நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்! | SC issues notice to rahul gandhi on contempt of court case

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (23/04/2019)

கடைசி தொடர்பு:19:00 (23/04/2019)

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

ராகுல் காந்தி

மீப காலமாகவே பா.ஜ.க-வுக்கு எதிரான முக்கிய குற்றச்சாட்டாக ரஃபேல் விவகாரத்தைக் கையிலெடுத்தார் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி. இதுகுறித்தான பல்வேறு விவாதங்களும், பல்வேறு விளக்கங்களும் இருதரப்பினராலும் தொடர்ந்து கூறப்பட்டது. பிரசார கூட்டங்கள், நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம், பத்திரிகையாளர் சந்திப்பு என்று கடந்த சில மாதங்களாக ரஃபேல் விவகாரம் பேசப்படாத இடமே இல்லை. அப்படிப் பேசிய ஒரு விஷயம்தான் இப்பொழுது ராகுல் காந்திக்கு வினையாக முடிந்திருக்கிறது.

ரஃபேல் விவகார வழக்கில், பாதுகாப்பு அமைச்சகத்தின் சில முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டதாகவும், திருடப்பட்ட ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது எனவும் அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது, இந்த வழக்கில் கடந்த 10-ம் தேதி தீர்ப்பளித்த நீதிபதிகள், ஆவணங்கள் எங்கிருந்து வந்தவை என்பதைவிட, அவை சொல்லும் உண்மைகளே முக்கியமானவை. ஆகையால் அந்த ஆவணங்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கூறினர். 

உச்ச நீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்ட சிறிது நேரத்தில், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, உச்ச நீதிமன்றமே சொல்லிவிட்டது, ``சவுக்கிதார் சோர் ஹை" அதாவது காவல்காரனே திருடன் என்று உச்சநீதிமன்றம் சொல்கிறது என்று சொல்லிவிட்டார். (தேர்தல் சமயம் பிரதமர் மோடி உட்படப் பா.ஜ.க கட்சியினர் பலர், அவர்களை நாட்டின் காவலாளிகள் (சவுக்கிதார்) என்று அறிவித்துக்கொண்டனர்).

உச்ச நீதிமன்றம்

ராகுல் காந்தியின் இந்தப் பேச்சு ஆளும் கட்சியினரின் பலத்த எதிர்ப்பைச் சந்தித்தது. ஆவணங்களை அனுமதிக்கிறோம் என்று மட்டுமே உச்ச நீதிமன்றம் சொல்லியதே தவிர, யாரையும் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கவில்லை, இந்த நிலையில், ராகுல் காந்தி நீதிமன்றம் சொன்னதாக பொய் பரப்புரை செய்கிறார் என்று பா.ஜ.க  எம்.பி மீனாட்சி லோகி, ராகுல் காந்திக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இதைத் தொடர்ந்து, ராகுல் காந்தி தரப்பிலிருந்து, `` உச்சநீதிமன்றம் கூறியிருப்பதை முழுவதுமாக படிக்காமல், தான் தவறாக அப்படிப் பேசிவிட்டதாகவும், பிரசார சூட்டில் தன்னை அறியாமல் அத்தகைய வார்த்தைகள் உபயோகப்படுத்தியதாகவும், நீதிமன்றத்தை அவமதிக்கும் எந்த எண்ணமும் தனக்கு இருக்கவில்லை என்றும் இதற்கு வருந்துவதாகவும் கூறி விளக்கமளிக்கப்பட்டது. மேலும், இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யுமாறும் கோரப்பட்டது.

இந்த வழக்கை இன்று விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, இரு தரப்பு வாதங்களையும் கேட்டனர். பா.ஜ.க எம்.பி தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், ராகுல் காந்தி வருந்துகிறாரே தவிர மன்னிப்புக் கேட்கவில்லை என்று சுட்டிக்காட்டினார். அதேசமயம் ராகுல் காந்தி தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், பிரதமர் மோடியும்கூட, உச்ச நீதிமன்றம்தான் குற்றமற்றவர் என்று சொல்லிவிட்டதாக வெளியிடங்களில் பேசியதாக சுட்டிக்காட்டி, இந்த வழக்கே அரசியல் நோக்கத்தில் தொடரப்பட்டது என்று வாதிட்டார். 

இதைத் தொடர்ந்து தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது. கூடுதலாக ரஃபேல் வழக்கு நடக்கும் அதே ஏப்ரல் 30-ம் தேதிக்கு இந்த வழக்கும் ஒத்திவைக்கப்பட்டது.


அதிகம் படித்தவை