`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்!' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி | 2 youths thrash out of Kerala - Bengaluru private bus

வெளியிடப்பட்ட நேரம்: 20:54 (23/04/2019)

கடைசி தொடர்பு:08:19 (24/04/2019)

`பிரேக் டவுன்; கண்மூடித்தனமான தாக்குதல்!' - தனியார் பேருந்தில் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி

பேருந்து தாமதம்குறித்து கேள்வி எழுப்பியதால், இளைஞர்கள் நடு இரவில் அடித்துத் துன்புறுத்தப்பட்டு கீழே இறக்கிவிடப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

கல்லடா டிராவல்ஸ் பஸ்

திருவனந்தபுரம் - பெங்களூருக்கு, கடந்த சனிக்கிழமை இரவு பயணிகளுடன் கல்லாடா டிராவல்ஸின் சொகுசுப் பேருந்து புறப்பட்டது. பேருந்து ஆலப்புழா அருகே உள்ள ஹரிபாட்டில் இருந்து ஆட்களை ஏற்றிக்கொண்டு கிளம்பிய 10-வது நிமிடத்தில், பிரேக் டவுன் ஆகி நடுவழியில் நின்றுள்ளது. பேருந்து பழுதாகி நேரம் கடந்த பின்னும் அதைச் சரிசெய்வதற்கோ அல்லது மாற்றுப் பேருந்து கொண்டுவருவதற்கோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை. திருவனந்தபுரம் - பெங்களூரு 14 மணி நேரம் பயணம் என்பதால் டென்ஷனான பயணிகள், டிரைவருடன் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால், அதற்குச் சரியான பதில் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. வெகுநேரம்  பேருந்து சரிசெய்யப்படாமல் இருக்க, இதுகுறித்து பேருந்தில் இருந்த சச்சின், அஸ்கர் என்ற இரண்டு இளைஞர்கள் டிரைவரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். இளைஞர்களுக்கும் டிரைவருக்கும் வாக்குவாதம் முற்றவே, பிரச்னை பெரிதாகியுள்ளது. கல்லாடா அலுவலகத்துக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு, அந்த இளைஞர்கள் கடுமையாகப் பேசியுள்ளனர். பின்னர், அங்கு போலீஸ் வந்து பிரச்னைகுறித்துக் கேட்க, தலைமை அலுவலகத்துக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு மாற்றுப் பேருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மூன்று மணி நேரம் தாமதமாக ஹரிபாட்டிலிருந்து பேருந்து கிளம்பியுள்ளது. பின்னர், ஒரு மணி நேரத்தில் கொச்சி வைட்டாலாவுக்கு  செல்ல,  டிரைவருடன் சேர்ந்து சிலர் பேருந்து தாமதம்குறித்து கேள்வி எழுப்பிய அந்த இரு இளைஞர்கள் மீதும் கொடூரமாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.  அதனால்,அந்த இளைஞர்களுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர்களை வலுக்கட்டாயமாகப் பேருந்தில் இருந்து இறக்கிவிட்டுள்ளனர். இதை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து வலைதளங்களில் பதிவிட, பிரச்னை பெரிதாகியுள்ளது. அந்த வீடியோவில், ``1000 ரூபாய் கொடுத்துதான் பயணம் செய்கிறோம். தாமதம் ஆகும் என்பதாலேயே மாற்றுப் பேருந்து கேட்டோம்" என இளைஞர்கள் கூறிக்கொண்டு இருக்கும்போதே அவர்கள் தாக்குதல் நடத்தும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

இளைஞர்கள் தாக்குதல்

வீடியோ வெளியானவுடன், கல்லாடா டிராவல்ஸ் மீது பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். ``பேருந்து பிரேக் டவுன் ஆன இடம் காட்டுப்பகுதி மாதிரி இருந்தது. ஒரு லைட்கூட கிடையாது. சரியான வசதிகள் இல்லை. இதுகுறித்து கேள்வி எழுப்பினோம். ஆனால், டிரைவர் சரியாக பதிலளிக்கவில்லை. மாறாக எங்களைத் திட்டினர். பின்னர்தான் நாங்கள் கடுமையாகப் பேசினோம். வைட்டாலா வந்தபின்பு, எங்கள் இருவரையும் மூன்று நான்கு பேர் சூழ்ந்துகொண்டு அடித்தனர். வலுக்கட்டாயமாகப் பேருந்தைவிட்டு இறக்கினர்.  இறங்கியதும் எங்களை ஒரு பழைய குடோனுக்கு அழைத்துச்சென்றனர். அவர்கள் தாக்குவார்கள் எனத் தெரிந்து, அங்கிருந்து ஓடிவிட்டோம். ஆனாலும், பைக்கில் பின் தொடர்ந்து வந்து பீர் பாட்டில்களைக் கொண்டு எங்களை மீண்டும் தாக்கினர். எங்களைக் கொலை செய்வதாக மிரட்டினர்" எனப் பயம் விலகாமல் பேசியுள்ள சச்சினையும் அக்ஸரையும் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் போலீஸார். 

கல்லடா டிராவல்ஸின் விளக்கம்

இவர்கள் இப்படிக்கூற, ``அந்த இளைஞர்கள்தான் டிரைவர்களை இருமுறை தாக்கினர். ஹரிபாட்டில் வைத்து ஏற்கெனவே தாக்கியவர்கள் வைட்டாலாவிலும் தாக்கினர். இதில், டிரைவர் ஒருவருக்கு மூக்கில் பலத்த காயம்பட்டுள்ளது" என டிராவல்ஸ் தரப்பில் ஃபேஸ்புக்கில் விளக்கம் தரப்பட்டுள்ளது. சம்பவம்குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார்,அந்தப் பேருந்தை பறிமுதல் செய்துள்ளனர். இதற்கிடையே, தாக்குதல் வீடியோ வெளியானது முதல், இதற்கு முன்பும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், அப்போதும் கல்லாடா டிராவல்ஸ் நிறுவனம் இப்படிதான் நடந்துகொண்டதாகவும் பயணிகள் பலர் வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர். இது, கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க