பாலியல் புகார் கொடுத்ததன் விளைவாக உயிருடன் எரிக்கப்பட்ட 19 வயது வங்காளதேச மாணவி! | Bangladeshi girl burnt alive for filing sexual harassment case

வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (23/04/2019)

கடைசி தொடர்பு:19:55 (24/04/2019)

பாலியல் புகார் கொடுத்ததன் விளைவாக உயிருடன் எரிக்கப்பட்ட 19 வயது வங்காளதேச மாணவி!

தனது பெற்றோரின் உதவியுடன் சம்பவம் நடந்த அன்றே தலைமை ஆசிரியர் மீது உள்ளூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மாணவி தனக்கு நடந்த துன்புறுத்தலை பற்றி காவல்துறையிடம் எடுத்துச்சொல்ல சரியான சூழலை அவர்கள் ஏற்படுத்தித்தரவில்லை. மாறாக அங்கிருந்த காவல் அதிகாரி, மாணவி சொல்வதை வீடியோ எடுத்திருக்கிறார். முகத்தை மறைத்தபடி , மிகுந்த மனவேதனையுடன் மாணவி நடந்ததை சொல்ல, 'இது ஒரு பெரிய விவகாரமே இல்லை' என்று சொல்லி முகத்திலிருந்து கையை எடுக்குமாறு மாணவியை அதட்டியிருக்கிறார் காவல் அதிகாரி.

பாலியல் புகார் கொடுத்ததன் விளைவாக உயிருடன் எரிக்கப்பட்ட 19 வயது வங்காளதேச மாணவி!

முற்போக்கான பல சமூகங்களிலும்கூடப் பெண்கள் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்டால், அதை வெளியே சொல்வதும், எதிர்த்து நின்று போராடுவதும் அரிதினும் அரிது. ஒரு பிற்போக்கான சூழலில், வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவுக்குத் தெற்கே 160 கி.மீ தூரத்தில் உள்ள ஃபெனி என்ற கிராமத்தில் வளர்ந்தவர் அந்த இஸ்லாமியப் பெண். பள்ளியில் தனக்கு நடந்த பாலியல் துன்புறுத்தலைத் தைரியமாக வெளியே சொல்லி, அதற்காக நீதி கேட்டுப் போராடிய பெண்ணை, அந்தப் பள்ளி வளாகத்திலேயேவைத்து உயிருடன் எரித்திருக்கிறார்கள், ஈவு இரக்கமற்ற கொடூரர்கள் சிலர்.

அந்த 19 வயதான பெண், தன் ஊரான `ஃபெனி'யில் ஓர் இஸ்லாமிய பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார். அந்த இஸ்லாமிய பள்ளியின் தலைமை ஆசிரியர், அந்த 19 வயது மாணவியைத் தனது அறைக்கு வரவழைத்திருக்கிறார். பின்னர் மாணவியிடம் தவறாக நடக்க முயன்றிருக்கிறார். நிலைமை மேலும் மோசமடைவதற்குள், அங்கிருந்து வெளியேறியிருக்கிறார் அந்த மாணவி. பொதுவாக இந்தியத்  துணைக்கண்டம் போன்ற பிற்போக்கான சமூகச் சூழலில் வளர்ப்பவர்கள், தங்களுக்கு நேர்ந்த பாலியல் அநீதிகளை வெளியில் சொல்வதை `இழுக்கு' என்றும், `அவமானம்' என்றும் கருதி மூடி மறைத்துவிடுவர். பொதுவெளியில் சொல்ல இயலாமல் தற்கொலை செய்துகொள்பவர்கள் அதிகம்.

பாலியல் வன்முறை

ஆனால், அந்த மாணவி முடங்கிவிடவில்லை. தனது பெற்றோரின் உதவியுடன் சம்பவம் நடந்த அன்றே தலைமை ஆசிரியர் மீது உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மாணவி தனக்கு நடந்த துன்புறுத்தலைப் பற்றிக் காவல் துறையிடம் எடுத்துச்சொல்லச் சரியான சூழலை அவர்கள் ஏற்படுத்தித் தரவில்லை. மாறாக அங்கிருந்த காவல் அதிகாரி, மாணவி சொல்வதைக் காணொளி எடுத்திருக்கிறார். முகத்தை மறைத்தபடி, மிகுந்த மனவேதனையுடன் மாணவி நடந்ததைச் சொல்ல, `இது ஒரு பெரிய விவகாரமே இல்லை' என்று சொல்லி முகத்திலிருந்து கையை எடுக்குமாறு மாணவியை அதட்டியிருக்கிறார் காவல் அதிகாரி.     

மாணவி புகார் கொடுத்ததைத் தொடர்ந்து, தலைமை ஆசிரியர் அன்றே கைதுசெய்யப்பட்டார். அதன்பின்புதான் நிலைமை மேலும் மோசமாகத் தொடங்கியது. கைதுசெய்யப்பட்ட இஸ்லாமிய பள்ளியின் தலைமை ஆசிரியரை விடுவிக்கக்கோரி, அந்தப் பள்ளியில் பயிலும் இரு மாணவர்களும், உள்ளூர் அரசியல்வாதிகளும் இணைந்து போராட்டம் நடத்தினர். இதன்பின்னர் பலர், மாணவி மேல்தான் தவறு என்று பேச ஆரம்பித்தனர். அந்த மாணவியின் குடும்பத்தார் அவரின் பாதுகாப்பு குறித்து கவலையுற்றனர். பாலியல் தொல்லை சம்பவம் நடந்து 11 நாள்கள் கழித்து, ஏப்ரல் 6-ம் தேதி அன்று அந்தப் பெண் தன்னுடைய இறுதியாண்டு பரீட்சையை எழுதச் சென்றிருக்கிறார். மாணவியுடன் வந்த அவருடைய அண்ணன் பள்ளி வளாகத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. ``பள்ளி வளாகத்துக்குள் செல்ல என்னை அனுமதித்திருந்தால், நிச்சயம் என் சகோதரிக்கு எதுவும் ஆகியிருக்காது" என்றார் மாணவியின் அண்ணன்.

பாதிக்கப்பட்ட மாணவியுடன் படிக்கும் சக-மாணவி, `தங்களின் தோழி ஒருத்தியைச் சிலர் அடித்துத் துன்புறுத்துகிறார்கள்’ என்று கூறி , பாதிக்கப்பட்ட பெண்ணைப் பள்ளியின் மேல்தளத்துக்கு அழைத்துச்சென்றிருக்கிறார். அங்கே புர்கா போட்டிருந்த சிலர் பாதிக்கப்பட்ட மாணவியைச் சூழ்ந்துள்ளனர். தலைமை ஆசிரியர் மீது கொடுக்கப்பட்டிருந்த புகாரைத் திரும்பப் பெறுமாறு வற்புறுத்தியிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மாணவி வழக்கைத் திரும்பப்பெற மறுத்தவுடன், சுற்றியிருந்தவர்கள் மாணவிமேல் மண்ணெண்ணெய்யை ஊற்றி எரித்தனர். 

பாலியல் வன்முறை

பாதிக்கப்பட்ட மாணவி, 80 சதவிகிதம் உடல் எரிந்தநிலையில் உயிருடன் மீட்கப்பட்டார். உள்ளூர் மருத்துவமனையில் போதிய சிகிச்சை வசதி இல்லாததினால், டாக்கா மருத்துவக் கல்லூரிக்கு ஆம்புலன்ஸில் அழைத்துச்செல்லப்பட்டார். ஆம்புலன்ஸிலேயே தான் உயிரிழந்துவிடுவோமோ என்ற பயத்தில் தன்னுடைய அண்ணனின் செல்பேசியில் தனது வாக்குமூலத்தைப் பதிவுசெய்திருக்கிறார். ``என்னிடம் தவறாக நடந்துகொண்ட தலைமை ஆசிரியரை எதிர்த்து நீதி கேட்டு என் இறுதிமூச்சுவரை நான் போராடுவேன்"  என்று சொன்ன மாணவி, தான் எப்படிப் பள்ளி மேல்தளத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டு எரிக்கப்பட்டாள் என்பதையும் வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார். டாக்கா மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட 19 வயது மாணவி, 10 ஏப்ரல் 2019 அன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

வங்காளதேசத்தின் காவல் துறை விசாரணை ஆணைய அதிகாரி பனாஜ் குமார் மஜும்தார் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், ``பாதிக்கப்பட்ட மாணவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து, அதை ஒரு தற்கொலைபோலச் சித்திரிக்க முயன்றிருக்கிறார்கள். எரிக்கப்பட்ட மாணவியின் தலையைக் கொலையாளிகளில் ஒருவன் பிடித்திருந்ததால், அவர் தலையில் மண்ணெண்ணெய் ஊற்றப்படவில்லை. அதனால்தான் அவரது தலை எரியவில்லை" என்றவர், ``இதுவரை 15 பேரைக் கைதுசெய்துள்ளோம். அதில் 7 பேர் நேரடியாகக் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள். மேலும், தலைமை ஆசிரியருக்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் இருவரையும் கைதுசெய்துள்ளது காவல்துறை. மாணவியின் புகாரைக் காணொளி எடுத்த காவல் அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டு வேறு துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார்" என்றார்.

வங்காளதேசத்தின் பிரதம மந்திரி ஷேக் ஹசினா மாணவியின் பெற்றோரைச் சந்தித்து, ``குற்றவாளிகள் அனைவரும் கடுமையாகத் தண்டிக்கப்படுவர். குற்றம் செய்த எவரையும் தப்பவிடமாட்டோம்" என்று கூறியுள்ளார்.  வங்காளதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாகச் சமூக வலைதளங்களில் மக்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். ஆனால், வங்காளதேசத்தில் செயல்படும் `மகிளா பரிஷத்' என்ற பெண்கள் அமைப்பின் தகவல்படி, 2018-ம் ஆண்டில் அந்த நாட்டில் மட்டும் 940 பாலியல் வன்முறைகள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  


டிரெண்டிங் @ விகடன்