ராகுல் காந்தி என்ட்ரி! - வயநாட்டில் அதிகரித்த வாக்குப் பதிவு எண்ணிக்கை | Rahul Gandhi entry boost vote percentage in Wayanad

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (23/04/2019)

கடைசி தொடர்பு:19:20 (23/04/2019)

ராகுல் காந்தி என்ட்ரி! - வயநாட்டில் அதிகரித்த வாக்குப் பதிவு எண்ணிக்கை

ராகுல் காந்தி போட்டியிடுவதால், வயநாட்டில் வாக்குப் பதிவு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

வயநாடு

நாடாளுமன்றத் தேர்தலுக்கான, மூன்றாவது கட்ட வாக்குப் பதிவு நாடு முழுவதும் நடந்து வருகிறது. கேரளாவில் 20 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், பி.ஜே.பி என்று மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. ஆனாலும். கம்யூனிஸ்ட்கள் மற்றும் காங்கிரஸ் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

குறிப்பாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். இதனால், வயநாடு மட்டுமல்லாமல் கேரளா முழுவதுமே காங்கிரஸார் உற்சாகமடைந்துள்ளனர். அதேபோல, பொதுமக்களும் காலை வாக்குப் பதிவு தொடங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு இருந்தே, வரிசையில் நின்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர். ராகுலை எதிர்த்து, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சுனீர், பி.ஜே.பி கூட்டணியில் துஷார் வெள்ளப்பள்ளி போட்டியிடுகிறார். கோவையைச் சேர்ந்த ராகுல் காந்தி என்பவரும் வயநாட்டில் சுயேச்சையாக களமிறங்குகிறார்.

வயநாடு

இதனிடையே, மூப்பநாடு பஞ்சாயத்துக்குட்பட்ட, சி.எம்.எஸ் மேல்நிலைப்பள்ளியில் உள்ள ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு இருப்பதாகப் புகார் எழுந்தது. இரண்டு முறை பொத்தானை அழுத்தியும், வாக்கு பதிவாகாததால், அங்கு மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு துஷார் வெள்ளப்பள்ளி கோரிக்கை விடுத்துள்ளார்.

5 மணி நிலவரப்படி, கேரளாவில் அதிகபட்சமாக கண்ணூர் 75 சதவிகிதமும், வயநாட்டில் 73 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. கல்பெட்டா தொகுதியில் மதியத்துக்குப் பிறகு வாக்குப்பதிவு சற்று தொய்வடைந்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வயநாட்டில் 73 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்த ஆண்டு 85 சதவிகிதம் வாக்குப் பதிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், தற்போது வயநாட்டில் மழை பெய்து வருவதால் எதிர்பார்த்த வாக்குப்பதிவு குறையவும் வாய்ப்புள்ளது.