நள்ளிரவில் குழந்தையைக் கவ்விய சிறுத்தை; தாயின் அசாத்திய துணிச்சல்!- பிரமித்த ஊர் மக்கள் | Mom Fights With Leopard to save Her 18-Month-Old Baby

வெளியிடப்பட்ட நேரம்: 18:39 (22/04/2019)

கடைசி தொடர்பு:18:39 (22/04/2019)

நள்ளிரவில் குழந்தையைக் கவ்விய சிறுத்தை; தாயின் அசாத்திய துணிச்சல்!- பிரமித்த ஊர் மக்கள்

சிறுத்தைப் புலி வாயில் சிக்கிய தன் 18 மாத குழந்தையை தாய் ஒருவர் போராடி மீட்டுள்ளார்.

குழந்தை உடன் தாய் தீபாலி

புனே நகரிலிருந்து 90 கிமீ தொலைவில் உள்ளது பிம்ப்ரி சின்ச்வாட் பகுதி. மலைப்பகுதியான இங்கு கரும்பு விவசாயம் பிரதான தொழில். இதற்கிடையே சின்ச்வாட் அடுத்த தோல்வாத் கிராமத்தில் கரும்பு விவசாயத் தொழிலாளியான தீபாலி தன் 18 மாதக் குழந்தை தயனேஸ்வர் மாலி உடன் தனது குடிசைக்கு வெளியே படுத்து உறங்கியுள்ளார். நள்ளிரவில் சிறுத்தைப் புலியின் உறுமல் சத்தம் கேட்க தீபாலி பதறியடித்து எழுந்துள்ளார். அப்போது சிறுத்தைப் புலி, குழந்தையின் தலையை கவ்விக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், கையால் சிறுத்தையை அடித்துள்ளார். உடனே குழந்தையை விட்டுவிட்டு, தாயின் கையை கவ்விக்கொண்டது சிறுத்தைப் புலி. இதையடுத்து, தீபாலி கூச்சலிட்டு அருகில் இருந்தவர்களை அழைக்க மக்களின் சத்தத்தைக் கேட்டு சிறுத்தைப் புலி ஓடியுள்ளது. சிறுத்தைப் புலி கடித்ததில் தீபாலிக்கு கைகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

சிறுத்தை

இந்தப் பகுதியில் அடிக்கடி சிறுத்தைப் புலிகள் வருவது வாடிக்கையாக உள்ளது. அதனால் கூண்டு வைப்பது போன்ற தகுந்த நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என அம்மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அரசு கண்டுகொள்வதாக இல்லை எனக் குமுறுகிறார்கள் இந்தப் பகுதிவாசிகள். காயங்கள் ஏற்பட்ட நிலையில் தாயும், மகனும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தன் குழந்தையைக் காப்பாற்றுவதற்காகச் சிறுத்தை என்றுகூட பாராமல் தைரியமாக போராடி குழந்தை மீட்டெடுத்துள்ளார் தீபாலி. அவரது புகைப்படம் சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க