சபரிமலையைத் தொடர்ந்து அடுத்த சர்ச்சை - ஆண்கள் சட்டையுடன் கோயிலுக்குள் செல்லக் கோரிக்கை! | another controversy over entry of men with shirt in ketala temples

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (25/04/2019)

கடைசி தொடர்பு:21:20 (25/04/2019)

சபரிமலையைத் தொடர்ந்து அடுத்த சர்ச்சை - ஆண்கள் சட்டையுடன் கோயிலுக்குள் செல்லக் கோரிக்கை!

கேரள மாநிலம் சபரிமலை கோயிலுக்குள் பெண்களும் செல்ல அனுமதி வழங்கியது தொடர்பான ஐயப்பன் சர்ச்சை சற்று ஓய்ந்திருக்கும் நிலையில், கோயிலுக்குள் ஆண்கள் சட்டை அணிந்துசெல்ல அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. 

சட்டை அணிந்து செல்ல கோரிக்கை - சர்ச்சை

சபரிமலை ஐயப்பனை தரிசிக்க ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், பெண்களும் செல்ல அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதை நிறைவேற்றக் கேரள அரசு முடிவு செய்ததை எதிர்த்து மத அமைப்பினர் போராட்டத்தில் குதித்ததால் கலவரம் வெடித்தது. இந்த விவகாரம் தொடர்பாக போராட்டங்கள், போட்டி ஆர்ப்பாட்டங்கள் என நடைபெற்றதால் கேரள மாநிலம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டது. 

இந்த விவகாரம் தற்போது ஓய்ந்திருக்கும் நிலையில், அடுத்த சர்ச்சையாக கேரளாவில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் ஆண்கள் சட்டை அணிந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்கிற கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. திரிச்சூரைச் சேர்ந்த கே.ஜி.அபிலாஷ் என்பவர் இது தொடர்பாக இரு மாதங்களுக்கு முன்பாகவே தேவசம்போர்டு அதிகாரிகளிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளார். 

கேரளாவில் உள்ள பழைமையும் பாரம்பர்யமும் மிகுந்த கோயில்களின் உள்ளே செல்லும் ஆண்கள் சட்டை உள்ளிட்ட மேலாடை அணிவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. துண்டு மட்டுமே உடலில் போர்த்திக் கொள்ளலாமே தவிர சட்டை அணிந்து உள்ளே செல்ல முடியாது. இந்த நிலையில், கே.ஜி.அபிலாஷ், இந்த நடைமுறையை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார். 

இரு மாதங்களுக்கு முன்பே அவர் மனு அளித்துள்ளபோதிலும், தேவசம்போர்டு அமைச்சரான கடகம்பள்ளி சுரேந்திரன், `எனக்கு இது தொடர்பாக எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அதிகாரிகள் யாரும் இத்தகைய கோரிக்கை வந்தது தொடர்பாக என்னிடம் விவாதிக்கவும் இல்லை’ எனத் தெரிவித்து ஒதுங்கிக்கொண்டார். 

ஆனால், கேரள மாநில அரசு, இது தொடர்பாகப் பதில் அளிக்குமாறு திருவாங்கூர், கொச்சி, மலபார் மற்றும் குருவாயூர் தேவசம்போர்டுகளிடம் விளக்கம் கேட்டுள்ளது. அத்துடன், இந்த நடைமுறையைக் கவனத்துடன் பின்பற்றப்படக்கூடிய பெரும்பாலான கோயில்களின் தந்திரிகளின் கருத்தைக் கேட்டுப் பெறும் முயற்சியிலும் கேரள அரசு இறங்கியுள்ளது. 

சபரிமலை

சபரிமலை சர்ச்சை போலவே இதுவும் தற்போது கேரளா மாநிலம் முழுவதும் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது. இது குறித்துப் பேசிய அகில கேரள தந்திரி சமாஜம் அமைப்பின் பகுதிச் செயலாளரான புடையூர் ஜெயநாராயணன் நம்பூதிரி, ``இது தொடர்பாக கோயில் நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்தினோம். கோயில் நிர்வாகத்தினரைப் பொறுத்தவரையிலும், தற்போது நடைமுறையில் இருக்கும் வழக்கத்தை மாற்றுவது சரியல்ல என்றே சொல்கிறார்கள். 

கோயில் என்பது பொது இடம் கிடையாது. கோயில் என்பதற்கு அடையாளமாகச் சில நடைமுறைகளையும் பழக்க வழக்கங்களையும் கடைப்பிடிக்க வேண்டியதிருக்கிறது. அப்போதுதான் அது கோயிலாக இருக்க முடியும். அதனால் கோயிலின் பாரம்பர்யத்தைக் கைவிட வேண்டும் என எங்களைக் கட்டாயப்படுத்த மாட்டார்கள் என நம்புகிறோம்’’ எனத் தெரிவித்தார்.  

மலபார் தேவசம்போர்டு தலைவரான ஓ.கே.வாசு கூறுகையில், ``தேவசம் போர்டிடம் விளக்கம் கேட்கப்பெற்றது தொடர்பாக இதுவரை எனது கவனத்துக்கு எந்தத் தகவலும் வரவில்லை. இருப்பினும், அரசின் கடிதம் தொடர்பாக மலபார் தேவசம்போர்டு கமிஷனர் உரிய விளக்கம் அளிப்பார்’’ என முடித்துக்கொண்டார். இந்த விவகாரத்தால், சபரிமலை சர்ச்சையைப் போன்று மீண்டும் வில்லங்கம் எற்பட்டுவிடுமோ என்கிற கவலை கேரள அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது.