ராகுல் அளித்த வாக்குறுதி; செய்து முடித்த பிரியங்கா - சிறுவனுக்காக நேரம் ஒதுக்கிய தலைவர்கள் | priyanka gandhi had a meeting with seven-year-old Nathan in Wayanad earlier today

வெளியிடப்பட்ட நேரம்: 18:01 (20/04/2019)

கடைசி தொடர்பு:18:01 (20/04/2019)

ராகுல் அளித்த வாக்குறுதி; செய்து முடித்த பிரியங்கா - சிறுவனுக்காக நேரம் ஒதுக்கிய தலைவர்கள்

வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி, இந்த வாரத்தில் மூன்று நாள்கள் கேரளா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தனக்கும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கும் ஆதரவாக வாக்கு சேகரித்தார். 

ராகுல்

ராகுலின் இந்த மூன்று நாள் கேரள பயணத்தின்போது, பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்றன. அவற்றுள் ஒன்றாக, கன்னூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த ராகுல் காந்தியைப் பார்க்க, ஏழு வயதான நந்தன் என்ற சிறுவன், சுமார்  5 மணி நேரம் காத்திருந்துள்ளார். பாதுகாப்பு காரணங்களால் அந்தச் சிறுவனால் கடைசி வரை ராகுல் காந்தியைப் பார்க்க முடியவில்லை. இதனால், மனமுடைந்த சிறுவன் அழுதுள்ளான். இந்த விஷயமும், சிறுவன் அழும் புகைப்படங்களும் சமூக ஊடகங்கள் வாயிலாக கேரள காங்கிரஸ் நிர்வாகிகளுக்குச் செல்ல, அவர்கள் அதை ராகுல் காந்தியிடம் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தகவல் அறிந்ததும், நந்தனின் தாய்க்கு போன் செய்து, சிறுவனிடம் பேசியுள்ளார் ராகுல் காந்தி.  ‘அடுத்த முறை கேரளா வரும் போது, நிச்சயம் உன்னைச் சந்திக்கிறேன்’ என நந்தனுக்கு வாக்களித்துள்ளார். இதில் குஷியான அந்தச் சிறுவன், நேற்று அவனது தந்தையின் ஃபேஸ்புக் பக்கம் மூலம் ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்து ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.

கேரளாவில் நாளையுடன் பிரசாரம் ஓய்வடையவுள்ள நிலையில், இன்று ராகுலுக்கு ஆதரவாக அவரின் சகோதரி பிரியங்கா காந்தி பிரசாரம் மேற்கொண்டார். கேரளா வரும் பிரியங்காவுக்கும், நந்தன் பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. உடனடியாக சிறுவனைக் காண விரும்பிய பிரியங்கா, அவரை கன்னூர் விமான நிலையத்துக்கே வரவழைத்து சந்தித்துள்ளார். பிரியங்காவை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக, நந்தனின் தந்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் மீண்டும் கேரள சமூக வலைதளத்தை ஆக்கிரமித்துள்ளன.  

சிறுவன் நந்தனும், கேரளாவில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.