`மேற்குவங்க பாரம்பர்ய வரவேற்பு இருக்கும்; ஆனால்... ஒரு ஓட்டு கூட எதிர்பார்க்காதீங்க !' - மோடிக்கு மம்தா பதில் | All for traditional Bengali welcome, but don't expect votes: Mamata tells PM Modi

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (25/04/2019)

கடைசி தொடர்பு:17:40 (25/04/2019)

`மேற்குவங்க பாரம்பர்ய வரவேற்பு இருக்கும்; ஆனால்... ஒரு ஓட்டு கூட எதிர்பார்க்காதீங்க !' - மோடிக்கு மம்தா பதில்

மோடி -மம்தா

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் பிரதமர் மோடியை நேர்காணல் செய்த வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். ஏ.என்.ஐ ஊடகத்துக்குப் பிரதமர் அளித்த அந்தப் பேட்டியில் அரசியல் அல்லாத பல கேள்விகளுக்கு மோடி பதில் அளிந்திருந்தார். அப்போது மம்தா குறித்த கேள்விக்குப் பதிலளித்த மோடி, `நான் பெங்காலி இனிப்புகளை விரும்பிச் சாப்பிடுவேன் என்று தீதிக்கு (மம்தா பானர்ஜி) தெரியும். அதனால், ஒவ்வோர் ஆண்டும் தீதியிடமிருந்து எனக்கு பெங்காலி இனிப்புகளும் அழகிய குர்தா செட்டுகளும் பரிசாக வந்துவிடும். எனக்கான குர்தா செட்டுகளை கூடத் தீதியே தேர்வு செய்து அனுப்பி வைப்பார்'' என்று நெகிழ்ந்திருந்தார்.

மம்தா

மோடியின் இந்த நெகிழ்ச்சியான கருத்துக்கு மம்தா பதில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய மம்தா, ``மேற்கு வங்க  பாரம்பர்ய முறைப்படியான வரவேற்பும் தேநீரோடு  இனிப்புகள் வழங்கி மோடி கௌரவிக்கப்படுவார். ஆனால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒரு ஒட்டுக் கூட அவர் எதிர்பார்க்கக் கூடாது'' என்று பதில் கொடுத்துள்ளார். 

அவருடைய இந்தப் பதில் அரசியல் களத்தில் உற்றுநோக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மேற்கு வங்க மாநிலக் காங்கிரஸ் தலைவர் மித்ரா,  பிரதமர் மோடிக்கும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் இடையே ரகசிய (அரசியல்) உடன்பாடு இருப்பதாகக் கூறியுள்ளார். அதேபோன்று மேற்குவங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சூர்யகான்தா மிஷ்ராவும் இந்த விவகாரம் தொடர்பாக மம்தாவை  விமர்சித்திருக்கிறார்.