"மோடி சொன்னதற்காக யோகா செய்ய வேண்டாம்!" - யார், ஏன் சொன்னார்கள்?! | Vice president Venkaiah Naidu insisted the hands of youth in economic development 2020

வெளியிடப்பட்ட நேரம்: 19:23 (23/04/2019)

கடைசி தொடர்பு:19:23 (23/04/2019)

"மோடி சொன்னதற்காக யோகா செய்ய வேண்டாம்!" - யார், ஏன் சொன்னார்கள்?!

இன்றைய தேதியில் நமது நாட்டில் 900-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. ஆனால், உலகளவில் சிறந்த 200 பல்கலைக்கழகங்களில் அவற்றில் ஒன்றுகூட இல்லை.

"யோகா செய்வது என்பது இந்திய பிரதமர் நரேந்திர  மோடி சொன்னதற்காக அல்ல..." எனத் துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு பேசியிருக்கிறார். ஆந்திர மாநிலம் ஸ்ரீ சிட்டியில் இருக்கும் இந்தியத் தகவல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வெங்கய்ய நாயுடு

விழாவில் பேசிய அவர், "முன்னொரு காலத்தில், உலகின் முன்னணிப் பொருளாதார நாடாக இந்தியா இருந்தது. நாளந்தா, தட்சஷீலா, புஷ்பகிரி உள்ளிட்ட இந்தியக் கல்வி மையங்களுக்கு உலகின் பல்வேறு பக்கங்களிலிருந்து அறிஞர்கள் வந்தார்கள். இது, மீண்டும் முன்னணிப் பொருளாதார நாடாக வளரும் காலம். நடப்பு நிதியாண்டிலும் வருகிற நிதியாண்டிலும் முறையே 7.3 மற்றும் 7.5 சதவிகிதப் பொருளாதார வளர்ச்சியை நமது தேசம் எட்டும் எனச் சர்வதேச கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. இந்தக் காலகட்டத்தில் பலவித வாய்ப்புகளையும் சவால்களையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. இந்தியாவின் இந்தப் பொருளாதார பரிணாம வளர்ச்சியில் இளைஞர்களின் பங்குதான் அதிகமிருக்கும். அதிர்ஷ்டவசமாக இந்தத் தேசத்தின் 65 சதவிகித மக்கள் 35 வயதுக்கும் குறைவானவர்கள்தான். அபரிமிதமான பொருளாதார வளர்ச்சியை எட்ட இந்த இளைஞர்களுக்குப் பயிற்சி அவசியமாக இருக்கிறது. இத்தகைய பயிற்சியை வழங்குவதில் பல்கலைக்கழகங்கள் மற்றும் இதர கல்வி நிறுவனங்களின் பங்கு முக்கியமானது.

யோகா செய்யும் மோடிஇன்றைய தேதியில் நமது நாட்டில் 900-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. ஆனால், உலகளவில் சிறந்த 200 பல்கலைக்கழகங்களில் அவற்றில் ஒன்றுகூட இல்லை. வெறுமனே கல்வி நிலையங்களை உருவாக்கிக் கொண்டிருப்பது மட்டும் போதாது. எண்ணிக்கையைவிடத் தரம்தான் முக்கியம்.  உயர்கல்வியில் மாற்றம் கொண்டு வந்தால் மட்டுமே, உலகளவில் 100 தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் நமது தேசமும் இடம்பெறுவது சாத்தியமாகும். நமது கரங்களில் எத்தனை பட்டங்கள் இருக்கின்றன என்பதைவிட ஒரு செயலைச் செய்து முடிக்க நமது மூளையில் என்ன திறன் இருக்கிறது என்பதே முக்கியமானது. இந்தச் சூழலில், தொழில்நுட்ப வளர்ச்சி தீர்மானிக்க முடியாத அளவுக்கு இருக்கும்போது நாமும் எதற்கும் தயாராக இருக்க வேண்டும். அப்படி எட்டப்படும் பொருளாதார வளர்ச்சி அனைவருக்குமானதாக இருக்க வேண்டும். இன்றளவும் தேசத்தின் 65 சதவிகித மக்கள் கிராமப்புறங்களில்தான் வசிக்கிறார்கள். இந்தத் தேசம் எட்டவிருக்கும் பொருளாதார வளர்ச்சியானது, கிராமங்களும் நகரங்களும் ஒரே அளவிலான கல்வி, சுகாதார வளர்ச்சியை எட்டச் செய்வதாக இருக்க வேண்டும். இதனை அரசு மட்டுமே செய்து முடிக்க வேண்டும் என்பது இயலாத காரியம். இளைஞர்கள் தாங்கள் சார்ந்துள்ள சமூகத்தில் குழுக்களாக ஒன்றிணைந்து வளர்ச்சியை எட்ட வேண்டும், மற்ற எந்தத் தேசத்தையும்விட இங்கே உழைக்கும் மக்கள் அதிகம் என்பதால் இப்படியான திட்டமிட்ட வளர்ச்சியை எட்டுவது சாத்தியம்" என்று அவர் பேசினார். 

மேலும், "இதற்குப் புத்திக்கூர்மை மட்டுமல்லாமல் இன்றைய இளைஞர்களுக்கு உடலளவிலும் மனதளவிலும் அதிக வலு தேவைப்படுகிறது. அதற்கு அவர்கள் யோகா செய்ய வேண்டும். யோகா செய்வது என்பது இந்திய பிரதமர் நரேந்திர  மோடி சொன்னதற்காக அல்ல... இளைஞர்கள் தங்களை மனதளவில் உடலளவில் வலுப்படுத்திக்கொள்ள யோகா மிகவும் உதவியாக இருக்கும்" என்று அவர் பேசியிருக்கிறார். 

யோகா உடலை மட்டுமல்ல... உள்ளத்தையும் வலுப்படுத்தும் என்பது முதியோர்களின் வாக்கு!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்