`வெடிகுண்டைவிட வாக்கு அட்டையே பலம் வாய்ந்தது!’- வாக்களித்த பின் மோடி பேட்டி | PM Modi casts his vote in Ahmadabad

வெளியிடப்பட்ட நேரம்: 14:25 (23/04/2019)

கடைசி தொடர்பு:14:35 (23/04/2019)

`வெடிகுண்டைவிட வாக்கு அட்டையே பலம் வாய்ந்தது!’- வாக்களித்த பின் மோடி பேட்டி

இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன. அதில் தமிழகமும் அடக்கம். இந்த நிலையில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. மொத்தம் 15 மாநிலங்களில் 116 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு ஜரூராக நடக்கிறது. பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆனாலும், மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். 

மோடி

மூன்றம் கட்ட தேர்தல் பட்டியலில், பிரதமர் நரேந்திரமோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலமும் அடங்கியிருக்கிறது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கை செலுத்துவதற்காக இன்று காலை காந்திநகர் வந்தடைந்தார். அங்கே தன்னுடைய தாய் ஹிராபாவைச் சந்தித்து ஆசி பெற்ற பின்னர், அகமதாபாத்தில் இருக்கும் ரனிப் வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர், ``தீவிரவாதிகளின் ஆயுதம் வெடிகுண்டு என்றால், ஜனநாயகத்தின் ஆயுதம் வாக்கு அட்டை ஆகும். என்னைக்கேட்டால், வெடிகுண்டைவிட வாக்கு அட்டையே பலம் வாய்ந்தது என்பேன். வாக்கு செலுத்திய பின், கும்பமேளாவில் மூழ்கி எழுந்ததைப் போன்ற புனித உணர்வு ஏற்பட்டிருக்கிறது” என்றார். 

அதேபோல, காந்திநகர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா, தனது மனைவி சோனால் ஷாவுடன் நரன்புரா வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார்.