அஸ்ஸாம் தேர்தலில் ஆணாக வாக்களிக்க நிர்பந்திக்கப்பட்ட திருநங்கை நீதிபதி ! | Transgender judge forced to vote as a male voter in assam

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (25/04/2019)

கடைசி தொடர்பு:17:20 (25/04/2019)

அஸ்ஸாம் தேர்தலில் ஆணாக வாக்களிக்க நிர்பந்திக்கப்பட்ட திருநங்கை நீதிபதி !

இந்தியாவில் திருநங்கைகளுக்கான உரிமைகள் கோரி தினம் ஒரு போராட்டம் நடந்துகொண்டே இருக்கின்றது. தமிழகத்தில் ஓரளவுக்கு திருநங்கைகளுக்கான வாழ்வியலில் சில முன்னேற்றங்கள் இருக்கின்றன. அவர்களுக்காகக் குரல் கொடுக்க அமைப்புகளும், மாநில அரசின் நலத் திட்டங்களும் என அவர்களின் முன்னேற்றத்துக்கு, ஒரு சமூகமாக நாம் ஒரு சில அடிகளாவது எடுத்து வைத்தாகிவிட்டது. ஆனால், இந்தியாவின் பல மாநிலங்களில், இன்னும் அவர்களைப் புறக்கணிக்கும் நிலையே நீடிக்கிறது. அஸ்ஸாமில் திருநங்கை ஸ்வாதி, நாடாளுமன்றத் தேர்தலில் அப்படி ஒரு பிரச்னையை சந்தித்திருக்கிறார்.

திருநங்கை

எத்தனை காழ்ப்புணர்வுகள் இருந்த போதிலும், திருநங்கைகள் உச்சம் தொட்டுக்கொண்டிருக்கிறார்கள், பல சாதனைகளை நிகழ்த்தி இந்தியாவின் கவனத்தை தன் பக்கம் திருப்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் 17-வது நாடாளுமன்றத் தேர்தலிலும், திருநங்கை வாக்காளர்கள், திருநங்கை வேட்பாளர்கள் என்று அவர்களின் உரிமையை நிலைநிறுத்தப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்த நிலையில், தேர்தல் ஆணையம் மீண்டும் சறுக்கியிருக்கிறது.

அஸ்ஸாமின் முதல் திருநங்கை நீதிபதியான ஸ்வாதி பிதான் பரூவா, ஆண் என்ற அடையாள வகைப்பாட்டில்தான் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அஸ்ஸாமில் லோக் அதாலத், சமரச தீர்ப்பாயத்தின் நீதிபதியான ஸ்வாதி, மூன்று கட்டங்களில் நடைபெற்ற அஸ்ஸாமின் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கச் சென்றபோது, அவருடைய பெயர், திருநங்கை வாக்காளர் பட்டியலில் இல்லாமல், ஆண் வாக்காளர் பட்டியலில் இருந்திருக்கிறது. இதையடுத்து ஸ்வாதி, வாக்காளர் பட்டியலில் தன்னுடைய பாலினத்தை மாற்ற முயற்சி செய்து தேர்தல் ஆணையத்தை அணுகியிருக்கிறார். ஆனால், அவரை பொதுத் தேர்தல் முடிந்ததும் வாக்களிக்க வருமாறு அவர்கள் பணித்திருக்கிறார்கள். இதனால் வேறு வழியின்றி ஆண் என்ற அடையாளத்திலேயே வாக்களித்துத் திரும்பியிருக்கிறார்.

திருநங்கை

அஸ்ஸாமில் 491 திருநங்கை வாக்காளர்களில், 24 பேர் மட்டுமே வாக்களித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அஸ்ஸாமில் மட்டும் 11,000 திருநங்கைகளுக்கு மேல் இருக்கிறார்கள். அஸ்ஸாமில் திருநங்கைகளின் நிலை குறித்து நம்மிடம் பேசிய ஸ்வாதி ``குறைவான திருநங்கைகள் வாக்களிப்பதற்கு, அவர்கள் பற்றிய புரிதல் மக்களுக்கு இல்லாமல் இருப்பதும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்து விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதும் தான். அஸ்ஸாம் மாநிலத்தில் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்காக எந்த நலத் திட்டமும், அமைப்பும் இல்லை என்ற காரணத்தினால்தான், எங்கள் உரிமைகளைப் பெறுவதற்கு பெரும் போராட்டங்கள் செய்யவேண்டியிருக்கிறது" என்கிறார். ஸ்வாதி மட்டுமல்லாமல், இன்னும் பல திருநங்கைகள், அவர்களுடைய அடையாளங்களைத் தவிர்த்தே அஸ்ஸாம் தேர்தலில் வாக்களித்திருக்கிறார்கள்.

திருநங்கை

இதுகுறித்து சில தனியார் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்த அஸ்ஸாம் தேர்தல் ஆணையர் முகேஷ் சாஹு, ``வாக்காளர் பட்டியலில் பாலினம் மாற்றும் கோரிக்கையோடு என்னை யாரும் சந்திக்கவில்லை. ஆனால் அப்படி மாற்ற விரும்புவோர், நேரிலோ, ஆன்லைனிலோ அதற்குரிய விண்ணப்பங்கள் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் " என்று கூறியிருக்கிறார். 

வாக்களிப்பது உங்கள் கடமை என்று பிரசாரம் மேற்கொள்ளும் தேர்தல் ஆணையம், தன்னுடைய கடமையை பிழையில்லாமல் செய்தால் மேலும் சிறப்பாக இருக்கும்.