பங்குச் சந்தையில் பாய்ச்சல்... நெருக்கடியிலிருந்து மீளும் வங்கித் துறை! | Banking sector showing 'signs of improvement' in stock market

வெளியிடப்பட்ட நேரம்: 16:29 (24/04/2019)

கடைசி தொடர்பு:16:29 (24/04/2019)

பங்குச் சந்தையில் பாய்ச்சல்... நெருக்கடியிலிருந்து மீளும் வங்கித் துறை!

ஐசியூ-விலிருந்த வங்கித் துறை மெல்ல மூச்சு விடத் தொடங்கி, தற்போது முன்னேற்றத்தை நோக்கிச் செல்கிறது. இதன் எதிரொலியாகத்தான் இந்தியப் பங்குச் சந்தைகளில் வங்கி மற்றும் நிதி சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் விலை, கடந்த வாரம் ஏற்றம் கண்டது.

பங்குச் சந்தையில் பாய்ச்சல்... நெருக்கடியிலிருந்து மீளும் வங்கித் துறை!

வாராக் கடன் அதிகரிப்பு, குறைந்துபோன பணப்புழக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தடுமாறிக்கொண்டிருந்த வங்கித் துறை, சமீப காலமாக நெருக்கடியிலிருந்து சற்று மீண்டு வருகிறது. இதனால், பங்குச் சந்தையில் வங்கி மற்றும் நிதித் துறை பங்குகள் ஏற்றம் கண்டு வருவதோடு, இதன் தாக்கம் 2018-19-ம் நிதியாண்டுக்கான நான்காவது காலாண்டு முடிவுகளிலும் வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

வாராக் கடன் பிரச்னைகளாலும், நிதி மோசடிகளாலும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்த 12 பொதுத் துறை வங்கிகளின் மேம்பாட்டுக்காக 48,239 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க, கடந்த பிப்ரவரி 20-ம் தேதி மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதில் அதிகபட்சமாக கார்ப்பரேஷன் வங்கிக்கு ரூ.9,086 கோடியும், அலகாபாத் வங்கிக்கு ரூ.6,896 கோடியும், பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ.5,908 கோடியும், பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு ரூ.4,638 கோடியும், யூனியன் வங்கிக்கு ரூ.4,442 கோடியும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரூ.3,806 கோடியும், யூகோ வங்கிக்கு ரூ.3,330 கோடியும், ஆந்திரா வங்கிக்கு ரூ.3,256 கோடியும், யுனைட்டட் வங்கிக்கு ரூ.2,839 கோடியும், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு ரூ.2,560 கோடியும், சிண்டிகேட் வங்கிக்கு 1,603 கோடியும், பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவுக்கு ரூ.205 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கூடவே வங்கி அல்லாத நிதி நிறுவனங்களிடையேயும் பணப்புழக்கம் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 

பொதுத் துறை வங்கிகள்

பங்குச் சந்தையில் பாய்ச்சல்

இதன் காரணமாக ஐசியூ-விலிருந்த வங்கித் துறை மெல்ல மூச்சு விடத் தொடங்கி, தற்போது முன்னேற்றத்தை நோக்கிச் செல்கிறது. இதன் எதிரொலியாகத்தான் இந்தியப் பங்குச் சந்தைகளில் வங்கி மற்றும் நிதி சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் விலை, கடந்த வாரம் ஏற்றம் கண்டது. கடந்த செவ்வாய்க்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 370 புள்ளிகள் உயர்வுடன் 39276 ஆகவும், தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 97 புள்ளிகள் உயர்வுடன் 11,787 ஆகவும் புதிய உச்சத்தை எட்டின. இது இந்த மாதத்தின் தொடக்கத்தில் காணப்பட்ட ஏற்றத்தைக் காட்டிலும் அதிகமாகும்.

இந்த ஏற்றத்துக்கு ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி மற்றும் ஹெச்.டி.எஃப்.சி வங்கி போன்ற முன்னணி தனியார் வங்கிகள் முக்கியக் காரணமாக அமைந்தன. அன்றைய தினம் இண்டஸ்இண்ட் வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிப் பங்குகளின் விலை தலா 4 சதவிகிதம் ஏற்றம் கண்டன. அதேபோன்று ஹெச்.டி.எஃப்.சி வங்கிப் பங்கின் விலை 1 சதவிகிதம் ஏற்றம் கண்டது. இந்த மூன்று வங்கிகளும் சென்செக்ஸ் புள்ளிகளின் ஏற்றத்துக்கு 163 புள்ளிகளை தங்களது பங்களிப்பாக அளித்தன. 

பங்குச் சந்தை

மேலும் வங்கிப் பங்குகளின் ஏற்றம், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டியை ஒரு புதிய உச்சத்தைத் தொட வைத்ததோடு, அதன் ஏற்றத்தில் 36 சதவிகித பங்களிப்பைக் கொண்டிருந்தது. கடந்த வாரம், இண்டெக்ஸைப் புதிய உச்சத்துக்குத் தள்ளிய 10 பங்குகளில் 7 பங்குகள் வங்கிப் பங்குகளாகும்.  

கடன் வளர்ச்சி விகிதத்தில் முன்னேற்றம் 

வங்கித் துறையின் இந்த முன்னேற்றத்துக்கு, அதன் கடன் வளர்ச்சி விகிதம் அதிகரித்ததும் அதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாக உள்ளது. 2018 - 19-ம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில், வங்கிகளின் கடன் வளர்ச்சி விகிதம் 14 சதவிகித்தை நெருங்கிக் கொண்டிருப்பதாக ரிசர்வ் வங்கி தகவல் தெரிவிக்கிறது. இது, ஏறக்குறைய மூன்றாவது காலாண்டின் வளர்ச்சி விகிதத்துக்கு ஈடானதாகும். இதே நிதியாண்டின் இரண்டாவது மற்றும் முதலாவது காலாண்டில், கடன் வளர்ச்சி விகிதம் சுமார் 12 சதவிகிதமாக இருந்தது. 

பங்குச்சந்தை

நான்காம் காலாண்டின் கடன் வளர்ச்சி விகித வளர்ச்சிக்கு, சில்லறைப் பிரிவு கடன் வளர்ச்சி முக்கிய காரணமாக அமைந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாத இறுதி வரை சில்லறைப் பிரிவு கடன் வளர்ச்சி, 25.9 சதவிகிதத்தை எட்டியுள்ளது. அதே சமயம் தொழில் துறைக்கான கடன் வழங்கல் 250 அடிப்படை புள்ளிகள் குறைந்து, 33.2 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. அதேபோன்று வாகன விற்பனையும் நான்காவது காலாண்டில் பெருமளவு குறைந்ததால், அதன் தாக்கம் வாகன கடன் வளர்ச்சி விகிதத்திலும் எதிரொலித்துள்ளது. வாகன கடன்களைப் பெரும்பாலும் தனியார் நிதி நிறுவனங்களே அளிக்கும் நிலையில், அண்மையில் ஏற்பட்ட நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு அவை, கடன் வழங்குவதில் மிகுந்த முன்னெச்சரிக்கை காட்டுவதும் அதன் மந்த நிலைக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. 

தனித்துவம் காட்டும் தனியார் வங்கிகள்

தனியார் வங்கிகள்

சமீபத்திய வங்கித் துறையின் முன்னேற்றத்துக்குத் தனியார் வங்கிகளின் பங்களிப்பும் உள்ளது. நிதி நெருக்கடியில் சிக்கிய பொதுத் துறை வங்கிகளுக்கு மத்திய அரசு சமீபத்தில் அளித்த நிதியுதவி, அவற்றின் வழக்கமான செயல்பாடுகளுக்கும், உரிய மூலதன இருப்பை வைத்துக் கொள்வதற்கும் மட்டுமே உதவியது. ஆனால், பொதுத் துறை வங்கிகளுக்கு மூலதன வளர்ச்சி இன்னும் தேவையாகவே உள்ளது. எனவே தற்போதைய கட்டத்தில் முதலீட்டாளர்கள், பொதுத் துறை வங்கிகளைத் தேடிச் செல்வதைக் காட்டிலும் தனியார் வங்கிகளையே அதிக அளவில் நாடிச் செல்கிறார்கள். இதனால்தான், முதலீட்டு ஆலோசனை நிறுவனங்கள், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் இண்டஸ்இந்த் வங்கி போன்ற முன்னணி தனியார் வங்கி பங்குகளை வாங்க பரிந்துரைத்துள்ளன. 

வங்கித் துறையில் காணப்பட்டுள்ள இந்த முன்னேற்றம், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டு முடிவுகளில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், வரும் நாள்களிலும் பங்குச் சந்தைகளில் ஏற்றம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், முதலீட்டாளர்கள் வங்கிப் பங்குகளில் கவனம் செலுத்தலாம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்