`நான் என்ன சாப்பிடுகிறேனோ அதேதான் அவர்களுக்குக் கொடுக்கிறேன்!'- ஏழைகளுக்குப் பசியாற்றும் `அப்னி ரொட்டி' வேன் | kolkata ngo Operating A Roti-Vending Machine To Feed The Poor

வெளியிடப்பட்ட நேரம்: 18:58 (24/04/2019)

கடைசி தொடர்பு:19:13 (24/04/2019)

`நான் என்ன சாப்பிடுகிறேனோ அதேதான் அவர்களுக்குக் கொடுக்கிறேன்!'- ஏழைகளுக்குப் பசியாற்றும் `அப்னி ரொட்டி' வேன்

பசியால் வாடும் மக்களுக்கு உணவு தயாரித்து வழங்கும் வேன் ஒன்றைச் செயல்படுத்தி மக்களின் பாராட்டைப் பெற்று வருகிறது தனியார் அமைப்பு ஒன்று.

பசி

`ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகள் 2018' என்ற தலைப்பில், கடந்த வருடம் ஆய்வறிக்கை ஒன்று வெளியானது. அதில், பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை 2016-ம் ஆண்டில் 815 மில்லியனாக அதிகரித்துள்ளது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வெளியான சில மாதங்களிலேயே வளர்ந்து வரும் உலக நாடுகளில் உள்ள பட்டினி விகிதத்தின் அடிப்படையில் புதிய அட்டவணையை (Global Hunger Index 2018) சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வுக் கழகம் வெளியிட்டது. 119 நாடுகள் இடம்பெற்றுள்ள அந்தப் பட்டியலில் இந்தியா 103-வது இடத்தில் உள்ளது. இப்படி இந்தியாவில் பட்டினியால் வாடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், சாலையோரங்களில் வசித்து உணவுக்காப் போராடும் மக்களுக்காக உணவு சேவை அளித்து வருகிறது கொல்கத்தாவைச் சேர்ந்த என்ஜிஓ அமைப்பு ஒன்று.

அப்னி ரொட்டி வேன்

சப்பாத்தி தயாரிக்கும் மெஷின் உடன் கூடிய வாகனம் ஒன்றின் மூலம் கொல்கத்தாவில் முக்கிய இடங்களுக்குச் சென்று அங்குள்ள ஏழை மக்களுக்காக உணவு வழங்கி வருகிறது இந்த என்ஜிஓ அமைப்பு. ஒரு நாளைக்கு 2,000 பேர் வீதம் என்ற கணக்கில் சாலையோரங்களில் உள்ள மக்களுக்கு உணவு அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக குர்கானில் உள்ள இன்ஜினீயரிங் கம்பெனி உதவியுடன் இந்த மெஷின் வடிவமைக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் ஜனவரி முதல் ஆரம்பமாகியுள்ளது இந்த சேவை. இதுகுறித்து இந்தியா டைம்ஸ் இணையதளத்துக்குப் பேசிய அந்த தனியார் என்ஜிஓ அமைப்பின் நிறுவனர் விகாஸ் அகர்வால், ``உணவு இல்லாமல் தவிக்கும் மக்களுக்காக நாம் தினமும் எதாவது செய்ய வேண்டும் எனத் தோன்றியது. சும்மா ஏனோ, தானோ என்றில்லாமல் நான் வீட்டில் என்ன உண்கிறேனோ அதுபோல் அவர்களுக்கும் வழங்க வேண்டும் என எண்ணினேன். அப்படி உருவானது இந்த ஐடியா.

அப்னி ரொட்டி வேன்

குர்கானில் உள்ள கம்பெனி உதவியுடன் இந்த ரொட்டி மெஷினுடன் கூடிய வேன் தயாரித்தோம். 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திட்டமிட்டோம். ஆனால், ஜனவரி மாதம்தான் ஆரம்பிக்க முடிந்தது. ஆனால், இந்த மூன்று மாதத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் பசியை ஆற்றியுள்ளோம். இதை நினைக்கும்போது பெருமையாக உள்ளது. இந்த ஒரு வேனைக் கொண்டு எங்களால் ஒரு மாதத்துக்கு 50,000-க்கும் மேற்பட்டோருக்கு உணவு கொடுக்க முடிகிறது என்றால் ஒரு 10 வேன்கள் இதுபோன்று தயாரித்து நாடு முழுவதும் கொண்டு சென்றால் ஆண்டுக்கு 50 லட்சம் மக்களின் பசியைப் போக்கலாம். அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளோம்" எனப் பெருமிதம் பொங்கக் கூறியுள்ளார்.

விகாஸ் அகர்வால்

`அப்னி ரொட்டி' (உங்கள் உணவு) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வேன் வந்து நின்றதும் மக்கள் வரிசையில் நின்று தங்களுக்கான உணவைப் பெற்றுக்கொள்கின்றனர். வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை இதன்மூலம் பயன்பெறுகின்றனர். இதனால் கொல்கத்தாவில் பிரபலமாகி வருகிறது இந்த `அப்னி ரொட்டி' வேன். இந்த நல்ல முயற்சியை எடுத்த அந்த தனியார் என்ஜிஓ அமைப்புக்கு வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 

news credits: indiatimes

நீங்க எப்படி பீல் பண்றீங்க