`தீவிரவாதிபோல் நடத்துகிறார்கள்; இதற்கு சுட்டுக் கொன்றிருக்கலாம்!' - கண்ணீர்விட்ட உ.பி முன்னாள் அமைச்சர் | Former UP Minister Azam khan breaks down in public rally

வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (20/04/2019)

கடைசி தொடர்பு:20:57 (20/04/2019)

`தீவிரவாதிபோல் நடத்துகிறார்கள்; இதற்கு சுட்டுக் கொன்றிருக்கலாம்!' - கண்ணீர்விட்ட உ.பி முன்னாள் அமைச்சர்

நாட்டுக்கு எதிரானவனாகவும் தீவிரவாதிபோலவும் தாம் நடத்தப்படுவதாக, உத்தரப்பிரதேச முன்னாள் அமைச்சரும் சமாஜ்வாதிக் கட்சியின் மூத்த தலைவருமான ஆசம் கான் பொதுக்கூட்ட மேடை ஒன்றில் கண்ணீர்விட்டார். 

`தீவிரவாதி போல் நடத்துகிறார்கள்!' - கண்ணீர்விட்ட ஆசம் கான்

உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதியில் சமாஜ்வாதிக் கட்சி சார்பில் அம்மாநில முன்னாள் அமைச்சர் ஆசம் கான் போட்டியிடுகிறார். பி.ஜே.பி சார்பில் நடிகை ஜெயப்ரதா களம்காண்கிறார். ஜெயப்ரதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக 3 நாள்கள் பிரசாரம் மேற்கொள்ள ஆசம் கானுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பும் தனது கருத்துகளால் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் ஆசம் கான். ராம்பூர் தொகுதியில் மூன்றாவது கட்ட வாக்குப்பதிவு,ஏப்ரல் 23ல்  நடக்க உள்ளது. 

`தீவிரவாதி போல் நடத்துகிறார்கள்!' - கண்ணீர்விட்ட ஆசம் கான்

இந்த நிலையில், ராம்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டம்  ஒன்றில் பேசிய ஆசம் கான், ``தேச விரோதி போலவும், நாட்டுக்குத் துரோகம் இழைத்தது போலவும் என்னை நடத்துகிறார்கள். உலகில் மிகப்பெரிய தீவிரவாதிபோல என்னை இவர்கள் நடத்துகிறார்கள். இவ்வாறு என்னை நடத்துவதற்குப் பதிலாக துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருக்கலாம்'' என்று கூறி கண்ணீர்விட்டார். 

தொடர்ந்து பேசிய அவர், ``தேர்தலுக்கு முன் 3 நாள்கள் பிரசாரம் செய்ய எனக்குத் தேர்தல் ஆணையம் தடை விதித்திருக்கிறது. அவர்கள் நினைத்ததைச் செய்வதற்காக எனக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தடைக் காலத்தில் நான் எங்கும் செல்ல முடியாது. யாரையும் சந்தித்துப் பேச முடியாது. பொதுக்கூட்டங்களிலோ அல்லது பிரசாரத்திலோ நான் பேசவும் முடியாது'' என்று அவர் குறிப்பிட்டார்.