`உன்னைத் துண்டுதுண்டாக வெட்டிவிடுவேன்!’ - ஓலா கால்டாக்சி டிரைவரால் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை | Bengaluru woman recalls horrific Ola ride

வெளியிடப்பட்ட நேரம்: 18:38 (25/04/2019)

கடைசி தொடர்பு:18:38 (25/04/2019)

`உன்னைத் துண்டுதுண்டாக வெட்டிவிடுவேன்!’ - ஓலா கால்டாக்சி டிரைவரால் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

`நீ எங்கே இருக்கிறாய் என்பது தெரியும்; உன்னைத் துண்டுதுண்டாக வெட்டி எறிந்துவிடுவேன்’ என்று ஓலா கால்டாக்சி டிரைவர் பெண் ஒருவரை மிரட்டியுள்ள சம்பவம் பெங்களூருவில் நடந்திருக்கிறது. 

கால்டாக்சி

பெங்களூரில் இன்ஜினீயராகப் பணிபுரிபவர் அர்ஜிதா பானர்ஜி. இவர் பெங்களூரில் உள்ள நாகாவரா என்ற பகுதியில் பேயிங் கெஸ்ட்டாக தங்கியுள்ளார். வார இறுதிநாள்களைத் தன் அக்காவுடன் செலவிடும் வகையில், கோரமங்கலாவில் உள்ள, தன் அக்கா வீட்டுக்குச் சென்றுள்ளார், இந்நிலையில், கடந்த திங்கள்கிழமைக் காலை, வேலைக்குச் செல்லும் பொருட்டு, ஓலா கால்டாக்சியை புக் செய்துள்ளார். ஓலா டாக்சி புக் செய்யப்பட்ட பின்னர், அர்ஜிதா, டிரைவரிடம், `நீங்கள் இங்கே வந்தவுடன், எனக்கு கால் செய்யுங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், அதற்கு அந்த டிரைவர், `நீங்களே எனக்கு கால் செய்யுங்கள்” எனத் தெரிவித்துள்ளார். அவரது இந்தப் பேச்சு அர்ஜிதாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. டிரைவர் பேசிய முறை அவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. ஏற்கெனவே வேலைக்குச் செல்ல நேரமாகிவிட்டதால், அவரால் வேறொரு கால்டாக்சியைப் புக் செய்ய முடியவில்லை. இதுதொடர்பாக அவர் கூறுகையில், `காலை வேளை என்பதாலும், கால்டாக்சியில் உடன் சில பயணிகள் இருக்கிறார்கள் என்பதாலும் பாதுகாப்பாக இருக்கும் எனக் கருதிதான் பயணத்துக்கு ஒப்புக்கொண்டேன்’ என்றார். காரில் ஏறியதும், கால்டாக்சி டிரைவர், மெதுவாகக் காரை ஓட்டியுள்ளார். அர்ஜிதா மற்றும் உடனிருந்த பயணிகள், வேகமாகச் செல்லுமாறு கூறியுள்ளனர், உடனே மிகுந்த வேகமாகக் காரை ஓட்டியுள்ளார்.

டிரைவர்

இதனால் கடுப்பான பயணிகள் `ஒழுங்காக வண்டியை ஓட்டு’ எனக் கூறியுள்ளனர். பின்னர், ஒருவழியாக அர்ஜிதா இறங்க வேண்டிய இடம் வந்தது. அப்போது, 200 ரூபாய் கொடுக்குமாறு டிரைவர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அர்ஜிதா விவரிக்கும்போது, `70 ரூபாய் தானே கொடுக்க வேண்டும். அதை என் அப்பா ஓலா மணி மூலம் அனுப்பிவிட்டார். மீண்டும் எதற்கு காசை கேட்கிறார் என்றேன். இதோ என் அப்பாவிடம் பேசிக்கொள் என்று கூற, என்னிடமிருந்து போனை பிடிங்கிய அவன், `உன் பெண்ணை துண்டுதுண்டாக வெட்டி வீசிவிடுவேன். ஒழுங்காக நான் கேட்ட காசை தரச்சொல் என்று மிரட்டினான்.

உடனே அக்கம் பக்கமிருந்தவர்களை உதவிக்கு அழைத்தேன் யாரும் வரவில்லை. வேறுவழியின்றி 500 ரூபாய் கொடுத்துவிட்டு, `நீ இனி வண்டியை எப்படி ஓட்டுகிறாய் எனப் பார்கிறேன்’ என்றேன். உடனே அவன், `நீ எங்கே இருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும் உன்னை விடமாட்டேன்” என்று மிரட்டினார். இதுதொடர்பாகக் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு, சம்பந்தபட்ட டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்,