`ராகுல் சொன்னால் போதும்...' - மோடிக்கு எதிராகக் களமிறங்குவாரா பிரியங்கா காந்தி? | Happy to contest from Varanasi says Priyanka Gandhi

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (21/04/2019)

கடைசி தொடர்பு:07:25 (22/04/2019)

`ராகுல் சொன்னால் போதும்...' - மோடிக்கு எதிராகக் களமிறங்குவாரா பிரியங்கா காந்தி?

தீவிர அரசியலில் நுழையாமல் ஒதுங்கியிருந்த பிரியங்கா காந்தியை இந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது அரசியல் களத்தில் இறக்கியுள்ளது காங்கிரஸ். கடந்த ஜனவரி மாதம் உத்தரப்பிரதேசம் கிழக்குப் பகுதியின் காங்கிரஸ் பொதுச் செயலாளராகப் பிரியங்கா நியமிக்கப்பட்டதில் தொடங்கியது அவரது அரசியல் பயணம். அது முதல் தற்போது வரை நாடு முழுவதும் பல மாநிலங்களுக்குச் சென்று காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்துவருகிறார்.

பிரியங்கா காந்தி

உத்தரப்பிரதேசத்தில், தன் சகோதரர் ராகுல் காந்தியையும் தாய் சோனியா காந்தியையும் ஆதரித்துப் பிரசாரம் செய்துவருகிறார் பிரியங்கா. அவரின் பிரசாரத்துக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பிரியங்காவை அரசியலில் இறக்கியதோடு மட்டும் நிற்காமல், அவருக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் எனத் தலைமையிடம் காங்கிரஸார் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

ராகுல்

இதற்கிடையில், மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரின் பெயரை இன்னும் அறிவிக்காமல் உள்ளது காங்கிரஸ். அதனால், அந்த இடத்தில் பிரியங்கா போட்டியிடுவார் என்ற செய்தி, கடந்த சில நாள்களாக ஊடகங்களில் உலா வந்துகொண்டிருக்கிறது. இதற்கு ஏற்றார்ப்போல பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா, `மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட பிரியங்கா தகுதியானவர். அப்படி பிரியங்கா போட்டியிட்டால், அது மோடிக்கு மிகப் பெரும் சவாலாக இருக்கும்’ எனக் கூறியிருந்தார்.

பிரியங்கா

இந்நிலையில், இன்று கேரள மாநிலம் வயநாட்டில் பிரசாரம் செய்த பிரியங்காவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். மோடியை எதிர்த்து வாரணாசியில் களம் இறங்குவீர்களாக எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, ``காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சொன்னால், கட்சி விரும்பினால், மோடியை எதிர்த்து மகிழ்ச்சியாகப் போட்டியிடுவேன். இந்தத் தேர்தல் ஒன்றும் சாதாரண தேர்தல் கிடையாது. நமது நாட்டைக் காப்பாற்றக்கூடிய ஒரு தேர்தல்" என்று கூறினார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க