`கோகாய் மீது குற்றம் சுமத்தினால் 1.5 கோடி தருவோம்!’- உச்சநீதிமன்ற வழக்கறிஞரின் பதிவால் சர்ச்சை | SC lawyer Utsav Bains Was offered Rs 1.5 crore to spoil image of Ranjan Gogoi

வெளியிடப்பட்ட நேரம்: 13:55 (22/04/2019)

கடைசி தொடர்பு:13:55 (22/04/2019)

`கோகாய் மீது குற்றம் சுமத்தினால் 1.5 கோடி தருவோம்!’- உச்சநீதிமன்ற வழக்கறிஞரின் பதிவால் சர்ச்சை

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் வன்கொடுமை புகார் சுமத்தினால் தனக்கு 1.5 கோடி தருவதாக சிலர் கூறியதாக வழக்கறிஞர் ஒருவர் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.

ரஞ்சன் கோகாய்

உச்ச நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்த 35 வயதான பெண் ஒருவர் கடந்த 19-ம் தேதி மாலை உச்ச நீதிமன்றத்தைச் சேர்ந்த 22 நீதிபதிகளுக்கு ஒரு வாக்குமூலத்தை அனுப்பியிருந்தார். அதில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயால் தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்தச் சம்பவத்தினால் தானும் தன் குடும்பமும் மிரட்டப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பான வழக்கை மறுநாள் 20-ம் தேதி காலை உச்ச நீதிமன்ற விடுமுறை கால அவசர அமர்வு விசாரித்தது. அப்போது பேசிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், `நான் 20 வருடமாகச் சுயநலமற்ற சேவை செய்துள்ளேன். என் மீதான குற்றச்சாட்டு வேதனையளிக்கிறது. அடுத்த வாரம் சில முக்கிய வழக்குகளைக் கையாள இருக்கிறேன். அதைத் தடுக்கும் முயற்சியாகவே இதைப் பார்க்கிறேன். என்னிடம் இருந்து பணம் பிடுங்க நினைத்து முடியாததால் இந்தப் புகாரைக் கொடுத்துள்ளனர். 20 வருடங்களாகத் தூய்மையாகப் பணியாற்றியதற்கான அங்கீகாரமாகவே இந்தப் புகாரைக் கருதுகிறேன்' எனத் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக  உட்சவ் பெயின்ஸ் (Utsav Bains) என்ற வழக்கறிஞர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவு பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதில், `உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு ஆதரவாக நீதிபதியை எதிர்த்து பிரஸ் கிளப் ஆஃப் இந்தியாவில் நான் பேச வேண்டும். அப்படிப் பேசினால் தனக்கு 1.5 கோடி லஞ்சம் தருவதாக ஒருவர் என்னிடம் கூறினார்.

உச்சநீதிமன்றம்

சாமியார் அசராம் பாபு வழக்கில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு ஆதரவாக நான் வாதாடினேன். அந்தப் பெண்ணின் உறவினர் எனக் கூறி அவர் என்னிடம் பேசினார். ஆனால் மற்றொரு புறம் அவர் தேர்ந்த ஏஜென்ட் போலவும் தெரிந்தார். மேலும் நீதிபதி மீது குற்றம் சுமத்திய பெண்ணுக்கும் தனக்கும் இடையே உள்ள உறவு குறித்து அவர் கூறிய தகவல்கள் ஏற்றுக்கொள்ளும் விதமாக இல்லை. அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக நான் வாதாடினால் என் வழக்கறிஞர் சம்பளமாக உடனடியாக  ஐம்பது லட்சம் வழங்குவதாகக் கூறினார். பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக நான் பிரஸ் கிளப்பில் பேச வேண்டும் எனக் குறிப்பாக தெரிவித்தார். அதை நான் மறுத்துவிட்டேன். 

பாலியல் வன்கொடுமை தொடர்பாக அவர் கூறிய தகவல்கள் சற்று சந்தேகமாக இருந்தது. அது தொடர்பாக நான் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். அந்த நபர் கூறிய தகவலில் பெரிய ஓட்டைகள் இருந்தது. இந்த வழக்கை எடுத்துக்கொள்ள மாட்டேன் என மீண்டும் நான் மறுத்தேன். உடனடியாக அவர் எனக்கு 1.5 கோடி ரூபாய் தருவதாகக் கூறினார். பிறகு நான் அவரை என் அலுவலகத்தை விட்டு வெளியேறும் படி கூறிவிட்டேன். 

இதைத்தொடர்ந்து, இது தொடர்பாக டெல்லியில் உள்ள சில நம்பத் தகுந்தவர்களிடம் நான் விசாரித்தேன். அதன் மூலம் இது தலைமை நீதிபதியைப் பதவியை விட்டு நீக்குவதற்கான செயல் எனப் புரிந்தது. நீதிபதி அளித்த தீர்ப்பின் விளைவால் ஒரு கொள்ளைக்கூட்ட தலைவன் இதைச் செய்திருக்கலாம் எனத் தோன்றியது. எனக்குக் கிடைத்த நம்பகமான தகவல்களின் மூலம் இது திட்டமிட்ட சதி எனத் தெரிகிறது. இறுதியில் இது தொடர்பாக தலைமை நீதிபதியிடம் தெரிவிக்க ஏப்ரல் 19 அன்று 7 மணியளவில் நான் அவரது வீட்டுக்குச் சென்றிருந்தேன். ஆனால், அவர் வீட்டில் இல்லை என அவரது பணியாளர்கள் என்னிடம் கூறினர்.

உட்சவ் பெயின்ஸ்

இந்த விவகாரம் தொடர்பாக தலைமை நீதிபதியைச் சந்திக்க வேண்டும் அல்லது இது குறித்து அவருக்கு ஒரு குறுஞ்செய்தியேனும் அனுப்ப வேண்டும் என அன்றைய இரவு முடிவு செய்தேன். ஆனால் அவை நடக்கவில்லை. பின்னர் இது குறித்து பிரசாந்த் பூசனையும் (வழக்கறிஞர்) சாரையும் கமினி ஜெய்ச்வாலையும் (வழக்கறிஞர்) சந்திக்க வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் மறுநாள் காலை (ஏப்ரல் 20) என் கருத்து அனைத்தும் உண்மையானது. இந்த விவகாரத்தில் நடந்த உண்மையைக் கூற முடிவு செய்து அது தொடர்பான என் வாக்குமூலத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடிவு செய்தேன். தலைமை நீதிபதியால் அதிருப்தியடைந்தவர்கள், ஊழல்வாதிகள், பெருநிறுவன ஊழல்வாதிகள் போன்றவர்கள் இணைந்து தலைமை நீதிபதியை அந்தப் பதவியிலிருந்து நீக்க சதி செய்துள்ளனர்.

நான்  இதுவரை தலைமை நீதிபதியை நேரில் சந்தித்து பேசியதில்லை. இந்த விவகாரம் தொடர்பாக நீதிபதிக்கு நெருக்கமானவர்களையும் நான் சந்தித்து பேசியதில்லை. இனி நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன் விசாரணைக்கு வரும் எந்த வழக்குகளையும் நான் வாதாடப்போவதில்லை. தலைமை நீதிபதிக்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் ஏதேனும் தொடர்பு இருப்பதாக யாரேனும் நிரூபித்தால் நான் இனி நீதிமன்றத்தில் வாதாடுவதையே விட்டுவிடுகிறேன்’ என அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது வழக்கு விசாரணை நடந்த ஏப்ரல் 20-ம் தேதியே உட்சவ் பெயின்ஸ் இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.