பி.எஃப் பணத்தை எடுக்க முடியாமல் தவித்த காஷ்மீர் தொழிலாளி! - லீவ் போட்டு உதவிய மும்பை போலீஸ் | Mumbai Cop Helps Man In Kashmir

வெளியிடப்பட்ட நேரம்: 19:05 (20/04/2019)

கடைசி தொடர்பு:19:05 (20/04/2019)

பி.எஃப் பணத்தை எடுக்க முடியாமல் தவித்த காஷ்மீர் தொழிலாளி! - லீவ் போட்டு உதவிய மும்பை போலீஸ்

தனது வைப்புநிதி பணத்தை எடுக்க முடியாமல் தவித்த தொழிலாளிக்கு, மும்பை போலீஸ் ஒருவர் உதவிபுரிந்த சம்பவம் நெகிழவைத்துள்ளது.

இன்ஸ்பெக்டர் ஹேமந்த்

காஷ்மீரைச் சேர்ந்தவர் சௌகத் அலி. இவர், அங்கு தனியார் கம்பெனி ஒன்றில் 2013 முதல் வேலைபார்த்துவந்துள்ளார். இதற்கிடையே, தனது மகளின் படிப்புச் செலவுக்காக அலிக்கு பணத்தேவை ஏற்பட்டிருக்கிறது. இதனால், தன் பிஎஃப் (தொழிலாளர் வைப்பு நிதி) பணத்தை எடுக்கலாம் என அதற்கு முயற்சி செய்துள்ளார். அதற்காக விண்ணப்பித்துளார். விண்ணப்பித்து பல நாள்கள் ஆகியும் எந்த முன்னேற்றமும் இல்லை. பணமும் வந்து சேரவில்லை. அதேநேரம், தனது கம்பெனியின் தலைமை அலுவலகமும், தொழிலாளர் வைப்பு நிதி ஆணையமும் மும்பையில் இருப்பதால், நேரடியாகச் செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

காஷ்மீரில் இருந்து மும்பைக்குச் சென்று வர சில ஆயிரங்கள் செலவாகும். ஆனால், அவருக்கு இருக்கும் பொருளாதாரச் சூழ்நிலையில் அது முடியாத காரியம். இதனால், தொழிலாளர் வைப்பு நிதி ஆணையத்துக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முயன்றுள்ளார். அதிலும் தோல்வி நிலவவே, வைப்பு நிதி ஆணையத்துக்கு அருகில் உள்ள சர்க்காப் காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டு, அங்கிருந்த இன்ஸ்பெக்டர் ஹேமந்த் சவாந்திடம் தனது நிலையை எடுத்துக்கூறி உதவுமாறு கேட்டுள்ளார். அலியின் நிலைமையை உணர்ந்த இன்ஸ்பெக்டர் ஹேமந்த், அவருக்கு உதவ முன்வந்துள்ளார்.

மும்பை போலீஸ்

பின்னர், தனது வேலை நேரத்தில் லீவ் எடுத்துக்கொண்டு, அருகில் உள்ள வைப்பு நிதி ஆணையத்துக்குச் சென்று, அலியின் விண்ணப்பத்தில் என்ன பிரச்னை என்று விசாரித்துள்ளார். விசாரித்த பின், மீண்டும் புது விண்ணப்பம் ஒன்றை வாங்கி, அதை அலிக்கு அனுப்பி பூர்த்திசெய்து அனுப்புமாறு கூறியதுடன், பணம் தாமதம் ஆனதுக்கான காரணத்தையும் எடுத்துக்கூறியுள்ளார்.  பின்னர், அலி பூர்த்திசெய்து அனுப்பிய விண்ணப்பத்தை அலியின் கம்பெனிக்குக் கொண்டுசென்று, முறையான நடவடிக்கை எடுத்து, கொஞ்ச நாள்களில் அவருக்கு பணம் கிடைக்கவைத்துள்ளார். இன்ஸ்பெக்டர் ஹேமந்த் லீவ் எடுத்தற்கான காரணம் தெரியவரும்போது, இந்தச் செயல் வெளியில் தெரிந்துள்ளது. தற்போது, இன்ஸ்பெக்டர் ஹேமந்த்தை மகாராஷ்டிரா போலீஸ் உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர். 

``ஒரு முறை மும்பை சென்றுவர வேண்டுமானால், குறைந்தது 10 ஆயிரம் வரை செலவாகும். ஆனால், அவ்வளவு பணம் என்னால் செலவு செய்ய முடியாது. மேலும், நான் ஒருமுறைகூட மும்பைக்கு வந்ததில்லை. அதனால்தான் தேடிப்பிடித்து காவல் நிலையத்துக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தேன். ஹேமந்த் சாரை இதற்கு முன் நான் பார்த்ததுகூட கிடையாது. இருப்பினும் எனக்காக உதவுவதற்காக முன்வந்தார். அவருக்கும், மும்பை போலீஸுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்" என நெகிழ்ச்சி பொங்கக் கூறியுள்ளார் அலி. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க