`50 லட்சம், அரசுப் பணி, வீடு வழங்கணும்!'- பில்கிஸ் பானோ வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி | Gujarat riot victim bilkis bano awarded 50 lakhs compensation by SC

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (23/04/2019)

கடைசி தொடர்பு:19:20 (23/04/2019)

`50 லட்சம், அரசுப் பணி, வீடு வழங்கணும்!'- பில்கிஸ் பானோ வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி

குஜராத் மாநிலத்தில், 2002-ம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தின்போது ஐந்து மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானோ, குஜராத் கலவரக் கும்பலால் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார். இந்த வன்முறைச் சம்பவத்தில் அவர் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர்.

பில்கிஸ்

பின்னர், குஜராத் அரசு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஐந்து லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கியது, தான் அனுபவித்த துயரங்களுக்கும், தன் மீதான வன்முறைக்கும், தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கும், அலைக்கழிப்புக்கும் இது மிகவும் சொற்பமான தொகை என்று கூறி, பானோ இதைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். இதுகுறித்து வாதாடிய பில்கிஸ் பானோவின் வழக்கறிஞர், அவர் அடைந்த பாதிப்புகளுக்கு அவருக்கான நிவாரணம் ஐந்து லட்சம் என்பது மிகக் குறைவு எனவும், அதை அதிகமாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பில்கிஸ்

இதைத் தொடர்ந்து இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடங்கிய மூவர் அமர்வு, பானோ தங்குவதற்குகூட இடமில்லாமல், நாடோடியாக ஒரு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்று அவரது துயரங்களை அறிந்துகொண்ட உச்சநீதிமன்றம், தற்போது அந்தப் பெண்ணுக்கு ஐம்பது லட்சம் ரூபாய் அளிக்க வேண்டும் என்று குஜராத் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேற்கொண்டு அவருக்கு அரசுப் பணியும், தங்குவதற்கான வீடும் அளிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவில் சொல்லப்பட்டுள்ளது.

பில்கிஸ்

இவ்வழக்கில் குற்றத்தை மறைத்ததாக நிரூபிக்கப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்பட்ட சில அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்காமல்  குஜராத் அரசு காலம் தாழ்த்தி வருகிறது என்று எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த குஜராத் அரசு, இவ்வழக்கில் தவறிழைத்த அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், ஓய்வு பெற்ற நான்கு அதிகாரிகளுக்கு பென்ஷன் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், பணியிலிருக்கும் ஒருவர் பதவி இறக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.