வலியின் சுவடாக எஞ்சி நிற்கும் இயேசு புகைப்படம் - இலங்கைத் தாக்குதலின் கோரம்! | srilankan explosion picture melted everyone

வெளியிடப்பட்ட நேரம்: 18:43 (22/04/2019)

கடைசி தொடர்பு:18:54 (22/04/2019)

வலியின் சுவடாக எஞ்சி நிற்கும் இயேசு புகைப்படம் - இலங்கைத் தாக்குதலின் கோரம்!

இலங்கைக் குண்டுவெடிப்பு தாக்குதலுக்குப் பின், அங்குள்ள தேவாலயத்தில் எடுக்கப்பட்ட இயேசு கிறிஸ்துவின் புகைப்பட்டம் காண்போரை கலங்கச் செய்யும் வகையில் அமைந்துள்ளது.

இயேசு கிறிஸ்து

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழும் நாளில் ஏராளமான உயிர்கள் இங்கே பறிபோயுள்ளன. ஈஸ்டர் திருநாளில் நடந்த இப்படியொரு கொடூர தாக்குதல் அந்த மக்களின் மனதில் ஆறாவடுவாய் நிலைகொண்டுவிட்டது. இலங்கைத் தலைநகர் கொழும்புவில் உள்ள புனித அந்தோணியர் ஆலயத்தில் முதல் குண்டு வெடித்தது. இதைத்தொடர்ந்து நீர் கொழும்புவில் உள்ள புனித செபஸ்டியன் தேவாலயம், மட்டக் களப்பில் உள்ள ஒரு தேவாலயம் மற்றும் கொழும்புவில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களான சங்கரி லா, சின்னமன் கிராண்ட், கிங்ஸ்புரி ஹோட்டல் ஆகிய 6 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதுவரை 290 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 1993-ம் ஆண்டு நடந்த மும்பைக் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு இணையானது இலங்கைக் குண்டுவெடிப்பு சம்பவம் எனக் கூறப்படுகிறது. இந்தக் குண்டுவெடிப்பு தாக்குதலில் எஞ்சியிருப்பது அந்தப் புகைப்படம்தான். அந்தப் புகைப்படம், குண்டுவெடிப்பின் கோரத்தை நம் கண்முன்னே நிறுத்துகிறது.

சோமாலியா

ஒட்டுமொத்த வலியையும் அந்தப் புகைப்படம் உணர்வுகளாகக் கடத்துகிறது. புகைப்படத்தைக் காண்பவர்கள் யாரும் எளிதில் கடந்துவிட முடியாது. `இயேசு சிலையின் மீது ரத்தத்துளிகள் படர்ந்துள்ளன’. நெகம்போ பகுதியில் உள்ள புனித செபாஸ்டின் தேவாலயத்தில் உள்ள இயேசு கிறிஸ்துவின் சிலைதான் இது. `மனிதம் மரித்துவிட்டது’ `அன்பு; அமைதி; மனிதநேயம் மறந்துவிட்டது என்பதற்கு சாட்சிதான் இந்தப் புகைப்படம்’ என்று சமூகவலைதளங்களில் தங்கள் ஆதங்கத்தைப் பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள். புகைப்படங்கள் எப்போதும் வரலாற்றில் நிகழ்ந்த கொடூர சம்பவங்களின் மிச்சங்களாய் எஞ்சி நிற்கின்றன. சோமாலியாவில் பட்டினியால் மெலிந்து சாவின் பிடியில் இருந்த குழந்தையை இரையாக்கிக்கொள்ள அருகே காத்திருக்கும் வல்லூரின் புகைப்படத்தை இன்றும் நம்மால் மறக்க முடியாது. பாலஸ்தீனத்தில் நடந்த கொடூரங்களை வெளிச்சமிட்டு காட்டும் பச்சைக் குழந்தையின் புகைப்படம். இப்படியாக எத்தனையோ புகைப்படங்கள் கோர சம்பவங்களின் வலியை நமக்குள் கடத்தினாலும் தாக்குதல்கள் என்னவோ அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன.