தெற்கு, வடக்கு இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பார் ராகுல்..? | Rahul Gandhi's choice over South and North constituencies

வெளியிடப்பட்ட நேரம்: 21:18 (23/04/2019)

கடைசி தொடர்பு:21:53 (23/04/2019)

தெற்கு, வடக்கு இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பார் ராகுல்..?

தெற்கு, வடக்கு இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பார் ராகுல்..?

2014 மே 16...  காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வரலாற்றில் ஒரு மறக்க முடியாத நாள். பி.ஜே.பி தங்களின் கனவுகளில் ஒன்றாக சொல்லிக்கொள்ளும் ‘காங்கிரஸ் இல்லாத இந்தியா'வை உருவாக்கிவிட முடியும் என்ற நம்பிக்கை அந்தக் கட்சிக்குப் பிறந்த நாளும்கூட எனலாம். இந்தியாவின் விடுதலைக்குக் காரணமாக இருந்து, 125 ஆண்டுக்கால அரசியல் பின்புலம் மிகுந்த கட்சியால், கடந்த மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைக்கூட எட்ட முடியாமல்போன நாள். இந்தியாவில் இதுவரை நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தல்களிலேயே அதிகமான வாக்கு சதவிகிதம் பதிவான தேர்தலும் அந்தத் தேர்தல்தான். இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலைக் காங்கிரஸ் கட்சி, ராகுல்காந்தி தலைமையில் முதல்முறையாகச் சந்திக்கிறது.

ராகுல் காந்தி

இன்றைய அரசியல் சூழலோடு ஒப்பிடுகையில் கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சந்தித்த தோல்வி, ஒருவகையில் ராகுல் காந்திக்கே நன்மையாக முடிந்துள்ளது எனலாம். 2014-ம் ஆண்டுவரையிலான காலகட்டத்தில் காங்கிரஸ் மீது எழுந்த அதிகப்படியான ஊழல் குற்றச்சாட்டுகள் பூதாகரமாகின. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் பி.ஜே.பி ஆட்சியில் அது கொஞ்சம் குறைந்துள்ளதாகக் கருதலாம். இதுதான் காங்கிரஸ் கட்சிக்கான வாய்ப்புகளை மீண்டும் ஏற்படுத்தித் தருமா என்ற நிலையை உருவாக்கியுள்ளது.

தோல்வி நல்லதே!

மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரக் களத்தில் பி.ஜே.பி அரசுக்கு எதிராகக் காங்கிரஸ் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் என்றால் நீட், ஜி.எஸ்.டி போன்றவையாகும். ஆனால், அந்த இரு திட்டங்களுமே காங்கிரஸ் ஆட்சியின்போது முன்மொழியப்பட்டு நிறைவேற்ற முடியாமல்போன திட்டங்கள்தான். ஒருவேளை காங்கிரஸ் கட்சி, கடந்த தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று பெரும்பான்மையான இடங்களைப் பெற்றிருந்தால் அந்தத் திட்டங்களை எல்லாம் காங்கிரஸ் அரசும் செயல்படுத்தி இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அப்படி நடந்திருந்தால் காலம், இந்தத் தேர்தலின்போது ராகுலை மோடியின் இடத்திலும் மோடியை ராகுலின் இடத்திலும் நிறுத்தியிருக்கும்.

ராகுல் காந்தி

2011-ம் ஆண்டிலேயே மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு, ஜி.எஸ்.டி-யைக் கொண்டுவருவதற்கான சட்டத்திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தியது. பி.ஜே.பி உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்பால் அப்போது அவை நிறைவேறாமல் போனது. அவற்றிலும் குறிப்பாக அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, அந்தச் சட்டத்திருத்தத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அன்றைய குஜராத் நிதித்துறை அமைச்சர் சௌரவ் படேல், “மன்மோகன் சிங் அரசு மட்டும் ஜி.எஸ்.டி-யை அறிமுகப்படுத்தினால், குஜராத் மாநிலத்துக்கு மட்டும் ஆண்டுக்கு 14,000 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும்” என்று தெரிவித்து, அந்தத் திட்டத்தைப் புறக்கணித்தார்.

ஆனால், காலங்கள் ஓடின. எதிர்ப்பு தெரிவித்த மோடியின் அரசால் மீண்டும் அதே ஜி.எஸ்.டி வரிவிதிப்பு நிறைவேற்றப்பட்டது. இதனால் இந்தியா முழுமைக்கும் பல்லாயிரக்கணக்கான சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. தற்போது தேர்தல் பிரசாரத்தின்போது, பி.ஜே.பி-க்கு எதிராக ஜி.எஸ்.டி மற்றும் நீட் தேர்வு அமல் ஆகியவற்றைக் காங்கிரஸ் பயன்படுத்தினாலும், தங்களுடைய தேர்தல் அறிக்கையில் இப்போதுள்ள ஜி.எஸ்.டி வரிவிதிப்பில் மாற்றம் கொண்டுவந்து புதிய ஜி.எஸ்.டி-யை அறிமுகப்படுத்துவோம் எனக் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. அதுவே, கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றிருந்தால் மோடியின் இப்போதைய முகத்தை ராகுலுக்குத் தந்திருக்கும்.

தெற்கின் குறியீடு:

இந்தியாவின் பிரதமர்களைத் தீர்மானிக்கும் மாநிலமாகத் தொடர்ந்து திகழ்ந்து வருகிறது உத்தரப்பிரதேசம். பெரும்பாலான இந்தியப் பிரதமர்கள் உத்தரப்பிரதேசத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டவர்கள்தாம். கடந்த மக்களவைத் தேர்தலில் மோடி, உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி மற்றும் தன்னுடைய சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள வதோரா ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். எனினும் தன் வளர்ச்சிக்குக் காரணமான குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா தொகுதியை அவர் பின்னர் ராஜினாமா செய்தார்.

ராகுல் காந்தி

1979-ம் ஆண்டு நடைபெற்ற தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் இந்திரா காந்தி போட்டியிட உள்ளதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், அது நடைபெறாமல் போனது. தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் சிவகங்கை தொகுதிக்கான வேட்பாளர், முதல் பட்டியலில் அறிவிக்கப்படாததால் ராகுல் காந்தி அந்தத் தொகுதியில் போட்டியிடலாம் என்று முதலில் யூகங்கள் அடிப்படையில் செய்திகள் வெளியாகின. ஆனால், கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் களம் காண்கிறார் ராகுல் என்ற செய்திகளும் பரவின. அந்தச் செய்திகள் புரளி எனப் புறந்தள்ளும் வேளையில் வடக்கில் அமேதி, தெற்கில் வயநாடு என இரு தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அரசியல் வியூகம் வகுத்துக் களமிறங்கியுள்ளார் ராகுல் காந்தி.

அதிகபட்சமாக சிக்மகளூரை விட்டுக் கீழிறங்காத நேரு குடும்பத்தினர் வயநாடுவரை வந்து போட்டியிட்டிருப்பது, வெறும் தொகுதி மாற்றமாக மட்டும் பார்க்க முடியவில்லை. இது சித்தாந்தரீதியான மாற்றமும்கூட. தெற்கு என்பது எப்போதும் ஆதிக்க எதிர்ப்பின் குறியீடு. ஏற்கெனவே பி.ஜே.பி, தெற்கில் கால்பதிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கையில், ராகுல் தென் மாநிலமான கேரளாவில் வயநாட்டைத் தேர்வு செய்து களம் இறங்கியிருப்பது, நல்ல அரசியல் நகர்வு என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

தேனி பிரசாரத்தில் ராகுல் காந்தி

சமீபத்தில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதுபோல, “பரிணாம வளர்ச்சியில் எல்லாக் கட்சியிலும் நிகழ்வதுபோல காங்கிரஸின் கொள்கையிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இப்போது காங்கிரஸ் மாநில உரிமைகளையும் அதிகமாகப் பேச ஆரம்பித்திருக்கிறது” என்றார். சென்னை தியாகராய நகரில் தந்தை பெரியார் தன்னுடைய இறுதியான பேருரையில் 'இந்தியாவில் ஒழிய வேண்டும்' எனப் பட்டியலிட்ட ஐந்தில் ஒன்று காங்கிரஸ். ஆனால், இன்று ராகுல் காந்தி பெரியாரைப் பேச ஆரம்பித்திருக்கிறார். தேனியில் நடந்த பொதுக்கூட்டத்தில் “மோடிக்குப் பெரியாரின் புத்தகத்தைப் பரிசளிப்பேன்” என ராகுல் காந்தி பேசியது பிரபலமடைந்தது.

ஆனாலும், நடைமுறையில் தெற்கிலிருந்து ஒரு பிரதமர் உருவாவதற்கான வாய்ப்புகள் குறைவுதான். ஏனெனில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தமட்டில்  உத்தரப்பிரதேசம் கேரளாவைவிட நான்கு மடங்கு பெரிய மாநிலம். எனவே, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தாலும், வயநாட்டில் ராகுல் வெற்றி பெற்றாலும் தெற்கிலிருந்து பிரதமர் என்பது கேள்விக்குறிதான்.

இந்தத் தேர்தலில் வெற்றியோ, தோல்வியோ இரண்டுமே தனிப்பட்ட முறையில் ராகுலுக்கு நல்லதுதான். ஏனெனில் ஓட வேண்டிய தூரமும் காலமும் இன்னும் ராகுலுக்கு நிறையவே இருக்கின்றன. ஆனால், “தேசியவாதமும் வகுப்புவாதமும் சேர்ந்து வாழ முடியாது” என்ற நேருவின் வாதத்தை ராகுல் உணர்தல் வேண்டும்.


டிரெண்டிங் @ விகடன்