வாடிக்கையாளர்கள் விளம்பர ஏஜென்டா..? பிராண்டு பெயரில் கேரிபேக் விற்க எதிர்ப்பு! | CRO warns mall shop owners in Visakhapatnam for selling shopping bags with brand names

வெளியிடப்பட்ட நேரம்: 20:22 (24/04/2019)

கடைசி தொடர்பு:20:22 (24/04/2019)

வாடிக்கையாளர்கள் விளம்பர ஏஜென்டா..? பிராண்டு பெயரில் கேரிபேக் விற்க எதிர்ப்பு!

பிரபல கடைகள், வர்த்தக நிறுவனங்கள், மால்கள் மற்றும் டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் காகிதப் பைகள் அல்லது கேரிபேக்குகளுக்கு அவற்றின் அளவைப் பொறுத்து 4 ரூபாய் முதல் 10 ரூபாய் வரையும், பிரபல துணிக்கடைகளில் விற்கப்படும் பைகளுக்கு 35 முதல் 40 ரூபாய் வரையும் வசூலிக்கப்படுகிறது.

`பொருள்கள் விற்பனை செய்யும் பிரபல கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகள் போன்றவை, தங்களது நிறுவனத்தின் பெயர் பொறித்த கேரிபேக்கை நுகர்வோருக்கு வழங்கக் கூடாது. இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என நுகர்வோர் உரிமைகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. 

கேரி பேக்

அண்மையில், சண்டிகர் மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ் பிரசாத் ரத்தோரி என்பவர், அவர் வீட்டின் அருகே உள்ள ஒரு `பாட்டா’ ஷோரூமில் ஒரு ஜோடி செருப்பு வாங்கினார். அதன் விலை 399 ரூபாய். ஆனால், அவரிடம் கடைக்காரர்கள் 402 ரூபாய் வசூலித்தனர். அவர் எடுத்துச்செல்ல வசதியாக வழங்கப்படும் கேரிபேக்குக்காக 3 ரூபாய் வசூலிக்கப்படுவதாகக் கடைக்காரர்கள் விளக்கம் அளித்தனர். 

இதை ஏற்றுக்கொள்ள மறுத்த தினேஷ், நுகர்வோர் நீதிமன்றத்தில் `பாட்டா’ நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வாடிக்கையாளர்களைக் கட்டாயப்படுத்தி காகித கேரிபேக் வாங்க வைப்பது சேவை குறைபாட்டைக் காட்டுவதாகவுள்ளது என்று கூறி, நடந்த சம்பவத்துக்காக 1,000 ரூபாய் அபராதம், வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட மன அழுத்தத்துக்கு ஈடாக 3,000 ரூபாய், வழக்கு செலவுக்காக 5,000 ரூபாய் என மொத்தம் 9,000 ரூபாய் அபாராதம் விதித்துத் தீர்ப்பளித்தது. அத்துடன் `பாட்டா நிறுவனம், இனி கேரிபேக்குளை இலவசமாகவே வழங்க வேண்டும்’ என்றும் உத்தரவில் குறிப்பிட்டிருந்தது. 

இது குறித்து தினேஷ் கூறும்போது, ``வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருள்களை எடுத்துச் செல்லும் கேரிபேக்குகளை வழங்க வேண்டியது அந்த நிறுவனத்தின் கடமை. ஆனால், அவர் அதைச் செய்யவில்லை. பணத்துக்காக கேரிபேக்கை விற்பனை செய்தனர். அதுவும் அந்த நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்ட கேரிபேக்கை விற்பனை செய்தனர். அவர் விளம்பரத்தை நாம் காசு கொடுத்து வாங்க வேண்டிய அவசியமில்லை. அதனாலேயே நான் புகார் செய்தேன்" எனத் தெரிவித்திருந்தார். 

பேட்டா ஷோரூம்

இதுகுறித்த செய்தி நாடு முழுவதும் பரவி நுகர்வோர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள பல்வேறு டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள், ஷாப்பிங் மால்கள், மோர் சூப்பர் மார்க்கெட், ரிலையன்ஸ் ஃப்ரெஷ், ஸ்பென்சர்ஸ் ஸ்டோர்ஸ், மேக்ஸ் ரீடெய்ல் ஸ்டோர் மற்றும் ஹோம் சென்டர் உள்ளிட்ட முன்னணி சில்லறை விற்பனைக் கடைகள், தங்களது கடை அல்லது நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்ட காகிதப் பைகள் மற்றும் பேக்குகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவருகின்றன.  

இது தொடர்பாக விசாகப்பட்டினத்தில் அண்மையில் எடுக்கப்பட்ட சர்வே ஒன்றில், நகரில் உள்ள பிரபல கடைகள், வர்த்தக நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மற்றும் டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் காகிதப் பைகள் அல்லது கேரிபேக்குகளுக்கு அவற்றின் அளவைப் பொறுத்து 4 ரூபாய் முதல் 10 ரூபாய் வரையும், பிரபல துணிக்கடைகளில் விற்கப்படும் பைகளுக்கு 35 முதல் 40 ரூபாய் வரையும் வசூலிக்கப்படுவது தெரியவந்தது. அதிலும் ஸ்பென்சர்ஸ் மற்றும் மோர் போன்ற ஸ்டோர்களில் வாடிக்கையாளர்கள் மளிகை உள்ளிட்ட பொருள்களை வாங்குவதால், அவர்களுக்கு மூன்று முதல் நான்கு பைகள் வரை தேவையாக இருப்பதால், அவற்றுக்கும் கூடுதலாக செலவழிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. 

இதையடுத்து இந்த விவகாரத்தைக் கையிலெடுத்துள்ள நுகர்வோர் உரிமைகள் அமைப்பு (Consumer Rights Organaisation), இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம், இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு மனு ஒன்றை அளித்துள்ளது. 

விசாகப்பட்டினம் ஷாப்பிங் மால்

விசாகப்பட்டின மாவட்ட நுகர்வோர் உரிமைகள் அமைப்பின் தலைவர் விகாஸ் பாண்டே இது தொடர்பாகக் கூறுகையில், ``கடைகள், வர்த்தக நிறுவனங்கள், வாடிக்கையாளர்களை விளம்பர ஏஜென்டுகளாகப் பயன்படுத்திக்கொள்வதோடு, அவர்களது செலவிலேயே தங்களது பிராண்டுகள் அல்லது பெயர்களைப் பிரபலப்படுத்துகிறார்கள். 1986-ம் ஆண்டின் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி, ஒரு நிறுவனம் அல்லது கடையின் பெயர் பொறிக்கப்பட்ட கேரிபேக்குகளை விற்பது நியாயமற்ற வர்த்தக நடைமுறை என்பது மட்டுமல்ல, சேவைக்குறைபாடும்கூட. 

எனவேதான், அனைத்து வர்த்தக நிறுவனங்களும் கடைகளும் இந்த நியாயமற்ற வர்த்தக நடைமுறையைக் கைவிட்டு, பொருள்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு எந்தவித பிராண்டு அல்லது நிறுவனப் பெயரும் பொறிக்கப்படாத கேரிபேக்குகளை, கட்டணம் எதுவும் இல்லாமல் வழங்க வேண்டும்" எனத் தெரிவித்தார். 

ஷாப்பிங் மாலில் உள்ள ஆடை விற்பனைக் கடை

விசாகப்பட்டினம், சண்டிகர் உள்ளிட்ட சில இடங்களில் வாடிக்கையாளர்களிடையே ஏற்பட்டுள்ள இந்த விழிப்புணர்வு, நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களிடம் ஏற்படும்பட்சத்தில், இந்தச் சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி ஏற்படும்! 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்