`இப்படி ஒரு வரவேற்பும் பாராட்டும் கிடைக்கும்னு எதிர்பார்க்கல!' - கத்தாரில் நெகிழ்ந்த `தங்க மங்கை' கோமதி | Qatar tamil people meet Gomathi

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (25/04/2019)

கடைசி தொடர்பு:18:23 (25/04/2019)

`இப்படி ஒரு வரவேற்பும் பாராட்டும் கிடைக்கும்னு எதிர்பார்க்கல!' - கத்தாரில் நெகிழ்ந்த `தங்க மங்கை' கோமதி

தன்னை வாழ்த்த வந்தவர்களோடு பேசிக்கொண்டிருக்கையில், கடந்த மூன்று நாள்களாக வீட்டுச்சாப்பாடான சோறே சாப்பிட முடியவில்லை என்று வருத்தத்தோடு கூறியிருக்கிறார் கோமதி. உடனே செல்வம், சுரேஷ் மற்றும் ரமேஷ் ஆகியோர், தங்களது இல்லத்திற்கே அழைத்து விருந்தளித்து கவுரவித்திருக்கிறார்கள். விருந்துக்கு வந்த கோமதியை, அந்தக் குடும்பத்தினர் தமிழர் கலாசாரப்படி ஆரத்தியெடுத்து வரவேற்க, அவர்களின் அன்பில் திக்குமுக்காடிப்போனார்.

கத்தார் தலைநகர் தோஹாவில் ஆசிய தடகளப் போட்டியில், 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று வரலாற்றுச்சாதனை படைத்த தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவை தமிழக மக்கள் பாராட்டி மகிழ்கிறார்கள். கிராமத்தில் பிறந்து வளர்ந்து, கஷ்டப்பட்டு சாதனை படைத்துள்ள இவருக்கு சமூக வலைதளங்களிலும் பாராட்டுகள் குவிந்தவண்ணம் இருக்கின்றன.

கோமதி

இந்தப் பாராட்டுகள் ஒருபுறம் என்றால், கத்தாரிலுள்ள பல்வேறு தமிழ் அமைப்புகளும் அவருக்கு பாராட்டு விழா எடுக்க முயற்சி செய்தார்கள். ஆனால், கால அவகாசம் குறைவு காரணமாக உடனடியாக ஏற்பாடு செய்ய முடியாததால், தங்க மங்கையை நேரில் சந்தித்து வாழ்த்துவதற்காக அவர் தங்கியிருந்த ஹோட்டல் ஹாலிடே வில்லாவில் தமிழர்கள் குவியத் தொடங்கினார்கள். குடும்பமாகவும், நண்பர்கள் சகிதமாகவும் திருவிழா போல தமிழர்கள் படையெடுக்கவும் அவரது சந்திப்புக்காகவே ஒரு பிரத்யேக அறையை ஹோட்டல் நிர்வாகத்தினர் ஒதுக்கித் தந்தனர்.

கோமதி

கத்தார் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், தங்க மங்கையைச் சந்தித்து பல்வேறு பரிசுப்பொருள்களை அளித்துப் பாராட்டினார்கள். அவருக்கு தங்க பிரேஸ்லெட் ஒன்றும் ஓர் அமைப்பின் சார்பாக அன்பளிப்பாக வழங்கப்பட்டிருக்கிறது. தன்னை வாழ்த்த வந்தவர்களோடு பேசிக்கொண்டிருக்கையில், `கடந்த மூன்று நாள்களாக வீட்டுச் சாப்பாடான சோறே சாப்பிட முடியவில்லை' என்று வருத்தத்தோடு கூறியிருக்கிறார் கோமதி. உடனே செல்வம், சுரேஷ் மற்றும் ரமேஷ் ஆகியோர், தங்களது இல்லத்துக்கே அழைத்து விருந்தளித்து அவரைக் கௌரவித்திருக்கிறார்கள். விருந்துக்கு வந்த கோமதியை, அந்தக் குடும்பத்தினர் தமிழர் கலாசாரப்படி ஆரத்தியெடுத்து வரவேற்க, அவர்களின் அன்பில் திக்குமுக்காடிப்போனார். `நாடு கடந்து வந்த எனக்கு இப்படியொரு வரவேற்பும், பாராட்டும் குவியுமென்று எதிர்பார்க்கவேயில்லை' என்று நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார் கோமதி.