியில்லாத காரணத்தினால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இதற்கும் நீதிமன்றத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.  நீதிபதி மீது பொய்யான புகார் அளிக்கும் நோக்கத்தில் சில விஷமிகள் இந்த வேலையைச் செய்துள்ளனர்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கோகாய்

இதற்கிடையே தம் மீது சுமத்தப்பட்டுள்ள புகாரைத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுத்துள்ளார்.  ‘ நான் 20 வருடமாகச் சுயநலமற்ற சேவை செய்துள்ளேன். என் மீதான குற்றச்சாட்டு வேதனை அளிக்கிறது. அடுத்த வாரம் சில முக்கிய வழக்குகளைக் கையாள இருக்கிறேன். அதைத் தடுக்கும் முயற்சியாகவே இதைப் பார்க்கிறேன். என்னிடம் இருந்து பணம் பிடுங்க நினைத்து முடியாததால் இந்தப் புகாரைக் கொடுத்துள்ளனர். என் மீது புகார் அளித்த அந்த பெண் மிகவும் குறுகிய காலம் மட்டுமே அங்கு பணிபுரிந்துள்ளார். அவர் அங்கு இருக்கும் போதே இதே போன்ற குற்றச்சாட்டுகள் என் மீது கூறப்பட்டது. இது போன்ற பொய்யான விஷயங்களுக்கு பதில் அளிப்பதை தேவையில்லாத ஒன்றாக நான் நினைத்தேன். என் மீது மிக பெரிய புகார் ஒன்றை தெரிவித்துவிட்டு அதற்கு பதில் அளிக்க 10 மணி நேரம் மட்டுமே கால அவகாசம் அளித்துள்ளனர். 20 வருடங்களாகத் தூய்மையாகப் பணியாற்றியதற்கான அங்கீகாரமாகவே இந்தப் புகாரைக் கருதுகிறேன்” எனக் கூறியுள்ளார்.