“இலங்கையில் குண்டுவெடிப்பு... இந்தியா உஷார்!” - எச்சரிக்கும் முன்னாள் சி.பி.ஐ அதிகாரி! | Srilanka serial bomb blasts... Former CBI officer warns India

வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (24/04/2019)

கடைசி தொடர்பு:20:17 (24/04/2019)

“இலங்கையில் குண்டுவெடிப்பு... இந்தியா உஷார்!” - எச்சரிக்கும் முன்னாள் சி.பி.ஐ அதிகாரி!

"இலங்கை எங்கோ ஓர் இடத்தில் இருக்கும் நாடு அல்ல. அது நம் இந்தியாவின் கொள்ளைப்புறத்தில் இருக்கிறது. மடியில் வெடிகுண்டை கட்டிவைத்திருப்பது போன்ற சூழலில் இருக்கிறோம் என்பதை உணர்ந்து மிகுந்த எச்சரிக்கையுடன் நாம் இருக்க வேண்டும்."

“இலங்கையில் குண்டுவெடிப்பு... இந்தியா உஷார்!” - எச்சரிக்கும் முன்னாள் சி.பி.ஐ அதிகாரி!

“நமது புறவாசலில் நிகழ்ந்த ஒரு பயங்கரவாத செயலாக இலங்கைக் குண்டுவெடிப்புச் சம்பவத்தை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில், நம் நாட்டைப் பாதுகாப்பதற்குச் சில முக்கிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்” என்கிறார், முன்னாள் சி.பி.ஐ அதிகாரியான ரகோத்தமன்.  

இலங்கைக் குண்டுவெடிப்பு நிகழ்ந்த பிறகு, இலங்கையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உளவுத்துறை அதிகாரி ஒருவர் தன்னைத் தொடர்புகொண்டு சில முக்கியத் தகவல்களைத் தெரிவித்ததாக நம்மிடம் கூறினார் முன்னாள் சி.பி.ஐ. அதிகாரி ரகோத்தமன். அவற்றை நம்மிடமும் பகிர்ந்துகொண்டார்.

இலங்கை குண்டுவெடிப்பு

“இலங்கையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததற்கு அந்த நாட்டு உளவுத்துறையின் தோல்விதான் முக்கியக் காரணம். புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் உளவு அமைப்புகள் விழிப்புடன் செயல்பட்டுவருகின்றன. ஐ.பி எனப்படும் இந்திய உளவுத்துறை ஓர் இடத்தில் சோதனை நடத்தியபோது, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் பயிற்சி பெற்ற ஓர் இளைஞன் பிடிபட்டிருக்கிறான். அவனிடம் விசாரணை நடத்தியபோது, இலங்கையில் தேவாலயங்களையும் இந்திய தூதரகத்தையும் தாக்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. இலங்கையில் உள்ள ‘தேசிய தவ்ஹீத் ஜமாத்’ (என்.டி.ஜே) என்ற அமைப்பின் பெயரை அந்த இளைஞன் சொல்லியிருக்கான். உடனே, எஸ்.ஐ.எஸ் எனப்படும் இலங்கை அரசின் உளவு அமைப்பிடம் தெரிவித்துவிட்டனர். அவர்களோ, என்.டி.ஜே அமைப்பினரைப் பிடித்து விசாரித்தபோது, தாங்கள் நற்பணிகள் செய்யக்கூடிய அமைப்பு என்று சொல்லியிருக்கிறார்கள். மேலும், அந்த அமைப்பு இதற்கு முன் குண்டுவெடிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டதில்லை. அதனால் அவர்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடமாட்டார்கள் என்று நினைத்து இலங்கை உளவுத்துறையினர் மெத்தனமாக இருந்துவிட்டனர். 

ரகோத்தமன்ராஜீவ்காந்தி படுகொலையிலும் இதேபோலத்தான் நடந்தது. தேர்தல் பிரசாரத்தின்போது ராஜீவ் காந்தியைக் கொல்வதற்கு சதி நடக்கிறது என்று பி.எல்.ஓ தலைவரான மறைந்த யாசர் அராபத் ஒரு தூதரை அனுப்பி இந்திய அரசை எச்சரித்தபோதும், இந்தியா மெத்தனமாக இருந்துவிட்டது. அதை சீரியஸாக எடுத்துக்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தால் ராஜீவ் காந்தியைக் காப்பாற்றியிருக்கலாம். அதுபோன்ற மெத்தனத்தால் இலங்கை இப்போது பாதிக்கப்பட்டிருக்கிறது. 

இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’ தன்னைக் கொல்லப்பார்க்கிறது என்று ஜனாதிபதி மைத்ரிபாலா வெளிப்படையாகவே குற்றம்சாட்டினார். இந்த நிலையில், இந்திய உளவு அமைப்பின் தகவலை ஜனாதிபதி கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பு அமைச்சகமும் உளவு அமைப்பும் நம்பவில்லை. மேலும், தற்போது இலங்கையில் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் சுமுகமான உறவு இல்லை. இப்படியொரு தகவல் இந்தியாவிடமிருந்து வந்தது என்கிற விஷயமே தமக்குத் தெரியாது என்று பிரதமர் ரணில் கூறியிருக்கிறார். இதனால்தான் இலங்கை கோட்டைவிட்டிருக்கிறது. இவற்றையெல்லாம் இலங்கை உளவு அமைப்பில் பணியாற்றிய ஓர் அதிகாரிதான் என்னிடம் தெரிவித்தார். 

இலங்கை எங்கோ ஓர் இடத்தில் இருக்கும் நாடு அல்ல. அது நம் இந்தியாவின் கொள்ளைப்புறத்தில் இருக்கிறது. மடியில் வெடிகுண்டை கட்டிவைத்திருப்பது போன்ற சூழலில் இருக்கிறோம் என்பதை உணர்ந்து மிகுந்த எச்சரிக்கையுடன் நாம் இருக்க வேண்டும். இலங்கைக் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில், தமிழ்நாடு, கேரளா உட்பட இந்தியாவிலிருந்து சுமார் 150 இளைஞர்கள் ஐ.எஸ் அமைப்பால் ஈர்க்கப்பட்டு சென்றிருக்கிறார்கள் என்கிற தகவலை நாம் சீரியஸாகப் பார்க்க வேண்டும்.

நம்முடைய உளவு அமைப்புகளும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் காவல்துறையும் 24 மணி நேரமும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் அச்சுறுத்தல் போன்ற காரணங்களால், ‘என்.சி.டி.சி’ என்கிற தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது ப.சிதம்பரம் கூறினார். அந்த அமைப்பின் மூலம் தேசிய தகவல் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு பயங்கரவாதம் தொடர்பாக அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் அனைத்து மாநிலங்களும் பகிர்ந்துகொள்ளப்படும். ஒரு சிறிய தகவல் கிடைத்தாலும் உடனே விசாரணையில் இறங்கி நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற ஏற்பாடு அது. ஆனால், அந்த ஆலோசனையை மாநில அரசுகள் ஏற்கவில்லை. ப.சிதம்பரத்தின் ஆலோசனைப்படி இப்படியோர் அமைப்பை ஏற்படுத்துவது நாட்டின் பாதுகாப்புக்கு நல்லது” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்