`90 நிமிடத்தில் கணவரைக் கொன்று தடயத்தை அழித்த மனைவி' - ரோஹித் திவாரி வழக்கில் திருப்பம்! | Rohit Tiwar wife killed him and Erased all Proof

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (24/04/2019)

கடைசி தொடர்பு:17:36 (24/04/2019)

`90 நிமிடத்தில் கணவரைக் கொன்று தடயத்தை அழித்த மனைவி' - ரோஹித் திவாரி வழக்கில் திருப்பம்!

உத்தரப்பிரதேசம் மாநில முன்னாள் முதல்வராக இருந்தவர் என்.டி திவாரி. இவரின் மகன் ரோஹித் சேகர் திவாரி மனைவியுடன் டெல்லியில் வசித்துவந்துள்ளார். ஏப்ரல் 11-ம் தேதி நடந்த தேர்தலுக்கு வாக்களிக்க உத்தரகாண்ட் சென்றுவிட்டு 15-ம் தேதி மீண்டும் டெல்லி திரும்பியுள்ளார். அவர் வீட்டுக்கு வந்தபோது மது போதையில் இருந்துள்ளார். 

ரோஹித் திவாரி

பின்னர் மறுநாள் ஏப்ரல் 16-ம் தேதி, ரோஹித்தின் அம்மா உஜ்வாலாவுக்கு ஒரு போன்கால் வந்துள்ளது. அதில் ரோஹித், மூக்கில் ரத்தம் வடிந்தபடி மயங்கிய நிலையில் உள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு ரோஹித்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் என தெரிவித்துள்ளனர். அப்போது அவர் மாரடைப்புக் காரணமாக உயிரிழந்தார் எனக் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து ரோஹித்தின் உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உடற்கூறாய்வு சோதனைக்காக அனுப்பப்பட்டது. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. ரோஹித் திவாரியின் கழுத்து நெறிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மூச்சுத் திணறி உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. 

ரோஹித் திவாரி

இந்தச் சம்பவத்தில் சந்தேகம் அதிகரிக்கவே ரோஹித் வீட்டில் இருந்த 7 சிசிடிவி கேமராக்களையும் கைப்பற்றி காவல்துறையினர் சோதனை செய்தனர். மேலும், அவரின் மனைவி அபூர்வா, அவரது வீட்டில் வேலை செய்த பெண், உறவினர்கள் போன்ற பலரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதில் ரோஹித்துக்கும் அவரின் மனைவிக்கும் இடையே நீண்ட நாள்களாக பிரச்னை நடந்து வருவதால் ஒரே வீட்டில் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். மேலும், சம்பவம் நடந்த அன்று அபூர்வாவிடமிருந்து ரோஹித்துக்கு வீடியோ கால் வந்ததாகவும், ரோஹித்தும் அவரின் மனைவியும் நீண்ட நேரம் சண்டை போட்டுக்கொண்டதாகவும் வீட்டு வேலைக்காரப் பெண் போலீஸில் தெரிவித்துள்ளார். 

ரோஹித் திவாரி

இதன் பின்னர் அபூர்வாவிடம் சுமார் 10 மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அவர் கூறிய பதில்கள் அனைத்தும் முன்னுக்குப் பின் முரணாக இருந்துள்ளன. இதற்கிடையில் ரோஹித் வீட்டில் நடத்தப்பட்ட தடயவியல் சோதனையில் அபூர்வாதான் கொலை செய்தார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பிறகு இதை அவரும் ஒப்புக்கொண்டுள்ளார். 

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய மூத்த காவல் அதிகாரி ராஜிவ் ராஜன், ``தடயவியல் சோதனை மூலம் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் அபூர்வாவை கைது செய்துள்ளோம். ரோஹித்துடன் தனக்கு நடந்த திருமணத்தில் மகிழ்ச்சியில்லாத காரணத்தினால்தான் கணவரைக் கொன்றதாக அவர் ஒப்புக்கொண்டார். ஏப்ரல் 16-ம் தேதி ரோஹித்தின் அறைக்குள் சென்ற அபூர்வா தலையணை வைத்து அழுத்திக் கொலை செய்துள்ளார். பின்னர் கொலை செய்த அனைத்து தடயங்களையும் அழித்துள்ளார். இவை அனைத்தையும் 90 நிமிடங்களில் செய்து முடித்துள்ளார். அபூர்வா மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது'' எனக் கூறியுள்ளார்.