மருத்துவமனையிலும் மதப் பிரசாரம்! - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி | IAS officer Umashankar removed as poll observer in MP

வெளியிடப்பட்ட நேரம்: 12:43 (23/04/2019)

கடைசி தொடர்பு:12:43 (23/04/2019)

மருத்துவமனையிலும் மதப் பிரசாரம்! - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி

பொதுமக்களிடம் மதப் பிரசாரம் செய்ததாக எழுந்த புகாரை அடுத்து, தமிழக ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர், தேர்தல் கண்காணிப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தேர்தல்

இந்தியாவில் ஏழு கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுவருகிறது. மூன்றாவது கட்டமாக இன்று, 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. மத்தியப்பிரதேசத்தில், நான்கு கட்டங்களாக ஏப்ரல் 29, மே 6, மே 12, மே 19 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், மத்தியப்பிரதேசம் சித்தி மக்களவைத் தொகுதியில் தேர்தல் கண்காணிப்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். 

உமாசங்கர்

 உமாசங்கர், தலைவலிக்காக சித்தி மாவட்ட அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு இருந்த நோயாளிகளிடம் அவர் மதப் பிரசாரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதை அறிந்த மருத்துவர்கள் அவரிடம் வந்து, ‘ உங்களுக்கே உடல்நிலை சரியில்லை, இந்நிலையில் நீங்கள் இவ்வாறு செய்ய வேண்டாம். ஓய்வெடுங்கள்’ எனக் கூறியுள்ளனர். அதை ஏற்காத அதிகாரி, மீண்டும் மதப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதுமட்டுமல்லாது, தான் தங்கியுள்ள இடத்தில் இருப்பவர்களிடமும் மதப் பிரசாரம் செய்ததாக எழுந்த புகாரை அடுத்து, மத்தியப்பிரதேச தலைமை தேர்தல் அதிகாரி காந்தா ராவ், ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கரை தேர்தல் கண்காணிப்பாளர் பணியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ தேர்தல் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள், மதப் பிரசாரம் போன்றவற்றைச் செய்யக் கூடாது. ஆனால் உமாசங்கர், தான் தங்கியிருந்த இடத்தில் மதப் பிரசாரம் செய்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்திய பிறகு, அந்த அறிக்கை இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், சித்தி தொகுதியில் புதிய தேர்தல் கண்காணிப்பாளராக ஹிமாச்சலப்பிரதேசத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி, சந்தராகர் பாரதி நியமிக்கப்பட்டுள்ளார்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர், மதப் பிரசாரம் செய்வது இது முதல்முறையல்ல. 2015-ம் ஆண்டு, அவர் இதேபோன்ற செயலில் ஈடுபட்டு வந்ததால், தமிழக அரசு அவரைக் கடுமையாகக் கண்டித்தது என்பது குறிப்பிடத்தக்கது.