தொழில் தொடங்க 3 தினங்களுக்குள் அனுமதி - மத்திய அரசு அதிரடி!  | Companies may take only 3 days to register with central agencies 

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (22/04/2019)

கடைசி தொடர்பு:18:00 (22/04/2019)

தொழில் தொடங்க 3 தினங்களுக்குள் அனுமதி - மத்திய அரசு அதிரடி! 

ளிதில் தொழில் தொடங்க வாய்ப்புள்ள நாடுகளின் பட்டியலில் முதல் 50 இடங்களுக்குள் இந்தியாவைக் கொண்டு வரும் நோக்கத்தில், தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு 3 தினங்களுக்குள் மத்திய அரசுத் துறைகளில் அவர்களது நிறுவனத்தைப் பதிவு செய்து அனுமதி பெறும் வகையில், கார்ப்பரேட் நிறுவனங்களைப் போன்று அலுவலகச் செயல்பாட்டு முறைகளை எளிமைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

தொழில் நிறுவனம்

உலகில் எளிதாக தொழில்புரிவதற்கான நாடுகளின் பட்டியலை உலக வங்கி வெளியிட்டு வருகிறது. இதில், கடந்த ஆண்டு பட்டியலில் இந்தியா 77 -வது இடத்தில் இருந்தது. இந்த நிலையில், இந்தப் பட்டியலில் இந்தியாவை எப்படியும் முதல் 50 இடத்துக்குள் கொண்டு வந்து விட வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது, குறைந்தபட்சம் இன்னும் 27 இடங்களாவது முன்னுக்கு வரவேண்டும் என அது கருதுகிறது. 

இந்தியாவில், தற்போது ஒரு நிறுவனம் தொழில் தொடங்க, முதலில் பான் எண் எனப்படும் நிரந்தரக் கணக்கு எண், வரி கணக்கு எண், ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவைகள் வரி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் மற்றும் தொழிலாளர் மாநிலக் காப்பீட்டுக் கழகத்தில் பதிவு செய்து அனுமதி வாங்க வேண்டும். இதற்கு மாதக் கணக்கு ஆகிறது என்பதால்தான், புதிதாகத் தொழில் தொடங்க முன் வருபவர்கள் வெறுத்து, அதிலிருந்து பின் வாங்கி விடுகிறார்கள். இதன் காரணமாகவே, தொழில் தொடங்க அரசு அனுமதியை வாங்குவது மிகப் பெரிய கஷ்டம் என்ற பேச்சு எழுகிறது. 

ஜிஎஸ்டி

இந்த நிலையில், இந்தப் பிரச்னைகளைப் போக்கி, தொழில் தொடங்குவதற்கான மத்திய அரசின் அனுமதியை ஒற்றைச் சாளர முறையில் சுலபத்தில் பெறும் வகையிலும், அரசு தரப்பில் எதிர்கொள்ளும் சிரமங்களைக் களைவதற்காகவும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (Department for Promotion of Industry and Internal Trade), பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக நிறுவனத்தின் பதிவு நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்காக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கையொப்பத்தை டிஜிட்டல் முறையில் அளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  

ஒரு தொழில் தொடங்கத் தேவையான மின்சார இணைப்பு பெறுவது, கட்டுமானங்களுக்கான அனுமதி, கடன் பெறுதல், வரிச் செலுத்துதல் மற்றும் எல்லை தாண்டிய வர்த்தகம் ஆகிய 6 காரணிகளை அடிப்படையாக வைத்து, இந்த ஆண்டுக்கான ரேங்க் பட்டியலை உலக வங்கி தீர்மானிக்க உள்ளது. 

உலக வங்கி

எனவே, உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை இந்த 6 அம்சங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களில் கவனம் செலுத்தவும் திட்டமிட்டுள்ளதாக மத்திய கம்பெனி விவகாரத் துறை அமைச்சகத்தின் மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க