`இடறிய கால்; பறிபோன உயிர்!' - விளையாட்டாக தற்கொலை செய்துகொள்ள நினைத்தவருக்கு நேர்ந்த சோகம் | Youth found dead after his suicide prank goes wrong

வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (23/04/2019)

கடைசி தொடர்பு:14:50 (23/04/2019)

`இடறிய கால்; பறிபோன உயிர்!' - விளையாட்டாக தற்கொலை செய்துகொள்ள நினைத்தவருக்கு நேர்ந்த சோகம்

தன் நண்பருடன் வீடியோ கால் பேசும்போது, விளையாட்டாகத் தற்கொலை செய்துகொண்ட ஆந்திர வாலிபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை

ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு அருகில் உள்ள திருச்சானூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவா. 23 வயதான இவர், அதே பகுதியில் மெக்கானிக்காக பணியாற்றிவந்துள்ளார். சிவா, சில வருடங்களாகவே மதுப் பழக்கத்திற்கு அடிமையானார்.  தற்போது தேர்தல் சமயம் என்பதால், பல கட்சிக்காரர்கள் மூலமாக கடந்த ஒரு வாரமாகத் தொடர்ந்து மது அருந்தியுள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில், திருப்பதியில் உள்ள தன் நண்பருக்கு வீடியோ கால் செய்து போனை ஒரு இடத்தில் நிலையாக வைத்துவிட்டு, தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகக் கூறியுள்ளார். முதலில், அவரது வீட்டில் இருந்த சேலையின் ஒரு முனையை மின்விசிறியில் கட்டிவிட்டு, மற்றொரு முனையைத் தன் கழுத்தில் கட்டியுள்ளார்.

இதைக் கண்டதும், சிவாவின் நண்பர் உடனடியாக காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். பின்னர், சிவா நீண்ட நேரமாகத் தன் கழுத்தில் கட்டப்பட்ட சேலையில் தூக்கில் தொங்குவதுபோல பாவனை செய்துள்ளார். ஒரு கட்டத்தில், கட்டிலில் நின்றிருந்த அவர் தவறுதலாகக் கீழே விழுந்துள்ளார். மீண்டும் கட்டிலின்மீது கால்வைத்து ஏற சிவா முயன்றுள்ளார். ஆனால் அவரால் அது முடியாமல் போகவே, சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்துள்ளார்.

சிவா

அதற்குள் சிவாவின் நண்பரும் திருச்சானூர் இன்ஸ்பெக்டர் அசோக்குமாரும் அவரது வீட்டுக்கு விரைந்து வந்துள்ளனர். ஆனால் சிவா, தான் இருந்த அறையின் கதவை உட்புறமாகப் பூட்டியிருந்தார். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, உயிரற்ற நிலையில் சிவா தூக்கில் தொங்கியுள்ளார். இதையடுத்து, அவரின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர், பிரேதப் பரிசோதனை முடிந்த பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர். 

இதுபற்றிப் பேசிய திருச்சானூர் இன்ஸ்பெக்டர் அசோக் குமார், ‘பதிவான வீடியோவைப் பார்க்கும்போது, சிவா இதை விளையாட்டாகவே செய்துள்ளார். ஆனால், அதுவே அவரின் உயிரைப் பறித்துவிட்டது. சிவா குறித்து அவரின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரித்தபோது, அனைவரும் அவரை நல்லவிதமாகவே  கூறுகின்றனர். இதுவரை சிவா மீது எந்த குற்ற வழக்குகளும் பதிவாகவில்லை. அவர் அதிக மதுபோதையில் இருந்த காரணத்தினால்தான் இப்படி நிகழ்ந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்றுவருகிறது’ எனத் தெரிவித்துள்ளார். இளைஞர் சிவா தற்கொலைசெய்துகொண்ட வீடியோ, சமூக வலைதளத்தை ஆக்கிரமித்துள்ளது.