`புடவை கட்டிக்கொண்டு டான்ஸ்கூட ஆட முடியும்!' - எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்குப் பதிலடி கொடுக்கும் வைரல் பெண்கள் | Viral video of women dancing in sarees

வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (25/04/2019)

கடைசி தொடர்பு:18:30 (25/04/2019)

`புடவை கட்டிக்கொண்டு டான்ஸ்கூட ஆட முடியும்!' - எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்குப் பதிலடி கொடுக்கும் வைரல் பெண்கள்

புடவை எல்லோருக்கும் பிடித்த உடைதான். ஆனால், அதை உடுத்திக்கொள்வதற்குத்தான் பெண்களுக்கு அவ்வளவாகப் பிடிப்பதில்லை. `அதை உடுத்திக்கிட்டு சௌகரியமாக வேலை பார்க்க முடியாது', `வண்டி ஓட்டறது கஷ்டம்', `இடுப்பு தெரியும்' என்று புடவையைக் கட்டாமல் இருப்பதற்கு எல்லாப் பெண்களிடமும் ஒரு நியாயமான காரணம் இருக்கிறது.

ஆனால், வீட்டிலோ ஆஃபீஸிலோ சின்ன விசேஷம் என்றால்கூட பெண்களின் சாய்ஸ் புடவைதான். ஸோ, இன்றைக்குப் புடவை விசேஷ நாள்களுக்கான ஆடையாகிவிட்டது. இந்த நிலையில்தான், இரண்டு பெண்கள் புடவை கட்டியபடி, `ஆப் ஜேசா கோயி மேரி' என்ற இந்திப் பாடலுக்கு டான்ஸ் ஆடியிருக்கிறார்கள். இந்த டான்ஸ் வீடியோதான் தற்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது.  

டான்ஸ்

1980-ல் வெளியான குர்பானி இந்திப் படத்தில் வருகிற இந்தப் பாட்டுக்கு அன்றைய கனவுக்கன்னி  `ஜீனத் அமன்' செம ஸ்டைலிஷ் மூவ்மென்ட்ஸ் கொடுத்திருப்பார். இந்தப் பாட்டுக்கு மற்ற காஸ்ட்யூமுடன் டான்ஸ் ஆடுவதே கஷ்டம் என்கிற நிலையில், புடவையில் செம பெர்ஃபார்மன்ஸ் செய்திருக்கிறார்கள் இந்த இரண்டு பெண்களும். கூடவே, `பெண்கள் நாங்கள் புடவையை மிகவும் நேசிக்கிறோம். உற்சாகமாகவே நாங்கள் புடவை கட்டிக் கொள்கிறோம். விசேஷங்களுக்கு மட்டுமே புடவை கட்டுவதில்லை' என்ற அர்த்தம் வரும் வார்த்தைகளையும் டைப் செய்து, அந்த வீடியோவை புகழ்பெற்ற எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு டேக் செய்திருக்கிறார்கள்.

தஸ்லிமாவுக்கும் இந்தப் புடவை கட்டிய டான்ஸுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா. கடந்த மாதம், தன்னுடைய ட்விட்டரில், `படித்தப் பெண்கள் விசேஷ நாள்களைத் தவிர்த்து, மற்ற நாள்களில் புடவை அணிவதே இல்லை. நான் தினமும் புடவைதான் கட்டுவேன்' என்ற வாசகத்துடன், தன்னுடைய புடவை அணிந்த ஒரு படத்தையும் போஸ்ட் செய்திருந்தார். அவருக்கான பதிலடியாக இந்தப் பெண்கள், தங்கள் டான்ஸ் வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். 

பெண்கள் தினமும் புடவை அணியாமல் இருப்பதற்கான நியாயமான காரணங்களை யாராவது தஸ்லிமா நஸ்ரினுக்கு எடுத்துச்சொன்னால் நன்றாக இருக்கும்.