மோடிக்கு எதிரான புகார் திடீர் மாயம்!- புதிய சர்ச்சையில் தேர்தல் ஆணையம் | the case details against modi was missed from site

வெளியிடப்பட்ட நேரம்: 11:55 (25/04/2019)

கடைசி தொடர்பு:11:55 (25/04/2019)

மோடிக்கு எதிரான புகார் திடீர் மாயம்!- புதிய சர்ச்சையில் தேர்தல் ஆணையம்

இந்தியாவில் தேர்தல் களம் கோடை வெயிலைக் காட்டிலும் சூடாக இருக்கிறது. 3 கட்ட தேர்தல்கள் முடிந்துவிட்டன. 4 -ம் கட்ட தேர்தலுக்காக நாடு தயாராகி வருகிறது. தேர்தல் நடக்க இருக்கும் பகுதிகளில் பிரசாரம் உச்சகட்டத்தில் நடைபெற்று வருகிறது. இதன் நடுவே தேர்தல் தொடர்பான சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமல் நகர்ந்துகொண்டு இருக்கிறது மக்களவைத் தேர்தல்.

மோடி

தற்போது புது சர்ச்சையாகத் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பிரதமர் மோடி மீது பதியப்பட்ட வழக்கு தொடர்பான தகவல்கள் தேர்தல் ஆணையத்தின் இணையப் பக்கத்திலிருந்து மாயமாகி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

மகாராஷ்ட்ராவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் மோடி பேசும்போது,  ``புல்வாமா தாக்குதலில் பலியானவர்களுக்கும் பால்கோட் தாக்குதல் நடத்திய வீரர்களுக்கும் உங்களின் வாக்குகளை அர்ப்பணியுங்கள்” என்று பேசினார். தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில் இந்தப் பேச்சு அந்த விதிமுறைகளை மீறுவதாக உள்ளது என கொல்கத்தாவைச் சேர்ந்த மகேந்தர சிங் என்பவர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். 

இது தொடர்பாக மகாராஷ்ட்ரா மாநில தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டுள்ளது தலைமை தேர்தல் ஆணையம். இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில்தான் அளித்த புகாரின் நிலை குறித்து தெரிந்துகொள்வதற்காகத் தேடியுள்ளார். அப்போது அந்த வழக்கு தீர்க்கப்பட்டுவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் கேட்டபோது, ``வழக்கு விவரங்கள் தேர்தல் ஆணையத்தின் தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பதற்குப் பதிலாக தீர்க்கப்பட்டுவிட்டது எனப் பதிவாகியுள்ளது. இதற்குத் தொழில்நுட்ப கோளாறுதான் காரணம். மகாராஷ்ட்ரா தேர்தல் அதிகாரிகளிடம் இது தொடர்பாக விளக்கம், கேட்கப்பட்டுள்ளது. அவரது விளக்கம் வந்த பின்னர் மேற்கொண்டு விசாரணை நடைபெறும்” என்றனர். 

தேர்தல் ஆணையம்

எனினும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து இரண்டு வார காலம் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இடையில் மோடி தனது பிரசாரத்தில் மேலும் சில முறை புல்வாமா மற்றும் பால்கோட் தாக்குதல் குறித்துப் பேசியுள்ளார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. தேர்தல் விதிமுறைகள் மீறப்படுவது தொடர்பாக இதுவரை அந்த இணையத்தில் 426 புகார்கள் பதியப்பட்டுள்ளன. தற்போது அந்தப் புகார்கள் அனைவரும் பார்க்கும் படியான ஏற்பாடுகளைத் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. இதில் மோடி மீதான புகார் முழுமையாக விசாரணை முடியாத நிலையில் தீர்க்கப்பட்டுள்ளதாக பதிவிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.