`இது அவருக்கு முதல்முறையல்ல!'- தனி விமானத்தில் வந்து வாக்களித்த கேரள பில்லியனர் | kerala billionaire came from Malaysia for cast his vote

வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (24/04/2019)

கடைசி தொடர்பு:13:50 (24/04/2019)

`இது அவருக்கு முதல்முறையல்ல!'- தனி விமானத்தில் வந்து வாக்களித்த கேரள பில்லியனர்

ஜனநாயக கடமை ஆற்றுவதற்காக தனி விமானத்தில் வந்த கேரள பில்லியனர் யூசுப் அலிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கேரள பில்லியனர் யூசுப் அலி

சாதாரண நபர், கூலித் தொழிலாளி முதல் நடிகர்கள், பில்லியனர் வரை பேதமில்லாமல் பங்கேற்கும் ஒரு நிகழ்வு என்றால் இந்தியாவில் தேர்தல் என்று கூறலாம். இந்தியாவில் தேர்தல் காலம் என்பதால் இந்த நிகழ்வை இப்போது அதிகமாகவே காண முடிகிறது. ஜனநாயகத்தை நிலைநிறுத்த பாகுபாடு இல்லாமல் அனைவரும் தங்களது கடமைகளை நிறைவேற்றி வருகின்றனர். இதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எம்ஏ யூசுப் அலி. பில்லியனர் பிசினஸ்மேன். துபாயைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் லூலூ குரூப்பின் சேர்மன் இவர்தான். கேரளா, மலேசியா, துபாய் உள்ளிட்ட பகுதிகளில் மால் (mall) பிசினஸ் செய்து வருகிறார் இவர். 

யூசுப் அலி

இதற்கிடையே நேற்று கேரளாவில் நடந்த வாக்குப்பதிவில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக மலேசியாவிலிருந்து தனது தனி விமானத்தில் கொச்சி வந்த யூசுப் அலி அங்கிருந்து தனது தனி ஹெலிகாப்டர் மூலம் சொந்த ஊரான திருச்சூர் அருகே நாட்டிகாவுக்கு வந்தார். அங்கு தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் தான் படித்த பள்ளியிலேயே வாக்களித்தார். வாக்களித்த சில மணி நேரங்களில் தனது சொந்த விமானத்திலேயே அபுதாபிக்குச் சென்றார். இவர் இப்படி வாக்களிப்பது இரண்டாவது முறையாகும்.

யூசுப் அலி

தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக தனி விமானத்தில் வந்து சென்ற யூசுப் அலியைக் கேரள மக்கள் பாராட்டி வருகின்றனர். யூசுப் அலி இப்படிச் சொந்த விமானத்தில் கேரளா வருவது முதல்முறையல்ல. கேரளாவில் வெள்ளம் ஏற்பட்ட போதும் தன்னுடைய ஹெலிகாப்டரில் சென்று வெள்ளச் சேதங்களை பார்வையிட்டதுடன், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.18 கோடி அளித்து உதவினார். இதற்கிடையே கேரளாவில் நேற்று காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப் பதிவு நடந்தது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இதன்காரணமாக எந்த ஆண்டும் இல்லாத வகையில் வரலாற்றுச் சாதனையாக கேரளாவில் நேற்று 77 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க